Tuesday 15 March 2016

மானாவாரியில் மகத்தான விளைச்சல்... நட்டமில்லாத வருமானம் கொடுக்கும் நாட்டுக்கம்பு!

“கிணறு, போர்வெல் என பாசன முறைகள் நவீனமாக மாறினாலும்... பெரும் பகுதி விவசாயம் நடப்பது மானாவாரி நிலங்களில்தான். சோளம், கேழ்வரகு, பனிவரகு, சாமை, தினை எனப் பல பயிர் ரகங்கள் இருந்தாலும், மானாவாரி விவசாயத்தில் நாட்டுக் கம்புக்கு என்றைக்கும் தனியான இடமுண்டு” என்கிறார், விழுப்புரம் மாவட்டம், தென்பேர் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரம்.
உயரமாக, கம்பீரமாகக் காட்சி கொடுத்த நாட்டுக்கம்புக் கதிர்களை பெண்கள் அறுவடை செய்துகொண்டிருக்க... அப்பணிகளை மேற்பார்வை செய்துகொண்டிருந்த சுந்தரத்தைச் சந்தித்தோம்.
வெற்றிக்குப் பாடம் சொல்லிய விவசாயிகள்!
“நான் விவசாயத்துக்கு வந்த காலந்தொட்டு கேழ்வரகு, சோளம், கம்புனு சாகுபடி செய்றேன். எனக்குச் சொந்த ஊர் பாண்டிச்சேரிங்கிறதால ஆரம்பத்துல அங்க இருந்த நிலத்துல இறவைப் பாசனத்துல வீரிய கம்பு ரகங்களை சாகுபடி செய்தேன். ஏக்கருக்கு 20 மூட்டை கம்பு கிடைக்கும். அப்பறம், அங்க இருக்கிற நிலத்தை விற்பனை செய்துட்டு, இங்க வந்து 57 ஏக்கர் நிலம் வாங்கினேன். அதுல, 50 ஏக்கர்ல மா, நெல்லி, சப்போட்டானு பழ மரங்களையும் மர பயன்பாட்டுக்கான மரங்களையும் நடவு செய்திருக்கேன். மீதி 7 ஏக்கர்ல மானாவாரியா விவசாயம் செய்துக்கிட்டிருக்கேன்.
ஆரம்பத்துல இந்த நிலத்துல வீரிய கம்பு ரகங்களைத்தான் சாகுபடி செஞ்சேன். அதுல, விளைச்சல் போதுமான அளவுக்கு இல்லை. அப்பறம் அக்கம்பக்கத்துல இருக்கிற விவசாயிகள்கிட்ட கேட்டப்போ... அவங்க ஆடிப்பட்டத்துல நிலக்கடலை, அல்லது நாட்டுக்கம்பு, கார்த்திகைப் பட்டத்துல காராமணினு சாகுபடி செய்றதா சொன்னாங்க. நானும் அதே மாதிரி சாகுபடி செய்ய ஆரம்பிச்சேன். குறைந்த செலவு, அதிகமான உழைப்பு இல்லாம போதுமான அளவுக்கு வருமானம் கிடைக்க ஆரம்பிச்சது. அதனாலதான் தொடர்ச்சியா 10 வருஷமா நாட்டுக்கம்பு சாகுபடிய செஞ்சிக்கிட்டு இருக்கேன்” என்ற சுந்தரம், வேலையாட்களுக்கு தேநீர் கொடுத்து விட்டுப் பேச ஆரம்பித்தார்.
காராமணிக்கு உரமாகும் கம்புத் தட்டைகள்!
“வீரிய கம்பு ரகங்களுக்கு வறட்சியைத் தாங்கி வளர்ற தன்மை குறைவு. அதே நேரத்துல நாட்டுக்கம்பு நன்செய், புன்செய்னு எல்லா நிலத்திலும் வறட்சியைத் தாங்கி வளரும். ஆடி மாதம் கிடைக்கிற குறைந்த மழையிலயே நல்லா மகசூல் கொடுக்கும். ஆடிப்பட்டத்துல நாட்டுக்கம்பை சாகுபடி செய்றப்போ கிடைக்கிற தட்டைகள் கார்த்திகைப் பட்டத்துல விதைக்கிற காராமணி பயிருக்கு இடுபொருளாகிடும். இதுவும் தொடர்ச்சியா நாட்டுக்கம்பு சாகுபடி செய்றதுக்கு ஒரு காரணம். வீரிய கம்பை விட, அதிகமான அளவுக்கு நாட்டுக் கம்புல நார்ச்சத்து இருக்கு. அதனாலதான் அந்தக் காலத்துல எல்லாரும் கம்பங்கூழ் குடிச்சாங்க. இந்த வருஷம் ஏழு ஏக்கர்ல கம்பு சாகுபடி செய்திருக்கேன்” என்ற சுந்தரம் நிறைவாக,
ஏக்கருக்கு 700 கிலோ!
‘‘தனிப்பயிராக நாட்டுக்கம்பு சாகுபடி செய்யும்போது, இறவையில ஒரு ஏக்கருக்கு 800 கிலோவில் இருந்து ஆயிரம் கிலோ வரை மகசூல் கிடைக்கும். மானாவாரியில் 600 கிலோவில் இருந்து 800 கிலோ வரை மகசூல் கிடைக்கும். நான் மானாவாரியில் சாகுபடி செய்திருக்கேன். சராசரியா 700 கிலோ வரை கிடைச்சுடும். கிலோ 25 ரூபாய்னு நேரடியாவே விற்பனை செய்யப் போறேன். 700 கிலோவை 25 ரூபாய் வீதம் விற்பனை செய்தா, 17 ஆயிரத்து 500 ரூபாய் கிடைக்கும். இதில் எப்படியும் 12 ஆயிரம் ரூபாய் லாபமா கிடைக்கும்” என்று தெம்பாகச் சொன்னார்!
தொடர்புக்கு,
சுந்தரம்,
செல்போன்: 84891-91774
ஆண்டு முழுவதும் கம்பங்கூழ்!
அழிவுநிலையில் இருக்கும் நாட்டுக்கம்பு ரகத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார், தென்பேர் கிராமத்துக்குப் பக்கத்துக் கிராமமான நரசிங்கனூரைச் சேர்ந்த பாண்டியன். இவர், தனிப்பயிராகவும், கடலைக்கு ஊடுபயிராகவும் தொடர்ந்து சாகுபடி செய்து வருகிறார். 10.1.2015-ம் தேதியிட்ட ‘பசுமை விகடன்’ இதழில் ‘செவந்தம்பட்டி கத்திரி... இருமடிப்பாத்தியில் செழிப்பான வளர்ச்சி!’ என்ற செய்தி மூலம் இவரும் ஏற்கெனவே வாசகர்களுக்கு அறிமுகமானவர்தான்.
“எங்க தாத்தாவுக்கு 2 ஏக்கர் நிலம் இருந்துச்சு. அந்த நிலத்துல ஆடிப்பட்டத்துல மல்லாட்டை (நிலக்கடலை) விதைக்கும் போது, நாட்டுக்கம்பு விதைகளையும் சேர்த்தே விதைப்பாங்க. அதுல கிடைக்கிற கம்பை வெச்சு வருஷம் முழுக்க எங்க வீட்டுல கம்பங்கூழ் தயார் செய்வாங்க. அதோட சுவையே தனிதான்” என்று பேச ஆரம்பித்த பாண்டியன் நாட்டுக்கம்பு குறித்துச் சொன்ன விஷயங்கள் இங்கே...
90 நாட்களில், தோண்டியில் கூழ்!
“இன்னைக்கு பல விதமான கம்பு ரகங்கள் வந்தாலும், நாட்டுக்கம்போட சுவைகிட்ட நிக்கவே முடியாது. இந்தக் கம்புல கூழ், அடை, பொரிமாவு, புட்டு, அவல்னு பலவிதமான பதார்த்தங்கள் செய்யலாம். ஆடிப்பட்டத்துல மல்லாட்டை விதைக்கும் போது, இதையும் சேர்த்து விதைச்சு விட்டா, மல்லாட்டை அறுவடையாகுறதுக்கு முன்னாடி கம்பு அறுவடையாகிடும். ‘30 நாள்ல தொண்டையில கதிர்; 60 நாளில் அக்கத்துல கதிர்; 90 நாளில் தோண்டியில கூழ்’னு நாட்டுக் கம்பு பற்றி என்னோட தாத்தா சொல்வார்.
