Tuesday 15 March 2016

மானாவாரியில் மகத்தான விளைச்சல்... நட்டமில்லாத வருமானம் கொடுக்கும் நாட்டுக்கம்பு!

“கிணறு, போர்வெல் என பாசன முறைகள் நவீனமாக மாறினாலும்... பெரும் பகுதி விவசாயம் நடப்பது மானாவாரி நிலங்களில்தான். சோளம், கேழ்வரகு, பனிவரகு, சாமை, தினை எனப் பல பயிர் ரகங்கள் இருந்தாலும், மானாவாரி விவசாயத்தில் நாட்டுக் கம்புக்கு என்றைக்கும் தனியான இடமுண்டு” என்கிறார், விழுப்புரம் மாவட்டம், தென்பேர் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரம்.
உயரமாக, கம்பீரமாகக் காட்சி கொடுத்த நாட்டுக்கம்புக் கதிர்களை பெண்கள் அறுவடை செய்துகொண்டிருக்க... அப்பணிகளை மேற்பார்வை செய்துகொண்டிருந்த சுந்தரத்தைச் சந்தித்தோம்.
வெற்றிக்குப் பாடம் சொல்லிய விவசாயிகள்!
“நான் விவசாயத்துக்கு வந்த காலந்தொட்டு கேழ்வரகு, சோளம், கம்புனு சாகுபடி செய்றேன். எனக்குச் சொந்த ஊர் பாண்டிச்சேரிங்கிறதால ஆரம்பத்துல அங்க இருந்த நிலத்துல இறவைப் பாசனத்துல வீரிய கம்பு ரகங்களை சாகுபடி செய்தேன். ஏக்கருக்கு 20 மூட்டை கம்பு கிடைக்கும். அப்பறம், அங்க இருக்கிற நிலத்தை விற்பனை செய்துட்டு, இங்க வந்து 57 ஏக்கர் நிலம் வாங்கினேன். அதுல, 50 ஏக்கர்ல மா, நெல்லி, சப்போட்டானு பழ மரங்களையும் மர பயன்பாட்டுக்கான மரங்களையும் நடவு செய்திருக்கேன். மீதி 7 ஏக்கர்ல மானாவாரியா விவசாயம் செய்துக்கிட்டிருக்கேன்.
ஆரம்பத்துல இந்த நிலத்துல வீரிய கம்பு ரகங்களைத்தான் சாகுபடி செஞ்சேன். அதுல, விளைச்சல் போதுமான அளவுக்கு இல்லை. அப்பறம் அக்கம்பக்கத்துல இருக்கிற விவசாயிகள்கிட்ட கேட்டப்போ... அவங்க ஆடிப்பட்டத்துல நிலக்கடலை, அல்லது நாட்டுக்கம்பு, கார்த்திகைப் பட்டத்துல காராமணினு சாகுபடி செய்றதா சொன்னாங்க. நானும் அதே மாதிரி சாகுபடி செய்ய ஆரம்பிச்சேன். குறைந்த செலவு, அதிகமான உழைப்பு இல்லாம போதுமான அளவுக்கு வருமானம் கிடைக்க ஆரம்பிச்சது. அதனாலதான் தொடர்ச்சியா 10 வருஷமா நாட்டுக்கம்பு சாகுபடிய செஞ்சிக்கிட்டு இருக்கேன்” என்ற சுந்தரம், வேலையாட்களுக்கு தேநீர் கொடுத்து விட்டுப் பேச ஆரம்பித்தார்.
காராமணிக்கு உரமாகும் கம்புத் தட்டைகள்!
“வீரிய கம்பு ரகங்களுக்கு வறட்சியைத் தாங்கி வளர்ற தன்மை குறைவு. அதே நேரத்துல நாட்டுக்கம்பு நன்செய், புன்செய்னு எல்லா நிலத்திலும் வறட்சியைத் தாங்கி வளரும். ஆடி மாதம் கிடைக்கிற குறைந்த மழையிலயே நல்லா மகசூல் கொடுக்கும். ஆடிப்பட்டத்துல நாட்டுக்கம்பை சாகுபடி செய்றப்போ கிடைக்கிற தட்டைகள் கார்த்திகைப் பட்டத்துல விதைக்கிற காராமணி பயிருக்கு இடுபொருளாகிடும். இதுவும் தொடர்ச்சியா நாட்டுக்கம்பு சாகுபடி செய்றதுக்கு ஒரு காரணம். வீரிய கம்பை விட, அதிகமான அளவுக்கு நாட்டுக் கம்புல நார்ச்சத்து இருக்கு. அதனாலதான் அந்தக் காலத்துல எல்லாரும் கம்பங்கூழ் குடிச்சாங்க. இந்த வருஷம் ஏழு ஏக்கர்ல கம்பு சாகுபடி செய்திருக்கேன்” என்ற சுந்தரம் நிறைவாக,
ஏக்கருக்கு 700 கிலோ!
