Saturday 27 February 2016

மல்லி! 15 சென்ட்... மாதம் ரூ15 ஆயிரம்!

நடவுக்கு ஏற்ற ஆடிப்பட்டம்!
15 சென்ட் நிலத்தில் மல்லிகை சாகுபடி செய்வது குறித்து, செந்தில்குமார் சொன்ன விஷயங்கள் பாடமாக இங்கே...
களர், உவர் மண்ணைத் தவிர மற்ற எல்லா மண் வகைகளும் மல்லிகைக்கு ஏற்றவை. ஆடிப்பட்டம் சாகுபடிக்கு ஏற்றது. தேர்வு செய்த 15 சென்ட் நிலத்தில் ஒரு டிராக்டர் தொழுவுரம் அல்லது ஒரு டிராக்டர் கோழி எருவைக் கொட்டி இறைத்து... கொக்கிக் கலப்பையால் இரண்டு சால் உழவு செய்ய வேண்டும். அடுத்து ரோட்டோவேட்டரால் இரண்டு சால் உழவு செய்ய வேண்டும்.
4 அடி இடைவெளி!
பிறகு, 4 அடிக்கு 4 அடி இடைவெளியில் ஒரு கன அடி அளவுக்கு குழி எடுத்து, ஒரு வாரம் ஆறப்போட வேண்டும். சம அளவில் கலக்கப்பட்ட கோழி எரு+தொழுவுரக் கலவையில் ஒரு குழிக்கு இரண்டு கிலோ என்ற கணக்கில் இட்டு மேல் மண்ணைக் கொண்டு மூட வேண்டும். மூடும்போது தரைமட்டத்தில் இருந்து 4 விரல் அளவில் பள்ளம் இருப்பதுபோல மூட வேண்டும். அப்போதுதான் தண்ணீர் நிற்கும். ஒவ்வொரு குழியின் மையத்திலும் குழிக்கு இரண்டு நாற்றுகள் வீதம் நடவு செய்து உயிர் தண்ணீர் கொடுக்க வேண்டும். 15 சென்ட் நிலத்தில் நிலத்தின் அமைப்பைப் பொறுத்து 400 முதல் 425 குழிகள் வரை எடுக்கலாம். மொத்தம் 800 முதல் 850 செடிகள் வரை தேவைப்படும்.
வளமாக்கும் இயற்கை இடுபொருட்கள்!
நடவு செய்த 15 நாட்களில் வேர் பிடித்து செடிகள் வளர ஆரம்பிக்கும். பிறகு, தேவைப்பட்டால், செடிகளுக்கு இடையில் வரப்பு, வாய்க்கால் ஓரங்களில் மிளகாய், வெங்காயம் என ஊடுபயிர் சாகுபடி செய்யலாம். ஊடுபயிர் சாகுபடி செய்தால் களைகள் குறைவாக இருக்கும். நடவுசெய்த 30-ம் நாள் முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை களை எடுக்க வேண்டும். மாதம் ஒரு முறை 500 கிலோ தொழுவுரத்தை நிலம் முழுவதும் இறைத்துவிட வேண்டும். செடிகளில் பூ பூக்கும் வரை, 10 நாட்களுக்கு ஒரு முறை 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா எனக் கலந்து தெளிக்க வேண்டும். பூ எடுத்த பிறகு, வாரம் ஒரு முறை இந்தக்கரைசலைத் தெளிக்க வேண்டும்.
15 நாட்கள் இடைவெளியில் சுழற்சி முறையில்... 10 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் பழக்கரைசல்; 10 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் மூலிகைப் பூச்சிவிரட்டி என மாற்றி மாற்றித் தெளிக்க வேண்டும்.
கடலைப்பிண்ணாக்கு, எள்ளு பிண்ணாக்கு, வேப்பங்கொட்டைத்தூள் ஆகியவற்றில் தலா 15 கிலோ, சூடோமோனஸ் 250 கிராம், டிரைக்கோடெர்மா விரிடி 250 கிராம் ஆகியவற்றை 20 லிட்டர் தண்ணீர், 20 லிட்டர் மாட்டுச் சிறுநீரில் 3 நாட்கள் ஊற வைக்க வேண்டும். இக்கரைசலில் 50 லிட்டர் தண்ணீர் சேர்த்துக் கரைத்து... மூன்று மாதங்களுக்கு ஒரு முறை செடிக்கு 200 மில்லி என்ற அளவில் ஊற்றி விட வேண்டும்.
பூச்சித்தாக்குதலைக் குறைக்கும் இஞ்சி-பூண்டுக் கரைசல்!
15 நாட்களுக்கு ஒருமுறை மூலிகைப் பூச்சிவிரட்டி தெளிப்பதால், பூச்சித்தாக்குதல் இருக்காது. அப்படியும் பூச்சிகள் வந்தால்... 50 லிட்டர் தண்ணீரில் 50 மில்லி வேப்பெண்ணய், 50 மில்லி புங்கன் எண்ணெய், 25 கிராம் காதி சோப் ஆகியவற்றைக் கலந்து தெளிக்கலாம். அல்லது, இஞ்சி-250 கிராம், பூண்டு-500 கிராம், பச்சை மிளகாய்-500 கிராம் ஆகியவற்றை மிக்ஸியில் இட்டு அரைத்து, ஒரு லிட்டர் மாட்டு சிறுநீரில் ஓர் இரவு ஊற வைத்து, 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி வீதம் தெளிக்கலாம். மார்கழி மாதத்தில் பூக்கள் குறைவாக இருக்கும். அந்தச் சமயத்தில் செடிகளை தரையிலிருந்து ஓர் அடி உயரம் மட்டும் விட்டு கவாத்து செய்ய வேண்டும். அதனால், புதுத் தளிர்கள் முளைத்து ஒன்றரை மாதங்களில் மீண்டும் பூவெடுக்கும்.

No comments:

Post a Comment