சிட்டுக்குருவிக்காக விதைத்தேன்!
நாட்டுக்கம்பு அழிவு நிலையில இருக்கிறதுக்கு காரணம், சரியான விலை இல்லாததுதான். முன்னாடி எல்லா பகுதியிலும் விளைஞ்ச கம்பு மூட்டைகளை விழுப்புரம் மார்க்கெட் கமிட்டிக்குத்தான் ஜனங்க விற்பனைக்குக் கொண்டு போவாங்க. ஒரு குவிண்டால் கம்புக்கு 1,500 ரூபாய்ல இருந்து 1,700 ரூபாய்தான் விலை கிடைச்சது. அதனால விவசாயிங்க கொஞ்சம் கொஞ்சமா நாட்டுக்கம்பு சாகுபடியைக் கைவிட்டுட்டாங்க. சிட்டுக்குருவிகளோட அழிவுக்கு சிறுதானியங்கள் சாகுபடி குறைஞ்சு போனதும் ஒரு காரணம்னு எனக்கு தோணுச்சு. அதனால, நாலு வருஷத்துக்கு முன்னாடி, மல்லாட்டை சாகுபடி செய்யும்போது, குருவிகளுக்கு உணவுக்காகவும், அழிவு நிலையில இருக்கிற நாட்டுக்கம்பு விதைகளைப் பாதுகாக்கணுங்கிறதுக்காகவும் சொந்தக்காரர் வீட்டுல இருந்து அரை கிலோ நாட்டுக்கம்பு விதை வாங்கி விதைச்சு விட்டேன். குருவிகள் சாப்பிட்டது போக, மீதம் மூணு கிலோ விதை கிடைச்சது. அதைத் தொடர்ச்சியா சாகுபடி செய்து, பாதுகாத்துக்கிட்டு வர்றேன். எனக்குத் தெரிந்த நண்பர்கள் சொந்தக்காரங்களுக்கு விதைகளைக் கொடுத்துக்கிட்டிருக்கேன்” என்ற பாண்டியன்,
ஊடுபயிரில் ஏக்கருக்கு 400 கிலோ!
“ஒரு ஏக்கர்ல கடலைக்கு ஊடுபயிரா சாகுபடி செய்தால், 400 கிலோ அளவுக்கு மகசூல் கிடைக்கும். விதைக்காக கிலோ 30 ரூபாய்னு கொடுக்கிறேன். சாப்பாட்டுக்காக உமி நீக்கம் செய்த கம்பை, கிலோ 40 ரூபாய்னு விற்பனை செய்றேன்” என்றார், உற்சாகமாக.
தொடர்புக்கு, பாண்டியன், செல்போன்: 95006-27289
ஏக்கருக்கு 6 கிலோ விதை!
மானாவாரியாக நாட்டுக்கம்பு சாகுபடி செய்யும் முறை பற்றி சுந்தரம் சொன்ன விஷயங்கள் பாடமாக இங்கே...
நாட்டுக் கம்பின் வயது 75 முதல் 85 நாட்கள். பருவநிலை, மண் இவற்றைப் பொறுத்து 5 முதல் 10 நாட்கள் வயது கூடக் குறைய இருக்கலாம். நாட்டுக்கம்பு சாகுபடிக்கு ஆடிப்பட்டமும், தைப்பட்டமும் ஏற்றவை. ஆடிப்பட்டத்தில் விதைக்கத் திட்டமிட்டால்... கோடையில் கிடைக்கும் மழையில் உழவு செய்து, ஏக்கருக்கு 5 டிப்பர் எருவைக் கொட்டி கலைத்து விட வேண்டும். எருவில் இருக்கும் ‘போக்குக் களைகள்’ முளைப்பு எடுத்ததும், மீண்டும் ஒரு உழவு செய்ய வேண்டும். ஆடிப்பட்டத்தில் முதல் மழை பெய்ததும் நிலத்தை உழுது, ஏக்கருக்கு 6 கிலோ முதல் 8 கிலோ வரை கம்பு விதைத்துவிட்டு, சீமைக்கருவேல மரத்தின் முள் அல்லது வேப்பங்கிளைகளைக் கொண்டு மேலே இழுத்து விதைகளை மண்ணில் பதிய வைக்க வேண்டும்.
பூச்சி, நோய் தாக்குதல் இல்லை!
விதைத்த 7-ம் நாளில் விதைகள் முளைத்து விடும். விதைத்த 20-ம் நாளில் களை எடுக்க வேண்டும். அதற்கு மேல் பயிர் வளர்ந்து இடைவெளி இல்லாத அளவுக்கு மூடிக்கொள்ளும் என்பதால், களை எடுக்கத் தேவையில்லை. நாட்டுக்கம்பில் அதிகமாக பூச்சி, நோய்கள் தாக்குவதில்லை. அதனால், வேறு எந்தப் பராமரிப்பும் தேவையில்லை. 35-ம் நாளில் பூவெடுக்க ஆரம்பித்து, 55-ம் நாளுக்குப் பிறகு பால் பிடிக்கும். 65-ம் நாளுக்கு மேல் கதிர் முற்றத்துவங்கி 70 முதல் 75-ம் நாளுக்குள் அறுவடைக்கு வந்துவிடும். அறுவடை செய்த கதிர்களை சிமென்ட் களத்தில் இட்டு டிராக்டர் கொண்டு அடித்து சுத்தம் செய்துக்கொள்ளலாம்.
கம்புக்கு உயிர்மூடாக்கு நிலக்கடலை!
நிலக்கடலையில் ஊடுபயிராக நாட்டுக்கம்பு விதைப்பது பற்றி விளக்கிய பாண்டியன், “நாட்டுக்கம்பை விதைத்த பிறகு, நிலக்கடலை விதைகளை மாட்டு ஏர் ஓட்டி விதைக்க வேண்டும். நிலக்கடலை, கம்புக்கு உயிர்மூடாக்காக இருக்கும், அதேநேரத்தில் தழைச்சத்துகளையும் கிரகித்துக் கொடுக்கும். கம்புக் கதிர்களை உண்ண வரும் குருவிகள், கடலையில் இருக்கும் பூச்சிகளையும் பிடித்து சாப்பிடும். இதனால், கடலையிலும், கம்பிலும் பூச்சித்தாக்குதல் இருக்காது. 20-ம் நாள் முதல் 15 நாட்கள் இடைவெளியில் டேங்குக்கு (10 லிட்டர்) ஒரு லிட்டர் ஜீவாமிர்தம் கலந்து தெளிக்க வேண்டும். ஏக்கருக்கு 12 டேங்குகள் தேவைப்படும். பூக்கள் எடுக்கும் சமயத்தில் டேங்குக்கு (10 லிட்டர்) 300 மில்லி வீதம் புளித்த மோர் கலந்து தெளிக்க வேண்டும். 75 முதல் 85 நாட்களில் கம்பு அறுவடை முடியும். அதிலிருந்து, 15 முதல் 20 நாட்களுக்குப் பிறகுதான் கடலை அறுவடைக்கு வரும்” என்றார்.
விதைத் தேர்வு!
“நாட்டுக்கம்பு விதைகளை ஒரு முறை வாங்கி விதைத்தால், அடுத்த முறையில் இருந்து நாமே விதையை எடுத்துவைத்துக்கொள்ளலாம். நன்றாக விளைந்த நாட்டுக்கம்புக் கதிர்களில் பெரிய கதிராகவும், நன்றாக விளைந்த கதிராகவும் பார்த்துத் தேர்வு செய்து, அறுவடை செய்ய வேண்டும். அந்தக் கதிர்களை அப்படியே காய வைத்து, சாக்கில் இட்டு கட்டி வைத்து விட வேண்டும். அமாவாசை தினத்தன்று வெளியில் எடுத்துக் காய வைக்க வேண்டும். இப்படி மூன்று முறை காய வைத்து பத்திரப்படுத்தி வைத்து விட்டால், முளைப்புத் திறனும், விளைச்சலும் சிறப்பாக இருக்கும்” என்கிறார், பாண்டியன்.

Tuesday 8 March 2016

பயிர்களும் பட்டங்களும்

பட்டம் என்றால் என்ன?
பட்டம் என்பது காலநிலையின் குறியீட்டு வார்த்தை ஆகும்.
பட்டத்துக்கு ஏற்றவாறு பயிர் செய்வது மிகவும் முக்கியம் ஆகும். பாரம்பரிய விவசாயத்தில் பட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
ஒரு பயிர் சாகுபடி செய்த நிலத்தில் தொடர்ந்து மீண்டும் அதே பயிரைச் சாகுபடி செய்யவும் மாட்டார்கள்.
வருடத்தில் எந்தெந்தப் பட்டத்தில் என்னென்ன பயிர் சாகுபடி செய்ய வேண்டுமோ அந்தந்தப்பட்டத்தில் அந்தந்தப் பயிர்தான் சாகுபடி செய்வார்கள்.
ஆடிப்பட்டத்தில் தானியப் பயிர்கள் அனைத்தும் சாகுபடி செய்வார்கள், தவிரக் காய்கறிப் பயிர்களும் பெரும்பாலான வைற்றைச் சாகுபடி செய்வார்கள்.
மார்கழிப்பட்டம், மாசிப்பட்டம், சித்திரைப்பட்டம் என்றும் தமிழ் மாதங்களைக் கணக்கிட்டும் அந்தந்தப் பட்டத்துக்கு ஏற்ற பயிர்களைச் சாகுபடி செய்வார்கள்.
ஆடிப்பட்டத்தில் பாதி நிலத்தில் மானாவாரியாகச் சாமை விதைத்து கார்த்திகை, மார்கழி மாதங்களில் அறுவடை செய்யலாம்.
மீதிப் பாதி நிலத்தில் மாசி, பங்குனி மாதங்களில் சோளம் விதைத்து ஆனி மாதவாக்கில் அறுவடை செய்யலாம்.
மறு வருடம் சாகுபடி செய்யும்போது முந்தைய வருடம் சாமை விவசாயம் செய்த நிலத்தில் சோளமும், சோளம் விவசாயம் செய்த நிலத்தில் சாமையும்தான் சாகுபடி செய்வர்.
நிலத்தில் ஒரு பயிர் செய்தால் அந்தப் பயிரின் ஆயுளுக்குப் பின்னால் அவற்றின் கழிவுகளும் அவற்றில் அண்டி வாழ்ந்து வந்த நோய்க் கிருமிகளும், அடுத்து அதே பயிர் செய்யும்போது புதிதாகச் செய்யும் பயிரையும் பாதிக்க ஏதுவாகிறது.
மாற்றுப் பயிர் செய்யும்போது மாற்றுப் பயிர்களுக்கு முந்தைய பயிரின் கழிவுகள் எருவாகப் பயன்படுவதோடு முந்தைய பயிரில் தங்கி வாழ்ந்த நோய்க்கிருமிகளும் புதுப்பயிரைத் தாக்குவது இல்லை.
நோய்களும் நோய்க்கிருமிகளும் பயிருக்குப் பயிர் வேறுபடுகின்றன. அதனால் பாதிப்பை ஏற்படுத்துவது இல்லை. மாறாக கிருமிகளை அழிகின்றன.
குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பின்னால் வேறெரு பயிர் செய்தபின்னால் மீண்டும் பழைய பயிர் சாகுபடி செய்வதால் எந்தப் பாதிப்பும் ஏற்படுவது இல்லை.
இடைக்காலத்தில் அவை பெரும்பாலும் அழிந்து விடுகின்றன.
பயிர்களுக்கு ஏற்ற பட்டங்கள்
வெங்காயம் - வைகாசி, புரட்டாசி, மார்கழி
பீர்க்கங்காய், புடலை,பாவை - சித்திரை, ஆடி, ஆவணி
அவரை – சித்திரை, ஆடி, ஆவணி, தை, மாசி
கத்தரி – ஆடி, மாசி
வெண்டை – மாசி, பங்குனி
மிளகாய்,கொத்தவரை – வைகாசி, ஆனி, ஆவணி புரட்டாசி,கார்த்திகை. தை, மாசி
முருங்கை – புரட்டாசி, ஐப்பசி
எள் - ஆடி, சித்திரை
சூரியகாந்தி, ஆடி, கார்த்திகை, மாசி
சுண்டல் - ஐப்பசி, கார்த்திகை
நெல், - புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை
ஊளுந்து – ஆடி, மாசி
கம்பு – மாசி, பங்குனி
நாட்டுச்சோளம்- சித்திரை, மாசி, கார்த்திகை
தென்னை- ஆடி, ஆனி, கார்த்திகை, மார்கழி
கரும்பு- கார்த்திகை, தை
வாழை - கார்த்திகை, மார்கழி.
மரவள்ளி – கார்த்திகை
பருத்தி, ஆவணி, புரட்டாசி, மாசி
தட்டப்பயறு, பாசிப்பயறு, துவரை, மொச்சை – ஆடி
ஆண்டுமுழுவதும் பயிரிடலாம் - ஆமணக்கு, தக்காளி, பொரியல் தட்டப்பயறு, மக்காச்சோளம்,பட்டுவளர்ப்பு, கார்/குருவை/சொர்னவரி/ஆடி பட்டம் (வைகாசி – ஆனி முதல் ஆவணி – புரட்டாசி வரை)
சம்பா/தாளாடி/பிஷானம் (ஆவணி – புரட்டாசி முதல் தை – மாசி வரை)
குறிப்பு :-
மிளகாய், தக்காளி, வெங்காயம், நெல். கொத்தவரை, வாழை, தென்னை, போன்ற பயிர்கள் கார்த்திகை மார்கழி பட்டத்தில் நடவு செய்யலாம்