‘‘தனிப்பயிராக நாட்டுக்கம்பு சாகுபடி செய்யும்போது, இறவையில ஒரு ஏக்கருக்கு 800 கிலோவில் இருந்து ஆயிரம் கிலோ வரை மகசூல் கிடைக்கும். மானாவாரியில் 600 கிலோவில் இருந்து 800 கிலோ வரை மகசூல் கிடைக்கும். நான் மானாவாரியில் சாகுபடி செய்திருக்கேன். சராசரியா 700 கிலோ வரை கிடைச்சுடும். கிலோ 25 ரூபாய்னு நேரடியாவே விற்பனை செய்யப் போறேன். 700 கிலோவை 25 ரூபாய் வீதம் விற்பனை செய்தா, 17 ஆயிரத்து 500 ரூபாய் கிடைக்கும். இதில் எப்படியும் 12 ஆயிரம் ரூபாய் லாபமா கிடைக்கும்” என்று தெம்பாகச் சொன்னார்!
தொடர்புக்கு,
சுந்தரம்,
செல்போன்: 84891-91774
ஆண்டு முழுவதும் கம்பங்கூழ்!
அழிவுநிலையில் இருக்கும் நாட்டுக்கம்பு ரகத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார், தென்பேர் கிராமத்துக்குப் பக்கத்துக் கிராமமான நரசிங்கனூரைச் சேர்ந்த பாண்டியன். இவர், தனிப்பயிராகவும், கடலைக்கு ஊடுபயிராகவும் தொடர்ந்து சாகுபடி செய்து வருகிறார். 10.1.2015-ம் தேதியிட்ட ‘பசுமை விகடன்’ இதழில் ‘செவந்தம்பட்டி கத்திரி... இருமடிப்பாத்தியில் செழிப்பான வளர்ச்சி!’ என்ற செய்தி மூலம் இவரும் ஏற்கெனவே வாசகர்களுக்கு அறிமுகமானவர்தான்.
“எங்க தாத்தாவுக்கு 2 ஏக்கர் நிலம் இருந்துச்சு. அந்த நிலத்துல ஆடிப்பட்டத்துல மல்லாட்டை (நிலக்கடலை) விதைக்கும் போது, நாட்டுக்கம்பு விதைகளையும் சேர்த்தே விதைப்பாங்க. அதுல கிடைக்கிற கம்பை வெச்சு வருஷம் முழுக்க எங்க வீட்டுல கம்பங்கூழ் தயார் செய்வாங்க. அதோட சுவையே தனிதான்” என்று பேச ஆரம்பித்த பாண்டியன் நாட்டுக்கம்பு குறித்துச் சொன்ன விஷயங்கள் இங்கே...
90 நாட்களில், தோண்டியில் கூழ்!
“இன்னைக்கு பல விதமான கம்பு ரகங்கள் வந்தாலும், நாட்டுக்கம்போட சுவைகிட்ட நிக்கவே முடியாது. இந்தக் கம்புல கூழ், அடை, பொரிமாவு, புட்டு, அவல்னு பலவிதமான பதார்த்தங்கள் செய்யலாம். ஆடிப்பட்டத்துல மல்லாட்டை விதைக்கும் போது, இதையும் சேர்த்து விதைச்சு விட்டா, மல்லாட்டை அறுவடையாகுறதுக்கு முன்னாடி கம்பு அறுவடையாகிடும். ‘30 நாள்ல தொண்டையில கதிர்; 60 நாளில் அக்கத்துல கதிர்; 90 நாளில் தோண்டியில கூழ்’னு நாட்டுக் கம்பு பற்றி என்னோட தாத்தா சொல்வார்.
