Tuesday 8 March 2016

‎சூடோமோனஸ்‬ புளோரசன்ஸின் பயன்கள்

சூடோமோனஸ் புளோரசன்ஸ் பயிர்களில் காற்று, மண், நீர் மூலம் பரவும் இலைக்கருகல், இலைப்புள்ளி நோய், குலைநோய், துருநோய், வாடல் நோய் போன்ற நோய்களை கட்டுப்படுத்தும் இயற்கை பூஞ்சான கொல்லியாகும்.
இதனை எல்லா பயிர்களுக்கும் கொடுக்கலாம் குறிப்பாக நெல், தக்காளி கத்தரி, வெண்டை, வெங்காயம், காலிபிளவர், மிளகாய், வெள்ளரி, அவரை, புடலை, பாகல், பழவகைகள் தானியப்பயறுகள், பயறுவகைபயிர்கள், பருத்தி, கடலை,தென்னை போன்ற அனைத்துவகை பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்.
பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்
பயிர்களில் ஏற்படும் தண்டு வாடல், இலைக்கருகல், இலைப்புள்ளி நோய், குலைநோய், அழுகல்நோய்களை கட்டுப்படுத்துகிறது.
பயிர்களுக்கு தேவையான வளர்ச்சிஊக்கிகளை ( ஹார்மோன்கள் ) உற்பத்தி செய்கிறது
பயிர்களின் வேர்களைத் தாக்கும் நூற்புழுக்களை ( நெமட்டோடு) கட்டுப்படுத்துகிறது
நிலத்தில் அளவுக்கு அதிகமாக உள்ள இரும்புச்சத்தை குறைத்து பயிரின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
பயன்படுத்தும் முறை
விதைநேர்த்தி செய்ய
5-10 கிராம் பவுடர் ஒரு கிலோ விதை, ஆறிய அரிசி வடிகஞ்சி 100மில்லி; என்ற விகிதத்தில் கலந்து நிழலில் 1மணி நேரம் உலர்த்தி பிறகு நடவு செய்யலாம்
நாற்று, கிழங்கு,கரணை நேர்த்தி செய்யும் முறை
1 கிலோ பவுடரை 100 லிட்டர் நீரில் கரைத்து அதில் நாற்று, கிழங்கு,கரணை ஆகியவற்றை நனைத்து நடவு செய்யலாம்
தெளிக்கும் முறை
1 கிலோ பவுடரை 100 லிட்டர் நீரில் கரைத்து அவற்றை காலை அல்லது மாலை வேளையில் பயிர்களுக்கு தெளிக்க வேண்டும்
அடியுரமாக
2 கிலோ பவுடர், அரைக்கிலோ நாட்டு சர்க்கரை, 200 கிலோ மக்கிய தொழுவுரம் மூன்றையும் தண்ணீர் தெளித்து நன்றாக கலந்து நிழலில் ஒரு வாரம் அல்லது 4 நாட்கள் கோணிச்சாக்கு அல்லது தென்னை மட்டை கொண்டு காற்று புகாமல் மூடி வைத்திருந்து பிறகு பயிர்களுக்கு எடுத்து போடலாம்.

No comments:

Post a Comment