Saturday 27 February 2016

நிலக்கடலை விவசாயம்



நிலக்கடலை விவசாயம்: பருவத்தே விதைத்திடல் பலனைக் கூட்டும். நிலக்கடலை விதைப்புக்குச் சிறந்த பருவம் ஜ¤ன் - ஜ¤லை மற்றும் டிசம்பர் - ஜனவரி மாதங்களே ஆகும்.
உயர் விளைச்சல் இரகங்கள்
உயர்விளைச்சல் இரகங்களைத் தேர்வு செய்து அவற்றில் விதை உற்பத்தி செய்வது நல்லது. ஏனெனில் அவைகள் குறைந்த வயதுடையவை. பூச்சி நோய் எதிர்ப்புத் திறன் உடையவை. அவற்றை பயிர் செய்து அதிக மகசூல் பெற்று அதிக லாபம் பெற முடியும்.
விளை நிலம் தேர்வு
நல்ல வளமான செம்மண்பாங்கான காற்றோட்டமும் நல்ல வடிகால் வசதி உடைய நிலமாக இருக்க வேண்டும்.

போரான் மற்றும் கால்சியம் (சுண்ணாம்புச்) சத்துக்கள் குறைபாடு இல்லாமல் இருக்க வேண்டும். அப்போதுதான் தரமான நல்ல விதைகளைப் பெறமுடியும்.
விதைத் தேர்வு:- 18/64” அளவுள்ள (7.2 மி.மீ. வட்டமுள்ள) வட்டக்கண் சல்லடை கொண்டு சலித்து நல்ல பருமனுள்ள, நோய் தாக்காத பொருக்கு விதைகளையே விதைப்புக்காக பயன்படுத்த வேண்டும். உடைந்து போன, சுருங்கிய மற்றும் மிகவும் வற்றிப்போன நோய் தாக்கிய விதைகளை நீக்கிவிட வேண்டும்.
விதை அளவு (ஒரு ஏக்கருக்கு)
சிறிய பருப்பு விதைகள் : (டிஎம்வி2, 7 போன்ற இரகங்கள்) = 50-55 கிலோ
பெரிய பருப்பு விதைகள் : (ஜேஎல்24, விஆர்ஐ2) = 55-60 கிலோ
பயிர் விலகு தூரம்:- நிலக்கடலை முற்றிலும் தன் மகரந்தச் சேர்க்கை கொண்ட பயிராகும். விதைக்கப் பயிரிடப்படும் இரகத்தை மற்ற இரகங்கள் பயிரிடப்படும் நிலத்திலிருந்து 3 மீட்டருக்கு அப்பாலுள்ள நிலத்தில்தான் பயிரிடவேண்டும். மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தில் முந்திய இரண்டு பருவங்களில் மற்ற இரக நிலக்கடலை பயிரிட்டிருக்கக் கூடாது.
விதை நேர்த்தி :-பயிர் நன்கு வளர்வதற்கு ஏற்ற சூழ்நிலைகள் நல்ல வகையில் அமையும் வண்ணம் விதைக்கும் செய்யப்படும் சில வழிமுறைகளே விதை நேர்த்தி ஆகும்.
நிலக்கடலையில் விதைமூலமும் மண்மூலமும் பரவும் வேர் அழுகல் தண்டு அழுகல் மற்றும் இலைப்புள்ளி நோய்களைக் கட்டுப்படுத்தவும் பயிர் எண்ணிக்கையைச் சீராகப் பராமரிக்கவும் உயிரியல் பூஞ்சாணக் கொல்லி அல்லது உயிரியல் பூஞ்சாண மருந்தான டிரைக்கோடெர்மா விரிடியைக் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். காற்றில் கரைந்துள்ள நைட்ரஜன் சத்தை பயிருக்கு அளிக்க டிஎன்ஏயூ14 ரைசோபியம் என்ற நுண்ணுயிரைக் கொண்டும் விதைக்கு விதை நேர்த்தி செய்து பின்னர் விதைக்க வேண்டும்.
பூசணக் கொல்லி விதை நேர்த்தி:- ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் திராம் மருந்தை கலந்து விதை நேர்த்தி செய்யவும். விதை நேர்த்தி செய்த விதைகளை குறைந்த பட்சம் 24 மணி நேரம் வைத்திருந்து விதைப்பது நல்லது.