சிட்டுக்குருவிக்காக விதைத்தேன்!
நாட்டுக்கம்பு அழிவு நிலையில இருக்கிறதுக்கு காரணம், சரியான விலை இல்லாததுதான். முன்னாடி எல்லா பகுதியிலும் விளைஞ்ச கம்பு மூட்டைகளை விழுப்புரம் மார்க்கெட் கமிட்டிக்குத்தான் ஜனங்க விற்பனைக்குக் கொண்டு போவாங்க. ஒரு குவிண்டால் கம்புக்கு 1,500 ரூபாய்ல இருந்து 1,700 ரூபாய்தான் விலை கிடைச்சது. அதனால விவசாயிங்க கொஞ்சம் கொஞ்சமா நாட்டுக்கம்பு சாகுபடியைக் கைவிட்டுட்டாங்க. சிட்டுக்குருவிகளோட அழிவுக்கு சிறுதானியங்கள் சாகுபடி குறைஞ்சு போனதும் ஒரு காரணம்னு எனக்கு தோணுச்சு. அதனால, நாலு வருஷத்துக்கு முன்னாடி, மல்லாட்டை சாகுபடி செய்யும்போது, குருவிகளுக்கு உணவுக்காகவும், அழிவு நிலையில இருக்கிற நாட்டுக்கம்பு விதைகளைப் பாதுகாக்கணுங்கிறதுக்காகவும் சொந்தக்காரர் வீட்டுல இருந்து அரை கிலோ நாட்டுக்கம்பு விதை வாங்கி விதைச்சு விட்டேன். குருவிகள் சாப்பிட்டது போக, மீதம் மூணு கிலோ விதை கிடைச்சது. அதைத் தொடர்ச்சியா சாகுபடி செய்து, பாதுகாத்துக்கிட்டு வர்றேன். எனக்குத் தெரிந்த நண்பர்கள் சொந்தக்காரங்களுக்கு விதைகளைக் கொடுத்துக்கிட்டிருக்கேன்” என்ற பாண்டியன்,
ஊடுபயிரில் ஏக்கருக்கு 400 கிலோ!
“ஒரு ஏக்கர்ல கடலைக்கு ஊடுபயிரா சாகுபடி செய்தால், 400 கிலோ அளவுக்கு மகசூல் கிடைக்கும். விதைக்காக கிலோ 30 ரூபாய்னு கொடுக்கிறேன். சாப்பாட்டுக்காக உமி நீக்கம் செய்த கம்பை, கிலோ 40 ரூபாய்னு விற்பனை செய்றேன்” என்றார், உற்சாகமாக.
தொடர்புக்கு, பாண்டியன், செல்போன்: 95006-27289
ஏக்கருக்கு 6 கிலோ விதை!
மானாவாரியாக நாட்டுக்கம்பு சாகுபடி செய்யும் முறை பற்றி சுந்தரம் சொன்ன விஷயங்கள் பாடமாக இங்கே...
நாட்டுக் கம்பின் வயது 75 முதல் 85 நாட்கள். பருவநிலை, மண் இவற்றைப் பொறுத்து 5 முதல் 10 நாட்கள் வயது கூடக் குறைய இருக்கலாம். நாட்டுக்கம்பு சாகுபடிக்கு ஆடிப்பட்டமும், தைப்பட்டமும் ஏற்றவை. ஆடிப்பட்டத்தில் விதைக்கத் திட்டமிட்டால்... கோடையில் கிடைக்கும் மழையில் உழவு செய்து, ஏக்கருக்கு 5 டிப்பர் எருவைக் கொட்டி கலைத்து விட வேண்டும். எருவில் இருக்கும் ‘போக்குக் களைகள்’ முளைப்பு எடுத்ததும், மீண்டும் ஒரு உழவு செய்ய வேண்டும். ஆடிப்பட்டத்தில் முதல் மழை பெய்ததும் நிலத்தை உழுது, ஏக்கருக்கு 6 கிலோ முதல் 8 கிலோ வரை கம்பு விதைத்துவிட்டு, சீமைக்கருவேல மரத்தின் முள் அல்லது வேப்பங்கிளைகளைக் கொண்டு மேலே இழுத்து விதைகளை மண்ணில் பதிய வைக்க வேண்டும்.
பூச்சி, நோய் தாக்குதல் இல்லை!
விதைத்த 7-ம் நாளில் விதைகள் முளைத்து விடும். விதைத்த 20-ம் நாளில் களை எடுக்க வேண்டும். அதற்கு மேல் பயிர் வளர்ந்து இடைவெளி இல்லாத அளவுக்கு மூடிக்கொள்ளும் என்பதால், களை எடுக்கத் தேவையில்லை. நாட்டுக்கம்பில் அதிகமாக பூச்சி, நோய்கள் தாக்குவதில்லை. அதனால், வேறு எந்தப் பராமரிப்பும் தேவையில்லை. 35-ம் நாளில் பூவெடுக்க ஆரம்பித்து, 55-ம் நாளுக்குப் பிறகு பால் பிடிக்கும். 65-ம் நாளுக்கு மேல் கதிர் முற்றத்துவங்கி 70 முதல் 75-ம் நாளுக்குள் அறுவடைக்கு வந்துவிடும். அறுவடை செய்த கதிர்களை சிமென்ட் களத்தில் இட்டு டிராக்டர் கொண்டு அடித்து சுத்தம் செய்துக்கொள்ளலாம்.
கம்புக்கு உயிர்மூடாக்கு நிலக்கடலை!
நிலக்கடலையில் ஊடுபயிராக நாட்டுக்கம்பு விதைப்பது பற்றி விளக்கிய பாண்டியன், “நாட்டுக்கம்பை விதைத்த பிறகு, நிலக்கடலை விதைகளை மாட்டு ஏர் ஓட்டி விதைக்க வேண்டும். நிலக்கடலை, கம்புக்கு உயிர்மூடாக்காக இருக்கும், அதேநேரத்தில் தழைச்சத்துகளையும் கிரகித்துக் கொடுக்கும். கம்புக் கதிர்களை உண்ண வரும் குருவிகள், கடலையில் இருக்கும் பூச்சிகளையும் பிடித்து சாப்பிடும். இதனால், கடலையிலும், கம்பிலும் பூச்சித்தாக்குதல் இருக்காது. 20-ம் நாள் முதல் 15 நாட்கள் இடைவெளியில் டேங்குக்கு (10 லிட்டர்) ஒரு லிட்டர் ஜீவாமிர்தம் கலந்து தெளிக்க வேண்டும். ஏக்கருக்கு 12 டேங்குகள் தேவைப்படும். பூக்கள் எடுக்கும் சமயத்தில் டேங்குக்கு (10 லிட்டர்) 300 மில்லி வீதம் புளித்த மோர் கலந்து தெளிக்க வேண்டும். 75 முதல் 85 நாட்களில் கம்பு அறுவடை முடியும். அதிலிருந்து, 15 முதல் 20 நாட்களுக்குப் பிறகுதான் கடலை அறுவடைக்கு வரும்” என்றார்.
விதைத் தேர்வு!
“நாட்டுக்கம்பு விதைகளை ஒரு முறை வாங்கி விதைத்தால், அடுத்த முறையில் இருந்து நாமே விதையை எடுத்துவைத்துக்கொள்ளலாம். நன்றாக விளைந்த நாட்டுக்கம்புக் கதிர்களில் பெரிய கதிராகவும், நன்றாக விளைந்த கதிராகவும் பார்த்துத் தேர்வு செய்து, அறுவடை செய்ய வேண்டும். அந்தக் கதிர்களை அப்படியே காய வைத்து, சாக்கில் இட்டு கட்டி வைத்து விட வேண்டும். அமாவாசை தினத்தன்று வெளியில் எடுத்துக் காய வைக்க வேண்டும். இப்படி மூன்று முறை காய வைத்து பத்திரப்படுத்தி வைத்து விட்டால், முளைப்புத் திறனும், விளைச்சலும் சிறப்பாக இருக்கும்” என்கிறார், பாண்டியன்.

2 comments:

  1. சுய தொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் ஆடு,மாடு,கோழி போன்ற பண்ணை சார்ந்த தொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்துதரப்படும் தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண்-9944209238

    ReplyDelete
  2. சுய தொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் ஆடு,மாடு,கோழி போன்ற பண்ணை சார்ந்த தொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்துதரப்படும் தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண்-9944209238

    ReplyDelete