பூச்சிகள் விவசாயிகளின் நண்பர்களே

"நம் வயல்களில் உள்ள பூச்சிகளை அழிக்க பூச்சிக் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் அனைத்துப் பூச்சிகளும் விவசாயிகளின் நண்பர்களே" என்கிறார் கோவில்பட்டியில் வேளாண்மை அலுவலராகப் பணியாற்றும் நீ.செல்வம்.
பூச்சிக்கொல்லி மருந்துகளின் கடுமையான தீமைகள் பற்றியும், வயல்களில் பூச்சிகளைக் கையாள்வதற்கான உத்திகள் பற்றியும் தமிழ்நாடெங்கும் விவசாயிகள் மத்தியில் பேசி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் செல்வம்.
அவருடன் நடத்திய உரையாடல்:
பூச்சிக் கொல்லி மருந்து பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் என்ன?
"வயல்களில் பயிரைத் தின்று மகசூல் இழப்பு ஏற்படுத்தும் பூச்சிகளால்தான் நமக்குப் பிரச்சினை. இவற்றை தீமை செய்யும் பூச்சிகள் என்கிறோம். அதே நேரத்தில் நம் சாகுபடி பயிரை சாப்பிடாமல், நமக்கு தீமை செய்யும் பூச்சிகளை மட்டும் பிடித்து சாப்பிடக் கூடிய சிலந்தி, குளவி, பொறிவண்டு, தட்டான் என வேறு ஏராளமான பூச்சிகள் உள்ளன. இவை யாவும் நமக்கு நன்மை செய்யும் பூச்சிகள்.
நம் பயிரை சாப்பிடும் பூச்சிகள் இலையை சுருட்டிக் கொண்டோ அல்லது தண்டுகளை துளைத்துக் கொண்டோ உள்ளே பாதுகாப்பாக இருக்கின்றன. தட்டான், குளவி, சிலந்தி போன்ற நன்மை செய்யும் பூச்சிகள்தான் பயிர்களுக்கு வெளியே சுற்றிக் கொண்டிருக்கும். இந்த சூழலில், நாம் பூச்சிக்கொல்லி மருந்துகளை வயல்களில் அடிக்கும்போது முதலில் நன்மை செய்யும் பூச்சிகள்தான் கொல்லப்படுகின்றன.
இது தவிர நாம் பயன்படுத்தும் பூச்சிக் கொல்லி மருந்துகளை தாங்கி உயிர் வாழக் கூடிய தகவமைப்பு என்பது பூச்சிகளுக்கு அதிகரித்துக் கொண்டே போகிறது. இதன் காரணமாக ஒவ்வோர் ஆண்டும் நாம் பயன்படுத்தும் பூச்சிக் கொல்லி மருந்தின் வீரியத்தையும் அதிகப்படுத்திக் கொண்டே செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
ஆக, பூச்சிக் கொல்லி மருந்தின் வீரியம் அதிகரிக்க அதிகரிக்க அந்த வயல்களில் உற்பத்தியாகும் உணவுப் பொருள்களை சாப்பிடும் மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும்தான் பல புதிய புதிய நோய்கள் ஏற்படுகின்றன. மறுபுறம் பயிர்களை அழிக்கும் பூச்சிகள் பெருகிக் கொண்டே செல்கின்றன.
அப்படியென்றால் பூச்சிகளைக் கட்டுப்படுத்த என்னதான் வழி?
முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்பார்கள். அதேபோல், பூச்சிகளை பூச்சிகளால்தான் கட்டுப்படுத்த வேண்டும். அதாவது நன்மை செய்யும் பூச்சிகள் போதுமான அளவில் நம் வயல்களில் இருக்க வேண்டும். அப்போது, பயிர்களை சாப்பிடும் தீமை செய்யும் பூச்சிகளை நன்மை செய்யும் பூச்சிகள் பிடித்து தின்று விடும். இதனால் பூச்சிகளின் பெருக்கம் இயற்கையான முறையிலேயே கட்டுப்படுத்தப்படும்.
நன்மை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியுமா?
பூச்சிக்கொல்லி மருந்துகளை தவிர்ப்பதன் மூலம் ஏற்கெனவே வயல்களில் இருக்கும் நன்மை செய்யும் பூச்சிகளைப் பாதுகாக்க முடியும். மஞ்சள் நிறத்தில் பூ பூக்கக் கூடிய செண்டுப் பூ (துலுக்க சாமந்திப் பூ) செடி, மக்காச் சோளம் போன்றவற்றை வயல் வரப்புகளில் வளர்ப்பதன் மூலம் நன்மை செய்யும் பல பூச்சியினங்களை நம் வயல்களை நோக்கி வரும்படி கவரலாம்.
வரப்புகளில் ஊடு பயிராக தட்டைப் பயறு சாகுபடி செய்யலாம். தட்டைப் பயறு செடியில் இருக்கும் அசுவினி பூச்சியைச் சாப்பிட ஏராளமான நன்மை செய்யும் பூச்சிகள் நம் வயல்களை நோக்கி படையெடுத்து வரும். அசுவினியை தின்று முடித்த பின்னர் நம் வயல்களில் உள்ள பயிர்களில் மறைந்து கொண்டிருக்கும் தீமை செய்யும் பூச்சிகளையும் தேடிப் பிடித்து தின்னும். இதனால் நன்மை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு, பயிர்களை அழிக்கும் பூச்சிகளைக் குறைக்க முடியும்.
நன்மை செய்யும் பூச்சிகள் அதிகரித்தால் மட்டுமே விவசாயிகளுக்கு ஏற்படும் மகசூல் இழப்பைத் தடுத்து விட முடியுமா?
நன்மை செய்யும் பூச்சிகளைக் கொண்டு பயிர்களை அழிக்கும் தீமை செய்யும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது என்பது ஒரு உத்தி. வேப்பங்கொட்டை கரைசல், இயற்கை பூச்சி விரட்டி கரைசல் போன்றவற்றை பயிர்களில் தெளிப்பதன் மூலம் பயிர்களின் இலைகளில் கசப்புத் தன்மையை உருவாக்கலாம். இதனால் கசப்பு சுவையுள்ள இலைகளை சாப்பிடாமல் தீமை செய்யும் பூச்சிகள் தவிர்த்து விடும். இது இன்னொரு உத்தி.
மேலும், ஆமணக்கு போன்ற செடிகளை வரப்புகளில் நட்டு வைப்பதன் மூலம், தீமை செய்யும் பூச்சிகளை வயல்களுக்குள் இறங்காமல் தடுக்க முடியும். உயரமான இடத்தில் இருக்கும் ஆமணக்கு போன்ற செடிகளில்தான் தீமை செய்யும் பூச்சிகள் முதலில் உட்காரும். ஆகவே, நம் பயிர்களுக்குச் செல்லும் தீமை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும்.
நன்மை செய்யும் பூச்சிகள் விவசாயிகளின் நண்பர்கள் என்றால் சரி. எல்லா பூச்சிகளையும் நண்பர்கள் என எப்படிக் கூற முடியும்?
தீமை செய்யும் பூச்சிகளுக்கு நம் பயிர்கள்தான் உணவு. ஆனால் நன்மை செய்யும் பூச்சிகளுக்கு தீமை செய்யும் பூச்சிகள்தான் உணவு. தீமை செய்யும் பூச்சிகள் வயல்களில் கொஞ்சமாவது இருந்தால்தான் நன்மை செய்யும் பூச்சிகளும் நம் வயல்களிலேயே தங்கியிருக்கும். ஆகவே, நம் நண்பர்களாகிய நன்மை செய்யும் பூச்சிகளுக்கு உணவாகப் பயன்படுவதால் தீமை செய்யும் பூச்சிகளும் நமது நண்பர்களே.
இயற்கை சார்ந்த பூச்சிக் கட்டுப்பாட்டு முறையால் வேறு என்ன பயன்கள் உள்ளன?
கடந்த சில ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். சாகுபடிக்கு வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் ஏற்பட்ட நஷ்டமே விவசாயிகளின் தற்கொலைக்கு முக்கிய காரணமாக உள்ளது. ரசாயண உரங்களுக்கும், பூச்சிக்கொல்லி மருந்துகளுக்காகவும் விவசாயிகள் செய்யும் செலவு மிகவும் அதிகம். அப்படியிருந்தும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் அதிக மகசூல் இழப்பு ஏற்படுகிறது.
இந்த சூழலில் பூச்சிகளைக் கட்டுப்படுத்த இயற்கை சார்ந்த முறைகளைப் பயன்படுத் துவதன் மூலம் விவசாயிகளுக்கான சாகுபடி செலவு குறைகிறது. மகசூல் இழப்பு தடுக்கப்படுகிறது. இயற்கை சார்ந்த நமது சூழலியலும் பாதுகாக்கப்படுகிறது என்கிறார் செல்வம். பூச்சிகளைப் பராமரிப்பதற்கான உத்திகள் குறித்து மேலும் விவரங்களை அறிய 94435 38356 என்ற செல்போன் எண்ணில் அவரை தொடர்பு கொள்ளலாம்

‎சூடோமோனஸ்‬ புளோரசன்ஸின் பயன்கள்

சூடோமோனஸ் புளோரசன்ஸ் பயிர்களில் காற்று, மண், நீர் மூலம் பரவும் இலைக்கருகல், இலைப்புள்ளி நோய், குலைநோய், துருநோய், வாடல் நோய் போன்ற நோய்களை கட்டுப்படுத்தும் இயற்கை பூஞ்சான கொல்லியாகும்.
இதனை எல்லா பயிர்களுக்கும் கொடுக்கலாம் குறிப்பாக நெல், தக்காளி கத்தரி, வெண்டை, வெங்காயம், காலிபிளவர், மிளகாய், வெள்ளரி, அவரை, புடலை, பாகல், பழவகைகள் தானியப்பயறுகள், பயறுவகைபயிர்கள், பருத்தி, கடலை,தென்னை போன்ற அனைத்துவகை பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்.
பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்
பயிர்களில் ஏற்படும் தண்டு வாடல், இலைக்கருகல், இலைப்புள்ளி நோய், குலைநோய், அழுகல்நோய்களை கட்டுப்படுத்துகிறது.
பயிர்களுக்கு தேவையான வளர்ச்சிஊக்கிகளை ( ஹார்மோன்கள் ) உற்பத்தி செய்கிறது
பயிர்களின் வேர்களைத் தாக்கும் நூற்புழுக்களை ( நெமட்டோடு) கட்டுப்படுத்துகிறது
நிலத்தில் அளவுக்கு அதிகமாக உள்ள இரும்புச்சத்தை குறைத்து பயிரின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
பயன்படுத்தும் முறை
விதைநேர்த்தி செய்ய
5-10 கிராம் பவுடர் ஒரு கிலோ விதை, ஆறிய அரிசி வடிகஞ்சி 100மில்லி; என்ற விகிதத்தில் கலந்து நிழலில் 1மணி நேரம் உலர்த்தி பிறகு நடவு செய்யலாம்
நாற்று, கிழங்கு,கரணை நேர்த்தி செய்யும் முறை
1 கிலோ பவுடரை 100 லிட்டர் நீரில் கரைத்து அதில் நாற்று, கிழங்கு,கரணை ஆகியவற்றை நனைத்து நடவு செய்யலாம்
தெளிக்கும் முறை
1 கிலோ பவுடரை 100 லிட்டர் நீரில் கரைத்து அவற்றை காலை அல்லது மாலை வேளையில் பயிர்களுக்கு தெளிக்க வேண்டும்
அடியுரமாக
2 கிலோ பவுடர், அரைக்கிலோ நாட்டு சர்க்கரை, 200 கிலோ மக்கிய தொழுவுரம் மூன்றையும் தண்ணீர் தெளித்து நன்றாக கலந்து நிழலில் ஒரு வாரம் அல்லது 4 நாட்கள் கோணிச்சாக்கு அல்லது தென்னை மட்டை கொண்டு காற்று புகாமல் மூடி வைத்திருந்து பிறகு பயிர்களுக்கு எடுத்து போடலாம்.

வெள்ளாடுகளுக்கு ஏற்ற புற்கள் மற்றும் மொச்சையினப் பயிர்கள்

வெள்ளாடுகளை அதிக அளவில் வளர்க்கும்போது மரத்தழைகள் மட்டுமின்றிப் புற்களையும் மொச்சையினப் பயிர்களையும் வளர்த்துத் தீவனமாக அளிக்க வேண்டும். இது மிக இன்றியமையாதது. ஆகவே, இவை குறித்தும் விவாதிக்கலாம். இது குறித்து அலமாதி தீவன உற்பத்தி நிலைய விபரங்கள் பயனுள்ளதாக இருக்கும் எனக் கருதுகின்றேன்.
1. கோ- 1 கலப்பின நேப்பியர் புல் :
நமது நாட்டிற்கு ஏற்ற மிகச் சிறந்த புல் வகை ஆகும் இது. இது ஒரு எக்டேரில் 20,000 கிலோ ஓராண்டில் உற்பத்தியாகும். இவ்வகைப் புல்லைச் சிறிது சிறிதாக நறுக்கி, வெள்ளாடுகளுக்குத் தீவனமாக அளிக்க வேண்டும். பெரிய பண்ணையாளர்கள் தட்டை வெட்டும் கருவியைக் (Chaff Cutter) கண்டிப்பாக வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். மின்சாரத்தில் இயங்கும் தட்டை வெட்டும் கருவியையும் பல பண்ணையாளர்கள் வைத்துள்ளார்கள். தற்போது கோ-2 ரக புல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 33% அதிக மகசூல் கொடுக்கக்கூடியது. சாகுபடிக் குறிப்புகள்
எக்டேருக்கு 30,000 புல் துணுக்குகள் தேவைப்படும். 30-75 செ.மீ., இடைவெளியில் பார் அமைத்துப் புல் துணுக்குகளை நட வேண்டும். 150 கிலோ தழைச் சத்தும், 60 கிலோ மணிச் சத்தும் ஒரு எக்டேர் பயிருக்குத் தேவை. இப்புல்லுக்குத் தொடர்ந்து நீர் அளிப்பது தேவை. ஆகவே, நல்ல பாசன வசதிக்கு ஏற்ற இறைவை இயந்திரம் அவசியம். மழைக் காலத்தில் மழைக் காலத்தில் மழை பெய்யும் சூழ்நிலையைப் பொறுத்து, 15-20 நாளுக்கு ஒரு முறை நீர் பாய்ச்சலாம். கோடைக் காலத்தில் 8-10 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும்.
நட்ட 60 முதல் 75 நாட்களில் முதல் அறுவடை செய்யலாம். பின் 40 முதல் 45 நாட்களுக்கு ஒரு முறை அறுவடை செய்யலாம். இவ்வாறாக, ஆண்டிற்கு 5 முதல் 6 முறை அறுவடை செய்து 150 முதல் 200 டன் பசும்புல் பெறலாம். இதில் புரதம் 8% உள்ளது.
இப்புல்லுக்கு இடையே ஊடுபயிராக மொச்சையினச் செடிகளையும் பயிரிடலாம்.
2. கினிபுல் – அமில்வகை (Guinea Grass – Hamil) :
இதுவும் ஒரு சிறந்த புல் வகையே. இது ஓரளவு நிழலைத் தாங்குவதால், தென்னந்தோப்பு, வாழைத் தோட்டங்களில் பயிரிடலாம்.இதனைப் புல் துணுக்குகளாகவோ, விதை மூலமாகவோ பயிரிடலாம். எக்டேருக்கு 30-35,000 புல் துணுக்குகள் அல்லது 5 முதல் 6 கிலோ விதை தேவைப்படுகின்றன. வரிசைக்கு 45 முதல் 60 செ.மீ., இடைவெளி தேவை. 50 முதல் 60 நாட்களில் முதல் அறுவடையும், பின் 40-45 நாட்கள் இடைவெளியில் அறுவடை செய்யலாம். எக்டேருக்கு 100 முதல் 150 டன் வரை ஓராண்டில் கிடைக்கும் இப்புல்லில் புரதம் 7% அடங்கியுள்ளது.

3. எருமைப்புல் (Para Grass) :
இது வெள்ளாடுகளுக்கு ஏற்ற சிறிய வகைப் புல். பொதுவாகச் சாக்கடைக் கழிவு நீர் மூலம் பல நகராட்சிகளில் இது பயிரிடப்படுகின்றது.45-60 செ.மீ., இடைவெளிவிட்டு வரிசையாக நடலாம். புல் துணுக்குகள் மூலமே பயிரிட வேண்டும். உர அளவு கோ-1 போன்றே. இதற்கு அதிக நீர் தேவை. 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை மழைக் காலத்திலும், 8-10 நாட்களுக்கு ஒரு முறை கோடைக் காலத்திலும் நீர் பாய்ச்ச வேண்டும்.
முதல் அறுவடை 75 முதல் 80 நாட்களிலும், பின் 40 முதல் 45 நாட்களுக்கு ஒரு முறையும் அறுவடை செய்யலாம். ஆண்டுக்கு ஒரு எக்டேரில் 80 முதல் 100 டன் புல் கிடைக்கும். இதில் அடங்கியுள்ள புரத அளவு 7% ஆகும்.
மொச்சையினப் பயிர்கள் :
1. குதிரை மசால் (Lucerne) :
இது மிகச் சிறந்த பசுந்தீவனமாகும். இதனைப் பசுமையாகவும், காயவைத்தும் ஆடுகளுக்கு அளிக்கலாம். ஆனால் குதிரை மசால் தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் நன்கு வளர்வதில்லை. கோவை, பெரியார், சேலம், தர்மபுரி, திண்டுக்கல் மாவட்டங்களில் சில பகுதிகளில் குதிரை மசால் பலன் கொடுக்கின்றது. மற்ற மாவட்டங்களில் இது பயிரிட ஏற்றதில்லை. இது ஒரு பல்லாண்டுப் பயிர்.இதை விதைக்க ஏற்ற காலம் அக்டோபர் – நவம்பர் மாதமாகும். ஒரு எக்டேருக்கு 15 முதல் 20 கிலோ விதை தேவைப்படும். இதனை 20-25 செ.மீ., இடைவெளியில் வரிசையாகப் பயிரிடலாம். அல்லது தூவி விதைத்து விடலாம்.
வாரம் ஒரு முறை முதல் கட்டாயமாகவும், பின் 10-12 நாட்களுக்கு ஒரு முறையும் நீர் பாய்ச்ச வேண்டும். தழைச் சத்து 30 கிலோ, மணிச் சத்து 100 கிலோ தேவை.
70 நாட்களுக்குப் பின் முதலட அறுவடையும், பின் 25-30 நாட்களுக்கு ஒரு முறையும் அறுவடை செய்யலாம். ஆண்டில் 6 முதல் 7 தடவை அறுவடை செய்து, 60 முதல் 70 டன் பசுந்தீவனம் பெறலாம். புரதம் 20% அளவில் இப்புல்லில் உள்ளது.
2. ஸ்டைலோ (Stylosanthes) :
இப்பயிரைக் குதிரை மசால் பயிரிட முடியாத மற்ற இடங்களில் பயிரிடலாம். ஒரு எக்டேருக்கு 20-25 கிலோ விதை தேவைப்படும். வரிசைக்கிடையே 30 செ.மீ., இடைவெளி கொடுக்க வேண்டும். தழைச் சத்து 30 கிலோவும், மணிச் சத்து 60 கிலோவும் தேவை. கோடையிவ் 20-30 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும்.
முதல் அறுவடை 65-70 நாட்களிலும், பின் 35-45 நாட்களுக்கு ஒரு முறையும் அறுவடை செய்யலாம்.
ஆண்டில் 3 முதல் 5 முறை அறுவடை செய்து 30 முதல் 35 டன் பசுந்தழை பெறலாம். இப்புல்லில் புரதம் 18-20% அளவில் உள்ளது.
3. வேலிமசால் (Hedge Lucerne) :
இது வெள்ளாடுகளுக்கு ஒரு சிறந்த பசுந் தீவனப் பயிராகும். இதைத் தென்னந்தோப்பு, வாழைத் தோட்ட ஓரங்களிலும் பயிரிடலாம். தனிப்பயிராக எக்டேருக்கு 10 கிலோ விதை தேவைப்படும். 1 மீட்டர் இடைவெளி விட்டு, அடுத்த வரிசை விதை போட வேண்டும்.30 கிலோ தழைச் சத்தும், 50 கிலோ மணிச் சத்தும் தேவை. கோடையில், 20 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும். 1/2 முதல் 1 மீட்டர் உயரம் விட்டு அறுவடை செய்ய வேண்டும். பயிர் செய்த 4 மாத வயதில் முதல் அறுவடைக்குத் தயாராகும். பின் 1 முதல் 1 1/2 மாத இடைவெளியில், அறுவடை செய்யலாம். ஆண்டிற்கு 6 முதல் 7 முறை அறுவடை செய்து 18 முதல் 20 டன் பசுந்தழை பெறலாம். இப்புல்லின் புரத அளவு 18 – 20% ஆகும்.
இதனை கோ-1 மற்றும் கினி புல்லுடன் ஊடு பயிராகவும் பயிரிடலாம். இதனால் ஒன்றுன்கொன்று உதவி செய்து, அதிக மகசூல் பெற முடியும்.
இது தவிரச் சணப்புப் பயிரை நெல் அறுவடைக்குப் பின் பயிரிட்டு ஆடுகளுக்குப் பசுந்தழையாகவும், காய்ந்த தீவனமாகவும் அளிக்கலாம்.
இதுபோல் தட்டைப் பயற்றை மழைக்குப்பின் புஞ்சை நிலங்களில் விதைத்து ஆடுகளுக்குத் தீவனமாக அளிக்கலாம். தவிரவும், பயிர் செய்ய பயனற்ற தரிசு நிலங்களில் கொழுக்கட்டை (Buffel Grass) அல்லது மலை அருகம்புல் (Rhodes Grass) விதைக்கலாம். சுற்றி வேலிக்கருவை நட்டுக் காக்கலாம்.
ஒரு ஏக்கல் நிலத்தில் பசும்புல்லையும், துவரை இனத் தீவனத்தையும் வளர்த்தால், 30 ஆடுகளையும் அதன் குட்டிகளையும் வளர்க்க முடியும். குறிப்பிட்டுச் சொல்லுவதானால், கோ-1 புல், வேலிமசால் ஆகியவற்றை ஓர் ஏக்கரில் பயிரிட்டுச் சுற்றிலும் அகத்தி, சித்தகத்தி மரம் நட்டுத் தேவையான பசுந்தழை பெற்று, 30 வெள்ளாடுகளைப் பேண முடியும். இந்த ஆடுகள் வழங்கும் எரு நிலத்திற்கும் பயன்படும்.
வெள்ளாடுகளுக்கென்றே உள்ள சிறந்த தீவன மரங்களாவன:
* கொடுக்காய்புளி
* கருவேல்
* வெள்வேல்
* உடை (குடைவேல்)
* கிளுவை
கொடுக்காய்புளி மரப் பழங்களைப் பலர் விரும்பி உண்பார்கள். அதன் தழைகளில் முள் இருந்தாலும், வெள்ளாடுகள் விரும்பி, ஏன் முள்ளையும் சேர்த்தே உண்டுவிடும்.
கருவேல், வெள்வேல், குடைவேல் முதலான மரங்கள் விறகிற்காக வளர்க்கப்படுகின்றன. இதன் தழையையும், வெள்ளாடுகள் விரும்பி உண்ணும். அத்துடன் இம்மர நெற்றுகள் ஆடுகளுக்குச் சிறந்த தீவனமாகும். பலர் இந்நெற்றுகளைச் சேமித்துத் தீவனப் பற்றாக்குறைக் காலங்களில், ஆடுகளுக்குக் கொடுப்பார்கள். இதில் புரதம் நிறைய உள்ளது. சீமைக் கருவேல் நெற்றுத் தீவனமாகும்.
மேலும் கிளுவை மரங்களை வேலிகளில் வளர்ப்பார்கள். இதன் தழையையும் ஆடுகள் விரும்பி உண்ணும்.
வெள்ளாடுகள் அவை வளர்க்கப்படும் பகுதியில் உள்ள பல்வகைத் தழைகளை உண்ணப் பழகிக் கொள்ளும். உதாரணமாகச் சவுக்குப் பயிரிடப்படும் பகுதியில் சவுக்குத் தழையை உண்ணும். மைகொன்னை எனப்படும் மரத்தழையையும், சில வெள்ளாடுகள் உண்கின்றன.

Sunday 6 March 2016

ஜீவாமிர்தம்:

பசுஞ்சாணம் 10 கிலோ, நாட்டுமாடு சிறுநீர் 10 லிட்டர், வெல்லம் 2 கிலோ, பயறு மாவு (உளுந்து, துவரை போன்ற ஏதாவது ஒன்று)- 2 கிலோ, தண்ணீர் 200 லிட்டர் இவற்றுடன், உங்கள் நிலத்தின் மண்ணை ஒரு கைப்பிடி எடுத்து, பிளாஸ்டிக் கேன் அல்லது தொட்டியில் போட்டு 48 மணி நேரம், அதாவது இரண்டு நாட்கள் வைத்திருக்கவேண்டும். இந்தக் கலவையை மர நிழலில் வைத்திருப்பது முக்கியம். காலை, மதியம் மற்றும் மாலை என மூன்று வேளையும் கடிகார முள் சுற்றும் திசையில் குச்சியைக் கொண்டு கலக்கி வந்தால், ஜீவாமிர்தம் தயாராகிவிடும். இது ஒரு ஏக்கருக்கான அளவு.
இதை பாசன நீரில் கலந்துவிட்டோ... தெளிப்பான் மூலமாகவோ கொடுக்கலாம்.
நீம் அஸ்திரா தயாரிக்கும் முறை
நாட்டு மாட்டின் சாணம் 2 கிலோ, சிறுநீர் 10 லிட்டர், வேம்பு இலை மற்றும் அதன் குச்சிகள் 10 கிலோ. இவற்றை பெரிய பாத்திரத்தில்போட்டு 200 லிட்டர் நீரையும் ஊற்றி, 48 மணி நேரம் ஊற வைக்கவேண்டும். மூடி வைக்கக்கூடாது. கடிகாரச் சுற்றுக்கு எதிர் திசையில் மூன்று தடவை, கலக்கிவிடவேண்டும். பிறகு, கரைசலை வடிகட்டி, உரிய அளவில் நீர் கலந்து பயிர்களுக்குத் தெளிக்கவேண்டும்.

முட்டை ரசம் - பயிர் வளர்ச்சி ஊக்கி

பிளாஸ்டிக் பாத்திரத்தில் பத்து முட்டைகளை குறுகிய முனை கீழிருக்குமாறு வைத்து அவைகள் மூழ்குமளவிற்கு எலுமிச்சை சாற்றினை விட வேண்டும். அதற்குப்பிறகு இருநூறு கிராம் வெல்லத்தை பூரிதக்கரைசலாக நீரில் கலந்து அப்பாத்திரத்தில் ஊற்றி மூடி வைத்துவிடவேண்டும். பத்து நாட்களுக்கு பிறகு திறந்து பார்த்தால் முட்டை கூழ் வடிவில் மாறிவிடும். இதைக்கையால் பிசைந்து மீண்டும் இருநூறு கிராம் வெல்லக்கரைசலை ஊற்றி பத்து நாட்கள் மூடி வைத்துவிட வேண்டும். அதன் திறந்து பார்த்தால் முட்டை ரசம் தயார். பிறகு அதை வடிகட்டி பத்து லிட்டர் டேங்குக்கு இருநூறு மில்லி வீதம் கலந்து தெளிக்கலாம். மிகச்சிறந்த பயிர் வளர்ச்சி ஊக்கியாகும்.
வேம்பு புங்கன் கரைசல் :
தேவையான பொருட்கள் :-
வேப்பெண்ணை ஒரு லிட்டர்
புங்கன் எண்ணை ஒரு லிட்டர்
கோமியம் (பழையது) பத்து லிட்டர்
காதி சோப்பு கரைசல் அரை லிட்டர்
இவை அனைத்தையும் கலந்து வைத்து ஒருநாள் கழித்து உபயோகிக்கலாம். இவை ஒரு ஹெக்டர் அளவுக்கானது. இது எல்லா வகை பயிர்களுக்கும் மிகச்சிறந்த பூச்சி விரட்டி.
மீன் அமினோ கரைசல் :
உணவுக்கு பயன்படாத மீன் கழிவுகளை வாங்கி வந்து அதனுடன் சம அளவு பனை வெல்லம் சேர்த்து பிசைந்து ஒரு பிளாஸ்டிக் ட்ரம்மில் காற்று புகாது வைக்க வேண்டும்
21 நாட்கள் களைத்து பார்த்தால் கரைசல் தயாராகிவிடும்
10 லிட்டருக்கு 100 மில்லி என்ற அளவில் வயலில் தெளிக்கலாம்.
இது ஒரு மிகச்சிறந்த பயிர் வளர்ச்சி ஊக்கி.
இதைப்பற்றி சுரபாலர் கூட விருட்ச சாஸ்திரத்தில் கூறியுள்ளார்.
பழக்காடி கரைசல்
தேவையான பொருட்கள்:
சாணம்-20 கிலோ,
கெட்டுப்போன பழங்களின் கூழ் - 5 முதல் 10 கிலோ
தொல்லுயிர் கரைசல்-50 கிலோ,
தண்ணீர்-50 லிட்டர்,
ஜீவாமிர்தம் -5-10 லிட்டர்.
தே மோர் (அ) அரப்புமோர் -5-10 லிட்டர்.
இவை அனைத்தும் கலந்து 5 முதல் 7 நாட்கள் நொதிக்கவிட வேண்டும்.
இதன் மூலம் நுண்ணுயிர்கள் பலமடங்கு பெருகும். மாதம் ஒருமுறை வீதம் 5 முறை பாசன நீரில் பழங்காடி கரைசலை சீராகக் கலந்து செல்லும் வகையில் பயன் படுத்த வேண்டும். இக்கரைசல் ஒரு மிகச்சிறந்த பயிர் ஊக்கியாகும்.
தேமோர் கரைசல்
புளித்த மோர் - 5 லி
இளநீர் - 1 லி
இவற்றை கேனில் ஊற்றவும். 10 தேங்காய்களின் துருவல், அழுகிய பழங்கள் 10 கிலோ இவற்றை சாக்கு பையில் பொட்டலம் போல் கட்டி அதில் போடவும். ஏழாம் நாளில் ஊறல் தயாராகி விடும்.
1 ஏக்கருக்கு 10 லிட்டர் தண்ணீரில் அரை லிட்டர் தேமோர் கரைசல் சேர்த்து தெளிக்கவும்.
பிராந்திக்கு பதில் அரப்பு மோர் கரைசல்
பல ஊர்களில் ஜிப்ராலிக் ஆசிட் கரைக்க மற்றும் பூச்சி மருந்துகளுடன் பிராந்தி கலந்து அடிப்பதாக செய்திகள் வருகிறது. இது மிகவும் வருந்தத்தக்கது.
இயற்கையாகவே ஜிப்ராலிக் ஆசிட் தயார் செய்து கொள்ளலாம்.
அரப்பு இலைத்தூள் ஒரு லிட்டர் படியில் அளந்து எடுத்துக்கொள்ளவும். இத்துடன் ஒரு லிட்டர் இளநீர், ஐந்து லிட்டர் புளித்த மோர் ஊற்றி கலக்கவேண்டும். இந்த கரைசலை பானையில் ஒரு வாரம் வைத்திருக்க வேண்டும். பிறகு பத்து லிட்டர் நீரில் இருநூறு மில்லி அரப்பு மோர் கரைசலை கலந்து வயலில் தெளிக்கலாம். இதனால் நல்லா மகசூல் கிடைக்கும். ஜிப்ராலிக் ஆசிட் மற்றும் பிராந்தி செலவு ஆயிரம் என்றால் இந்த கரைசலை தயாரிக்க ஐம்பது ரூபாய் போதும்

Saturday 5 March 2016

இடத்திற்கு ஏற்ற மரங்களை தேர்வு செய்தல்

விட்டை சுற்றிய வைக்க ஏற்ற  மரங்கள்:
++++++++++++++++++++++++++++++++++++++
தென்னை ,சவுண்டல் ,சீத்தா ,வேப்பமரம் ,முருங்கை ,பப்பாளி ,நெல்லி மரம் ,கொய்யா மரம் ,மாதுளை ,அகத்தி ,பலா மரம் ,வாழை ,மருதாணி செடி , வாத நாராயண மரம் , தேக்கு , முள்ளிலாமுங்கில்
வறட்சி நிலத்திற்கான மரங்கள் :
+++++++++++++++++++++++++++++
மா ,வாகை ,வேம்பு , கொடுக்காபுளி ,சீத்தா ,உசிலை , நாவல் ,பனை ,நெல்லி ,சவுண்டல் ,புளியன் ,முருங்கை
உயிர் வேலி மரங்கள் :
++++++++++++++++++++
ஓதியன் ,பூவரசு ,கிளுவை ,கொடுக்காபுளி ,இலந்தை ,பனை ,பதிமுகம்,குமிழ் ,மலைவேம்பு , ,வெள்வேல் ,முள்ளிலாமுங்கில் ,
சாலை ஓரத்திருக்கான மரங்கள் :
++++++++++++++++++++++++++++
இலுப்பை ,வாகை ,நாவல் ,புளியமரம் ,புங்கமரம் ,வேப்பமரம் ,மருதமரம் ,புரசமரம் ,அத்திமரம் ,இச்சிமரம், தீக்குச்சிமரம்,பனை ,அரசமரம் ,ஆலமரம்,துங்குமுஞ்சிமரம்

Friday 4 March 2016

தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து

தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து ‘சீரகக் குடிநீர்’ தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இதை, நாள்முழுவதும், அவ்வப்போது பருகி வர, எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. நீர்மூலம் பரவும் நோய்களைத் தடுக்கலாம். பசி ருசியைத் தூண்டும் தன்மையும் ஆகும் இந்தச் சீரக நீர்.
* சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும்.
* மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும்.
*சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.
* சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள்உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்வதோடு, கோளாறு ஏற்படாது தடுக்கும். எனவே, வாரம் ஒருமுற தடுப்பு முறையாகக் கூட (Prophylactive) இதைச் சாப்பிடலாம்.
* உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு. எனவே, தினம் உணவில் சீரகத்தை ஏதாவது ஒரு வழியில் சேர்த்துக் கொள்வோம்.
* திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும். மத்தியதர இரத்த அழுத்த நோய் இருப்பவர்களுக்கு, மேலும் இரத்த அழுத்தம் அதிகரிக்காது தடுக்கும்.
* சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.
* அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்பநில மனநோய் குணமாகும்.
* சீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத்தை இவ்வைந்தையும் சேர்த்துத் தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு சிட்டிகை வீதம், தினம் இரண்டுவேளையாக சாப்பிட்டால், உடல் அசதி நீங்கி, புத்துணர்ச்சி ஏற்படும்.
* சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
* சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும்.
* சீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு வைத்து மைய்ய அரைத்து, எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால், குடல் கோளாறுகள் குணமாகும்.
* ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.
* பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதல் நோய்க்கு, சிறிது சீரகத்துடன் சின்ன வெங்காயம் வைத்து மைய்ய அரைத்து, பசும்பாலில் கலந்து குடித்து வர, நல்ல பலன் கிடக்கும்.
* சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.
* சீரகத்தை தேயிலைத் தூளுடன் சேர்தது கஷாயம் செய்து குடித்தால் சீதபேதி குணமாகும்.
* கொஞ்சம் சீரகமும், திப்பிலியும் சேர்த்துப் பொடித் தேனில் குழைத்து சாப்பிட்டால், தொடர் விக்கல் விலகும்.
* மஞ்சள் வாழைப் பழத்துடன், சிறிது சீரகம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.