பூஞ்சாண விதை நேர்த்தி:- டிரைக்கோ டெர்மா விரிடி என்ற உயிரியல் பூஞ்சாணக் கொல்லியை ஒரு கிலோ விதைப்பருப்புக்கு 4 கிராம் என்ற அளவில் பயன்படுத்த வேண்டும். விதையை விதைப்பிற்கு முன் ஈரப்படுத்தி பின் பூஞ்சாணத்தை அதன் மீது தூவி கலக்க வேண்டும்.
நிலம் தயாரித்தல்:- விதை உற்பத்தி செய்வதாகத் தேர்ந்தெடுத்த நிலத்தை நான்கைந்து முறை நன்கு உழவு செய்து கட்டிகளை உடைத்து புழுதிபட தயார் செய்ய வேண்டும். அகல உழுவதைவிட ஆழ உழவு செய்வது சாலச்சிறந்தது. கடைசி உழவிற்கு முன் ஒரு ஏக்கருக்கு 5 டன் (10 வண்டி) மக்கிய தொழு உரம் இடவேண்டும். நிலத்தை உழுது தயார் செய்த பின்னர் அதை விதைப்பதற்கு ஏற்றவாறு மண்ணின் தன்மை மற்றும் நீர் பிடிப்பு ஆகியவற்றைப் பொருத்து பாத்திகளாகவோ (அல்லது) பார்களாகவோ அமைத்துக் கொள்ளலாம்.
பயிர் இடைவெளி :- விதைக்கும் போது விதைக்கு விதை இடைவெளி விட்டு விதைப்பது மிக முக்கியமாகும். விதை விதைக்கும் போது வரிசைக்கு வரிசை ஒரு அடியும் (30 செ.மீ), செடிக்குச் செடி 15 செ.மீ. இடைவெளி இருக்குமாறு விதைக்க வேண்டும். விதைக்கப்படும் விதை 4 செ.மீ ஆழத்திற்கும் கீழே சென்று விடக்கூடாது.
பயிர் எண்ணிக்கை பராமரித்தல்:- நிலக்கடலையில் பயிர் எண்ணிக்கையை சீராகப் பராமரிப்பதன் மூலம் அதிக மகசூல் பெற முடியும். செடி எண்ணிக்கையைப் பராமரிக்க, கீழ்க்காணும் உத்திகளை பின்பற்ற வேண்டும்.
தேவையான அளவு விதைப்பருப்பைப் பயன்படுத்த வேண்டும்.
தூய்மையான, நன்கு முற்றிய பருமனான பொருக்கு விதைகளை பயன்படுத்த வேண்டும்.
விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.
முளைகட்டுதல் முறையினை பின்பற்றிட வேண்டும்.
நிலத்தைத் தயார் செய்யும்போது தனிக்கவனம் செலுத்த வேண்டும்.
விதைப்பில் நன்கு அனுபவமும் பயிற்சியும் பெற்ற நபர்களைக் கொண்டு சரியான இடைவெளி கொடுத்து விதைக்க வேண்டும்.
மேற்கூறிய முறைகளைக் கையாண்டு இடப்படும் உரம் வீணாகாமல் தடுத்து நன்கு பயன்படுத்தி செடிகளின் எண்ணிக்கை குறையாது பராமரித்து அதிக மகசூல் பெறலாம்.
உர நிர்வாகம் :- பயிர் செழித்து வளர்வதற்கும் பயிர்ச்சத்து குறைபாடு ஏற்படாமல் தவிர்க்க, வேர் வளர்ச்சிக்கும், பூக்கள் அதிகரிக்க மற்றும் வறட்சி, பூச்சி நோய்களைத் தாங்கி வளர்ந்து அதிக மகசூல் பெறுவதற்கு நிலக்கடலையில் ஒருங்கிணைந்த உர நிர்வாகம் செய்வது மிக அவசியமாகும்.
தொழு உரம் : ஒரு ஏக்கருக்கு 5 டன் நன்கு மக்கிய தொழு உரம் அல்லது கம்போஸ்ட் உரத்தினை இட்டு நிலத்தினை 4-5 தடவை நன்கு உழவு செய்ய வேண்டும்.
சில குறிப்புகள் :
நிலக்கடலையோடு தட்டைப்பயிர் வகையை ஊடுப்பயிராக பயிரிட்டால், சிவப்பு கம்பளி புழுவை கவரும் செடியாக தட்டைப்பயிறு இருக்கும்.
உலர் களத்தில் நிலக்கடலையை காயவைத்து, அதை, மரக்கட்டைக் கொண்டு அடிப்பதால் கடலையை பிரிக்கலாம்.
மணல் கலந்த மண்ணே நிலக்கடலை பயிர் செய்வதற்கு ஏற்றது ஏனெனில் அங்கு குறைந்த அளவே பருப்பு இல்லா கடலை உருவாகும்.
வயல் ஓரங்களில் தட்டைப்பயிறு வளர்ப்பதால், அது சிவப்பு கம்பளிப்புழு கவரும் செடியாகிவிடும்.
இரவு வேளையில் நிலக்கடலை வயலுக்கு அருகில் பல இடங்களில் வைக்கோல் எரித்தால், அதன் அருகில் வைத்திருக்கும் நீரிலோ ஆமணக்கு கலந்த நீரிலோ, தீ வெளிச்சத்தில் கவரப்பட்ட பூச்சிகள் விழும்.
சுண்ணாம்பு கரைசலைத் தெளிப்பதால், இலை சுருட்டுப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.
தண்ணீரை தெளிப்பதால் இலை சுருட்டுப்புழுவை கட்டுப்படுத்தலாம்.
புகையிலை வெட்டுப்புழுவின் தாக்குதலைக் குறைக்க ஆமணக்கு செடியை வரப்பு பயிராக பயிரிடவேண்டும்.
கோடை உழவு செய்வதால், சிவப்பு கம்பளிப்புழுவின் கூட்டுப்புழுவை வெளியேற்றி அழிக்கமுடியும்.
10 கிலோ / சோற்றுக் கற்றாழையை நன்றாக அரைத்து தண்ணீரில் கலந்து தெளிப்பதால் சிவப்பு கம்பளிப்புழு தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.
நிலக்கடலையில் வட்ட ‘மொசைக்’ நோயைக் கட்டுப்படுத்த காய்ந்த சோளம் / தென்னை ஓலையை தூளாக்கி 600 செ வெப்பநிலையில் தண்ணீரில் ஒரு மணி நேரம் கொதிக்க வைத்துப்பின் வடிகட்டி அதில் நீர் கலந்து விதைத்த 10 ஆம் நாள் 20 நாள் என இருதடவைத் தெளிப்பது நல்லது.
இரண்டாவது அல்லது மூன்றாவது நீர்ப்பாசனம் செய்யும்போது பாசன நீருடன் வேப்பஎண்ணெயை கலந்து விடுவதால் வேர் அழுகல் நோய் கட்டுப்படும்.
ஏக்கருக்கு 6லி வேப்ப எண்ணெய் தெளிப்பதால் வேர் அழுகல் நோய் கட்டுப்படும்.
4 சதவீதம் வேப்பஎண்ணெய் கரைசல் அல்லது 6 சதவீதம் வேப்பங்கொட்டை சாறு தெளிப்பதால் துரு நோயைக் கட்டுப்படுத்தலாம்.
அறுவடை நுட்பங்கள்
நுனி இலை மஞ்சளாக மாறுதல் மற்றும்
அடி இலைகள் காய்ந்து உதிர்வது பயிர் முதிர்ச்சி அடைந்ததற்கு அறிகுறியாகும்.
சில செடிகளைப் பிடுங்கி காய்களை உடைத்துப் பார்த்தால் தோலின் உட்பாகம் கரும்பழுப்பு நிறமாக இருக்கும்.சரியான அறுவடைத் தருணம்
நிலம் காய்ந்து இருந்தால் நீர்பாய்ச்சியபின் களை கொத்து மூலமாகவோ, கையினாலோ செடிகளை பிடுங்க வேண்டும்.
செடிகளைப் பிடுங்கி காய்களைப் பறிக்காமல் குவித்து வைக்கக் கூடாது.
செடிகளைப் பிடுங்கி சேகரித்தவுடன் ஆட்களை கொண்டு காய்களை செடியிலிருந்து பரித்தெடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment