Saturday 27 February 2016

நிலக்கடலை விவசாயம்



நிலக்கடலை விவசாயம்: பருவத்தே விதைத்திடல் பலனைக் கூட்டும். நிலக்கடலை விதைப்புக்குச் சிறந்த பருவம் ஜ¤ன் - ஜ¤லை மற்றும் டிசம்பர் - ஜனவரி மாதங்களே ஆகும்.
உயர் விளைச்சல் இரகங்கள்
உயர்விளைச்சல் இரகங்களைத் தேர்வு செய்து அவற்றில் விதை உற்பத்தி செய்வது நல்லது. ஏனெனில் அவைகள் குறைந்த வயதுடையவை. பூச்சி நோய் எதிர்ப்புத் திறன் உடையவை. அவற்றை பயிர் செய்து அதிக மகசூல் பெற்று அதிக லாபம் பெற முடியும்.
விளை நிலம் தேர்வு
நல்ல வளமான செம்மண்பாங்கான காற்றோட்டமும் நல்ல வடிகால் வசதி உடைய நிலமாக இருக்க வேண்டும்.

போரான் மற்றும் கால்சியம் (சுண்ணாம்புச்) சத்துக்கள் குறைபாடு இல்லாமல் இருக்க வேண்டும். அப்போதுதான் தரமான நல்ல விதைகளைப் பெறமுடியும்.
விதைத் தேர்வு:- 18/64” அளவுள்ள (7.2 மி.மீ. வட்டமுள்ள) வட்டக்கண் சல்லடை கொண்டு சலித்து நல்ல பருமனுள்ள, நோய் தாக்காத பொருக்கு விதைகளையே விதைப்புக்காக பயன்படுத்த வேண்டும். உடைந்து போன, சுருங்கிய மற்றும் மிகவும் வற்றிப்போன நோய் தாக்கிய விதைகளை நீக்கிவிட வேண்டும்.
விதை அளவு (ஒரு ஏக்கருக்கு)
சிறிய பருப்பு விதைகள் : (டிஎம்வி2, 7 போன்ற இரகங்கள்) = 50-55 கிலோ
பெரிய பருப்பு விதைகள் : (ஜேஎல்24, விஆர்ஐ2) = 55-60 கிலோ
பயிர் விலகு தூரம்:- நிலக்கடலை முற்றிலும் தன் மகரந்தச் சேர்க்கை கொண்ட பயிராகும். விதைக்கப் பயிரிடப்படும் இரகத்தை மற்ற இரகங்கள் பயிரிடப்படும் நிலத்திலிருந்து 3 மீட்டருக்கு அப்பாலுள்ள நிலத்தில்தான் பயிரிடவேண்டும். மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தில் முந்திய இரண்டு பருவங்களில் மற்ற இரக நிலக்கடலை பயிரிட்டிருக்கக் கூடாது.
விதை நேர்த்தி :-பயிர் நன்கு வளர்வதற்கு ஏற்ற சூழ்நிலைகள் நல்ல வகையில் அமையும் வண்ணம் விதைக்கும் செய்யப்படும் சில வழிமுறைகளே விதை நேர்த்தி ஆகும்.
நிலக்கடலையில் விதைமூலமும் மண்மூலமும் பரவும் வேர் அழுகல் தண்டு அழுகல் மற்றும் இலைப்புள்ளி நோய்களைக் கட்டுப்படுத்தவும் பயிர் எண்ணிக்கையைச் சீராகப் பராமரிக்கவும் உயிரியல் பூஞ்சாணக் கொல்லி அல்லது உயிரியல் பூஞ்சாண மருந்தான டிரைக்கோடெர்மா விரிடியைக் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். காற்றில் கரைந்துள்ள நைட்ரஜன் சத்தை பயிருக்கு அளிக்க டிஎன்ஏயூ14 ரைசோபியம் என்ற நுண்ணுயிரைக் கொண்டும் விதைக்கு விதை நேர்த்தி செய்து பின்னர் விதைக்க வேண்டும்.
பூசணக் கொல்லி விதை நேர்த்தி:- ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் திராம் மருந்தை கலந்து விதை நேர்த்தி செய்யவும். விதை நேர்த்தி செய்த விதைகளை குறைந்த பட்சம் 24 மணி நேரம் வைத்திருந்து விதைப்பது நல்லது.
பூஞ்சாண விதை நேர்த்தி:- டிரைக்கோ டெர்மா விரிடி என்ற உயிரியல் பூஞ்சாணக் கொல்லியை ஒரு கிலோ விதைப்பருப்புக்கு 4 கிராம் என்ற அளவில் பயன்படுத்த வேண்டும். விதையை விதைப்பிற்கு முன் ஈரப்படுத்தி பின் பூஞ்சாணத்தை அதன் மீது தூவி கலக்க வேண்டும்.
நிலம் தயாரித்தல்:- விதை உற்பத்தி செய்வதாகத் தேர்ந்தெடுத்த நிலத்தை நான்கைந்து முறை நன்கு உழவு செய்து கட்டிகளை உடைத்து புழுதிபட தயார் செய்ய வேண்டும். அகல உழுவதைவிட ஆழ உழவு செய்வது சாலச்சிறந்தது. கடைசி உழவிற்கு முன் ஒரு ஏக்கருக்கு 5 டன் (10 வண்டி) மக்கிய தொழு உரம் இடவேண்டும். நிலத்தை உழுது தயார் செய்த பின்னர் அதை விதைப்பதற்கு ஏற்றவாறு மண்ணின் தன்மை மற்றும் நீர் பிடிப்பு ஆகியவற்றைப் பொருத்து பாத்திகளாகவோ (அல்லது) பார்களாகவோ அமைத்துக் கொள்ளலாம்.
பயிர் இடைவெளி :- விதைக்கும் போது விதைக்கு விதை இடைவெளி விட்டு விதைப்பது மிக முக்கியமாகும். விதை விதைக்கும் போது வரிசைக்கு வரிசை ஒரு அடியும் (30 செ.மீ), செடிக்குச் செடி 15 செ.மீ. இடைவெளி இருக்குமாறு விதைக்க வேண்டும். விதைக்கப்படும் விதை 4 செ.மீ ஆழத்திற்கும் கீழே சென்று விடக்கூடாது.
பயிர் எண்ணிக்கை பராமரித்தல்:- நிலக்கடலையில் பயிர் எண்ணிக்கையை சீராகப் பராமரிப்பதன் மூலம் அதிக மகசூல் பெற முடியும். செடி எண்ணிக்கையைப் பராமரிக்க, கீழ்க்காணும் உத்திகளை பின்பற்ற வேண்டும்.
தேவையான அளவு விதைப்பருப்பைப் பயன்படுத்த வேண்டும்.
தூய்மையான, நன்கு முற்றிய பருமனான பொருக்கு விதைகளை பயன்படுத்த வேண்டும்.
விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.
முளைகட்டுதல் முறையினை பின்பற்றிட வேண்டும்.
நிலத்தைத் தயார் செய்யும்போது தனிக்கவனம் செலுத்த வேண்டும்.
விதைப்பில் நன்கு அனுபவமும் பயிற்சியும் பெற்ற நபர்களைக் கொண்டு சரியான இடைவெளி கொடுத்து விதைக்க வேண்டும்.
மேற்கூறிய முறைகளைக் கையாண்டு இடப்படும் உரம் வீணாகாமல் தடுத்து நன்கு பயன்படுத்தி செடிகளின் எண்ணிக்கை குறையாது பராமரித்து அதிக மகசூல் பெறலாம்.
உர நிர்வாகம் :- பயிர் செழித்து வளர்வதற்கும் பயிர்ச்சத்து குறைபாடு ஏற்படாமல் தவிர்க்க, வேர் வளர்ச்சிக்கும், பூக்கள் அதிகரிக்க மற்றும் வறட்சி, பூச்சி நோய்களைத் தாங்கி வளர்ந்து அதிக மகசூல் பெறுவதற்கு நிலக்கடலையில் ஒருங்கிணைந்த உர நிர்வாகம் செய்வது மிக அவசியமாகும்.
தொழு உரம் : ஒரு ஏக்கருக்கு 5 டன் நன்கு மக்கிய தொழு உரம் அல்லது கம்போஸ்ட் உரத்தினை இட்டு நிலத்தினை 4-5 தடவை நன்கு உழவு செய்ய வேண்டும்.
சில குறிப்புகள் :
நிலக்கடலையோடு தட்டைப்பயிர் வகையை ஊடுப்பயிராக பயிரிட்டால், சிவப்பு கம்பளி புழுவை கவரும் செடியாக தட்டைப்பயிறு இருக்கும்.
உலர் களத்தில் நிலக்கடலையை காயவைத்து, அதை, மரக்கட்டைக் கொண்டு அடிப்பதால் கடலையை பிரிக்கலாம்.
மணல் கலந்த மண்ணே நிலக்கடலை பயிர் செய்வதற்கு ஏற்றது ஏனெனில் அங்கு குறைந்த அளவே பருப்பு இல்லா கடலை உருவாகும்.
வயல் ஓரங்களில் தட்டைப்பயிறு வளர்ப்பதால், அது சிவப்பு கம்பளிப்புழு கவரும் செடியாகிவிடும்.
இரவு வேளையில் நிலக்கடலை வயலுக்கு அருகில் பல இடங்களில் வைக்கோல் எரித்தால், அதன் அருகில் வைத்திருக்கும் நீரிலோ ஆமணக்கு கலந்த நீரிலோ, தீ வெளிச்சத்தில் கவரப்பட்ட பூச்சிகள் விழும்.
சுண்ணாம்பு கரைசலைத் தெளிப்பதால், இலை சுருட்டுப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.
தண்ணீரை தெளிப்பதால் இலை சுருட்டுப்புழுவை கட்டுப்படுத்தலாம்.
புகையிலை வெட்டுப்புழுவின் தாக்குதலைக் குறைக்க ஆமணக்கு செடியை வரப்பு பயிராக பயிரிடவேண்டும்.
கோடை உழவு செய்வதால், சிவப்பு கம்பளிப்புழுவின் கூட்டுப்புழுவை வெளியேற்றி அழிக்கமுடியும்.
10 கிலோ / சோற்றுக் கற்றாழையை நன்றாக அரைத்து தண்ணீரில் கலந்து தெளிப்பதால் சிவப்பு கம்பளிப்புழு தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.
நிலக்கடலையில் வட்ட ‘மொசைக்’ நோயைக் கட்டுப்படுத்த காய்ந்த சோளம் / தென்னை ஓலையை தூளாக்கி 600 செ வெப்பநிலையில் தண்ணீரில் ஒரு மணி நேரம் கொதிக்க வைத்துப்பின் வடிகட்டி அதில் நீர் கலந்து விதைத்த 10 ஆம் நாள் 20 நாள் என இருதடவைத் தெளிப்பது நல்லது.
இரண்டாவது அல்லது மூன்றாவது நீர்ப்பாசனம் செய்யும்போது பாசன நீருடன் வேப்பஎண்ணெயை கலந்து விடுவதால் வேர் அழுகல் நோய் கட்டுப்படும்.
ஏக்கருக்கு 6லி வேப்ப எண்ணெய் தெளிப்பதால் வேர் அழுகல் நோய் கட்டுப்படும்.
4 சதவீதம் வேப்பஎண்ணெய் கரைசல் அல்லது 6 சதவீதம் வேப்பங்கொட்டை சாறு தெளிப்பதால் துரு நோயைக் கட்டுப்படுத்தலாம்.
அறுவடை நுட்பங்கள்
நுனி இலை மஞ்சளாக மாறுதல் மற்றும்
அடி இலைகள் காய்ந்து உதிர்வது பயிர் முதிர்ச்சி அடைந்ததற்கு அறிகுறியாகும்.
சில செடிகளைப் பிடுங்கி காய்களை உடைத்துப் பார்த்தால் தோலின் உட்பாகம் கரும்பழுப்பு நிறமாக இருக்கும்.சரியான அறுவடைத் தருணம்
நிலம் காய்ந்து இருந்தால் நீர்பாய்ச்சியபின் களை கொத்து மூலமாகவோ, கையினாலோ செடிகளை பிடுங்க வேண்டும்.
செடிகளைப் பிடுங்கி காய்களைப் பறிக்காமல் குவித்து வைக்கக் கூடாது.
செடிகளைப் பிடுங்கி சேகரித்தவுடன் ஆட்களை கொண்டு காய்களை செடியிலிருந்து பரித்தெடுக்க வேண்டும்.

மல்லி! 15 சென்ட்... மாதம் ரூ15 ஆயிரம்!

நடவுக்கு ஏற்ற ஆடிப்பட்டம்!
15 சென்ட் நிலத்தில் மல்லிகை சாகுபடி செய்வது குறித்து, செந்தில்குமார் சொன்ன விஷயங்கள் பாடமாக இங்கே...
களர், உவர் மண்ணைத் தவிர மற்ற எல்லா மண் வகைகளும் மல்லிகைக்கு ஏற்றவை. ஆடிப்பட்டம் சாகுபடிக்கு ஏற்றது. தேர்வு செய்த 15 சென்ட் நிலத்தில் ஒரு டிராக்டர் தொழுவுரம் அல்லது ஒரு டிராக்டர் கோழி எருவைக் கொட்டி இறைத்து... கொக்கிக் கலப்பையால் இரண்டு சால் உழவு செய்ய வேண்டும். அடுத்து ரோட்டோவேட்டரால் இரண்டு சால் உழவு செய்ய வேண்டும்.
4 அடி இடைவெளி!
பிறகு, 4 அடிக்கு 4 அடி இடைவெளியில் ஒரு கன அடி அளவுக்கு குழி எடுத்து, ஒரு வாரம் ஆறப்போட வேண்டும். சம அளவில் கலக்கப்பட்ட கோழி எரு+தொழுவுரக் கலவையில் ஒரு குழிக்கு இரண்டு கிலோ என்ற கணக்கில் இட்டு மேல் மண்ணைக் கொண்டு மூட வேண்டும். மூடும்போது தரைமட்டத்தில் இருந்து 4 விரல் அளவில் பள்ளம் இருப்பதுபோல மூட வேண்டும். அப்போதுதான் தண்ணீர் நிற்கும். ஒவ்வொரு குழியின் மையத்திலும் குழிக்கு இரண்டு நாற்றுகள் வீதம் நடவு செய்து உயிர் தண்ணீர் கொடுக்க வேண்டும். 15 சென்ட் நிலத்தில் நிலத்தின் அமைப்பைப் பொறுத்து 400 முதல் 425 குழிகள் வரை எடுக்கலாம். மொத்தம் 800 முதல் 850 செடிகள் வரை தேவைப்படும்.
வளமாக்கும் இயற்கை இடுபொருட்கள்!
நடவு செய்த 15 நாட்களில் வேர் பிடித்து செடிகள் வளர ஆரம்பிக்கும். பிறகு, தேவைப்பட்டால், செடிகளுக்கு இடையில் வரப்பு, வாய்க்கால் ஓரங்களில் மிளகாய், வெங்காயம் என ஊடுபயிர் சாகுபடி செய்யலாம். ஊடுபயிர் சாகுபடி செய்தால் களைகள் குறைவாக இருக்கும். நடவுசெய்த 30-ம் நாள் முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை களை எடுக்க வேண்டும். மாதம் ஒரு முறை 500 கிலோ தொழுவுரத்தை நிலம் முழுவதும் இறைத்துவிட வேண்டும். செடிகளில் பூ பூக்கும் வரை, 10 நாட்களுக்கு ஒரு முறை 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா எனக் கலந்து தெளிக்க வேண்டும். பூ எடுத்த பிறகு, வாரம் ஒரு முறை இந்தக்கரைசலைத் தெளிக்க வேண்டும்.
15 நாட்கள் இடைவெளியில் சுழற்சி முறையில்... 10 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் பழக்கரைசல்; 10 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் மூலிகைப் பூச்சிவிரட்டி என மாற்றி மாற்றித் தெளிக்க வேண்டும்.
கடலைப்பிண்ணாக்கு, எள்ளு பிண்ணாக்கு, வேப்பங்கொட்டைத்தூள் ஆகியவற்றில் தலா 15 கிலோ, சூடோமோனஸ் 250 கிராம், டிரைக்கோடெர்மா விரிடி 250 கிராம் ஆகியவற்றை 20 லிட்டர் தண்ணீர், 20 லிட்டர் மாட்டுச் சிறுநீரில் 3 நாட்கள் ஊற வைக்க வேண்டும். இக்கரைசலில் 50 லிட்டர் தண்ணீர் சேர்த்துக் கரைத்து... மூன்று மாதங்களுக்கு ஒரு முறை செடிக்கு 200 மில்லி என்ற அளவில் ஊற்றி விட வேண்டும்.
பூச்சித்தாக்குதலைக் குறைக்கும் இஞ்சி-பூண்டுக் கரைசல்!
15 நாட்களுக்கு ஒருமுறை மூலிகைப் பூச்சிவிரட்டி தெளிப்பதால், பூச்சித்தாக்குதல் இருக்காது. அப்படியும் பூச்சிகள் வந்தால்... 50 லிட்டர் தண்ணீரில் 50 மில்லி வேப்பெண்ணய், 50 மில்லி புங்கன் எண்ணெய், 25 கிராம் காதி சோப் ஆகியவற்றைக் கலந்து தெளிக்கலாம். அல்லது, இஞ்சி-250 கிராம், பூண்டு-500 கிராம், பச்சை மிளகாய்-500 கிராம் ஆகியவற்றை மிக்ஸியில் இட்டு அரைத்து, ஒரு லிட்டர் மாட்டு சிறுநீரில் ஓர் இரவு ஊற வைத்து, 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி வீதம் தெளிக்கலாம். மார்கழி மாதத்தில் பூக்கள் குறைவாக இருக்கும். அந்தச் சமயத்தில் செடிகளை தரையிலிருந்து ஓர் அடி உயரம் மட்டும் விட்டு கவாத்து செய்ய வேண்டும். அதனால், புதுத் தளிர்கள் முளைத்து ஒன்றரை மாதங்களில் மீண்டும் பூவெடுக்கும்.

Saturday 20 February 2016

களை மேலாண்மை

களை எடுக்காவிட்டால் மகசூல் நான்கில் 3 பங்கு குறையும் (களை எடுக்கா பயிர் கால் பயிர்).
•வறண்ட நிலத்திற்கு களை எடுப்பு தேவையில்லை. களை எடுக்கா நிலத்தில் களைப் பயிர் வளர்ச்சியானது, இயற்கையாகக் குறைந்து, அது மண் ஈரத்தை காக்க உதவும்.
•அடிக்கடி உழவுச் செய்தால், களை எண்ணிக்கை குறையும்.
•அருகம்புல் வயலில் இருந்தால் பயிர் மகசூல் குறையும்.
•கரும்மண் நிலத்தில் அருகம்புல் இருந்தால், அதைக் கட்டுப்படுத்த 3 வருடங்கள் வரை நிலத்தை அப்படியே போட்டுவிடவேண்டும்.
•பசுந்தாள் உரச்செடிகளான சணப்பு, கொழிஞ்சியும் சாகுபடி செய்து அது பூப்பதற்கு முன்பு மடக்கி உழுதால், களை குறையும்.
•ஆரை களையை கட்டுப்படுத்த எருக்களை செடியை பசுந்தாள் உரச்செடியாகச் சாகுபடி செய்யவேண்டும்.
•கோரைப்புல்லை கட்டுப்படுத்த கொள்ளுப்பயிரைச் சாகுபடி செய்யவேண்டும்.
•கோரையை அழிக்க, அன்னப்பறவையை வயலில் விடலாம்.
•வேப்பமரத்தினால் செய்யப்பட்ட கலப்பையை அடிக்கடி வயலில் உழவு செய்வதாலும், வேப்பம் புண்ணாக்கை அடிக்கடி வயலில் இட்டாலும் கோரையைக் கட்டுப்படுத்தலாம்.
•1 கிலோ உப்புடன் 100 கிராம் சர்வோதய சோப் சேர்த்து, அதை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்தால், கோரையைத் தவிர அனைத்துவிதக் களைகளையும் கட்டுப்படுத்தலாம்.
•கோரையைக் கட்டுப்படுத்த உழவுச் செய்யும் போதும், விதைப்பு செய்யும் போதும் வயலில் 50 கிலோ வேப்பம்புண்ணாக்கை இடவேண்டும்.
•பார்த்தீனியம் களையை அழிக்க 200 கிராம் உப்பை தண்ணீருக்கு 1 லிட்டர் என்ற அளவில் கலந்துத் தெளிக்கலாம்.
•வயலில் தொடர்ந்து நீர் நிற்கும்மாறு நீர்க்கட்டினால், சிலசமயம் பல களைக்களை கட்டுப்படுத்தலாம்

Wednesday 10 February 2016

கூடுதல் மகசூல் பெற நெல் நடவு வயலில் ஊட்டச்சத்து மேலாண்மை

கூடுதல் மகசூல் பெற நெல் நடவு வயலில் ஊட்டச்சத்து மேலாண்மை செய்யலாம் என, வேளாண் துறை யோசனை தெரிவித்துள்ளது.
சம்பா நெல் நடவு சாகுபடி செய்யும் விவசாயிகள் பின்வரும் வழிமுறைகளில் ஊட்டச்சத்து மேலாண்மையை மேற்கொண்டால் கூடுதல் மகசூல் பெறமுடியும். தற்போது சம்பா நெல் நடவுப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், நடவு வயலுக்குத் தேவையான ஊட்டச்சத்து அளிப்பது இன்றியமையாதது. ஊட்டச்சத்து மேலாண்மையை முறையாக மேற்கொண்டால் நெற்பயிருக்குத் தேவையான சத்துகள் கிடைத்து நெல் பயிர்கள் நன்கு செழித்து வளரும்.
கரிம (அங்கக) உரங்கள்: 1 ஏக்கருக்கு 5 டன் மக்கிய தொழுஉரம் அல்லது கம்போஸ்ட் மற்றும் 2.5 டன் பசுந்தாள் உரமிட்டு நன்கு உழவு செய்ய வேண்டும். பசுந்தாள் உரப் பயிர்களான சணப்பு, தக்கைப்பூண்டு போன்றவற்றை பூப்பூக்கும் முன்பு மடக்கி உழுதுவிட வேண்டும். இதை மடக்கி உழவு செய்யும்போது ஒரு அங்குலம் உயரத்துக்கு வயலில் நீரைத் தேக்கி வைக்க வேண்டும். பசுந்தாள் மிதிப்பான் (பழ்ஹம்ல்ப்ங்ழ்) பயன்படுத்தி மண்ணுக்குள் மறையுமாறு அமிழ்த்துவிட வேண்டும். பசுந்தாள் தழை உரமெனில் சிறிது சிறிதாக நறுக்கி வயலில் பரப்பி மிதிப்பது நல்லது.
நுண்ணுயிர் உரங்கள்: அசோலா- சம்பா பருவத்துக்கு 1 ஏக்கருக்கு 100 கிலோ அசோலாவை நடவு செய்த 3 முதல் 5 நாட்களுக்குள் பரவலாகத் தூவி நெற்பயிருடன் வளரவிட வேண்டும். அசோலா வளர்ச்சியடைந்தபிறகு களையெடுக்கும் போது களையெடுக்கும் கருவி மூலமாகவோ அல்லது காலால் வயலுக்குள் மிதித்துவிட வேண்டும்.
உயிர் உரங்கள்: ஓர் ஏக்கருக்கு அசோஸ்பைரில்லம் (நெல்) மற்றும் பாஸ்போபாக்டீரியா நுண்ணுயிர் உரங்கள் ஆகிய ஒவ்வொன்றிலும் 4 பொட்டலங்கள் (800 கிராம்) எடுத்து 20 கிலோ தொழு உரத்துடன் கலந்து சீராகத் தூவி விட வேண்டும் அல்லது அசோஸ்பைரில்லம் (நெல்) மற்றும் பாஸ்போபாக்டீரியா திரவ நுண்ணுயிரிகளை ஒவ்வொன்றிலும் 200 மில்லியை 1 லிட்டர் நீரில் கலந்து அதை நன்கு தூளாக்கப்பட்ட 10 கிலோ தொழு உரத்துடன் கலந்து இடவேண்டும்.
சூடோமோனாஸ் புளோரசன்ஸ்: ஓர் ஏக்கருக்கு 1 கிலோ சூடோமோனாஸ் எதிர் உயிர்ப் பூஞ்சாணத்தை 10 கிலோ தொழு உரத்துடனும் 10 கிலோ மணலுடனும் கலந்து நடவுக்கு முன்பு சீராகத் தூவினால், பயிருக்கு நோய் எதிர்ப்புத்தன்மை அதிகரிக்கும்.
ரசாயன உரங்கள்: மண் பரிசோதனை முடிவின் அடிப்படையிலேயே உரமிடுதல் வேண்டும். அவ்வாறு உரமிடுவதால் பயிரின் தேவைக்குக் குறைவாகவோ அதிகமாகவோ உரமிடுவதைத் தவிர்க்கலாம். இதனால், உரச் செலவு குறைகிறது. மண் பரிசோதனை செய்ய இயலாத நிலையில் பொதுப் பரிந்துரையாக ஓர் ஏக்கருக்கு 33 கிலோ யூரியா, 125 கிலோ சூப்பர் பாஸ்பேட், 8 கிலோ பொட்டாஷ் ஆகியவற்றை அடி உரமாகக் கடைசி உழவின்போது இட வேண்டும்.
நுண்ணூட்டக் கலவை: நெல் நுண்ணூட்டக் கலவையை ஓர் ஏக்கருக்கு 5 கிலோ அளவில் 20 கிலோ மணலுடன் கலந்து நடவுக்கு முன்பு சீராகத் தூவ வேண்டும். மாறாக இந்த நுண்ணூட்டக் கலவையை அடி உரமாக இடக்கூடாது. 

Tuesday 9 February 2016

இயற்கை உரங்கள்

மண் வளத்தை அளிக்கும் காரணிகள்:
மண்ணில் நுண்ணுயிரிகள் கோடிக்கணக்கில் உள்ளன. மேலும் மண் புழுக்கள், கரையான், மண் வாழ் பூச்சியினங்களும் உள்ளன. இவையே மண்ணின் இயற்கை சூழலைப்பாதுகாக்கின்றன.
இந்த நுண்ணியிரிகள் மிகவும் சுறுசுறுப்பானவை. நாம் மண்ணில் இடும் தொழு உரம், பசுந்தாள் உரம் பண்ணைக்கழிவுகள் மீது செயல்பட்டு, அவற்றை உணவாக பயன்படுத்தி, மக்கச் செய்து மண் வளத்தை பெருக்குகின்றன.
எனவே, மண்ணில் இயற்கையாக மக்கும் பொருள்கள் இல்லையென்றால் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையும் குறையும். மண்ணில் ஒரு பாக்டீரியா செல்லானது 15 முதல் 20 நிமிஷங்கள் இரண்டாக உடையும். ஒரு நாளில் அவை பல மில்லியன்களாக மாறுகின்றன.
ஆனால், இயற்கை வளங்கள் ஏதுமற்ற நிலையில் பாக்டீரியாக்கள் இறந்து விடும். அல்லது உறக்க நிலைக்கு சென்று விடும். இவை அங்ககப்பொருட்களை மக்கச் செய்து, மண்ணிற்கு அளிப்பதோடு மட்டுமல்லாமல், காற்றிலுள்ள தழைச்சத்தை உள்வாங்கி, மண்ணில் நிலைநிறுத்தி, பயிர்களுக்கு அளிக்கின்றன. எனவே மண் வளத்தை பாதுகாக்க அதிக அளவில் இயற்கை உரங்கள் அதாவது கரிமக் கார்பனை மண்ணில் மேம்பாடு அடையச் செய்ய வேண்டும். மண் இயற்கையாக அதிக கரிம ஊட்டத்தோடு இருந்தால், மண்ணில் இடும் எந்த உரத்தையும் இழப்பில்லாமல் சரியான வகையில் பயிர் பயன்படுத்திக் கொள்ளும். அந்த வகையில் வயலிலேயே தயாரிக்கக்கூடிய சில இயற்கை வழி உரங்களை காண்போம்.
பண்ணைக்கழிவுகள் :
அன்றாடம் பண்ணையில் பலவகையான திடக்கழிவுகள் உண்டாக்குகின்றன. இவற்றில் இலைச் சருகுகள், மாட்டுத் தொழுவக்கழிவுகள், பயிர்க்கழிவுகள் மிகுதியாக உள்ளன. அவற்றை நுண்ணுயிர்களின் உதவியால் மட்கச்செய்து பயிர்ச்சத்து நிறைந்த இயற்கை உரமாக மாற்றலாம்.
தொழு உரம்:
கால்நடைகளில் இருந்து கிடைக்கக்கூடிய கழிவுகளை மட்கச்செய்து பயன்படுத்துவது தொழு உரம். மாடுகள் சராசரியாக நாள் ஒன்றுக்கு 10 கிலோ சாணத்தையும், 6-7 லிட்டர் சிறுநீரையும் கழிக்கின்றன.
இவ்வாறாக ஓராண்டுக்கு 3.5 டன் சாணமும், 2500 லிட்டர் சிறுநீரும் ஒரு மாட்டிலிருந்து கிடைக்கின்றன. மாட்டின் சாணத்தைவிட சிறுநீரில் தான் தழைச்சத்து 50 சதமும், சாம்பல் சத்து 25 சதமும் அதிகம் உள்ளன. மக்கிய தொழு உரத்தில் ஒவ்வொரு 100 கிலோவிலும் தழைச்சத்து 500 கிராமும், மணிச்சத்து 300 கிராமும், சாம்பல்சத்து 500 கிராமும் உள்ளன.
ஆட்டு எரு:
எந்த இன ஆடும் சராரசியாக நாள் ஒன்றுக்கு 300 கிராம் புழுக்கைகளையும், 200 மிலி சிறுநீரையும் கழிக்கின்றன. ஆட்டு எருவில் 100 கிலோவிற்கு ஒரு கிலோ தழைச்சத்து உள்ளது. தொழு எருவை விட அதிக பயிர்ச்சத்துக்கள் உள்ளன. எனவே ஆட்டுப்பட்டிகளை வயலில் அமைத்து எருவை மண்ணில் சேமிக்கலாம். இந்த ஆட்டுக்கழிவை சாண எரிவாயுக்கலன்களிலும் பயன்படுத்தி, எரி சக்தியோடும் நல்ல இயற்கை உரத்தையும் பெறலாம்.
சாண எரிவாயுக்கழிவு:
சாணத்தை வரட்டியாக தட்டாமால் எரிவாயுக்கலன்களில் பயன்படுத்துவதால் மீத்தேன் வாயு என்ற எரிசக்தி கிடைப்பதுடன் சத்துக்கள் நிறைந்த சாண எரிவாயு கழிவும் கிடைக்கிறது. ஓராண்டு முடிவில் கிடைக்கும் கழிவில் 44.5, 65.9, 28 கிலோ தழை, மணி, சாம்பல் சத்துக்கள் கொண்ட உரம் கிடைக்கின்றன. [3 பசு, 2 கன்றுகள்] இரும்பு, மாங்கனீசு, துத்தநாகம், காப்பர் போன்ற நுண்ணூட்டங்களும் இதில் உள்ளன.
பயிர்த்தட்டைகள்:
நெல், பயிர்த்தடைகளும் பயிரூட்டச்சத்துக்கள் கொண்டவை. இவற்றை நிலத்தில் உழுதுவிட்டால் அங்ககப்பொருட்களின் அளவு அதிகரிப்பதுமட்டுமல்லாமல் தழை, மணி, சாம்பல் சத்துக்களும் பயிர்களுக்கு கிடைக்கும். கரும்பு அடிக்கட்டைகளும் வேர்களும், வயல்களில் இருந்து ஹெக்டேருக்கு 13.5 டன் வரை கிடைக்கின்றன. இவற்றை ரோட்டோவேட்டர் கலப்பையைக்கொண்டு பொடி செய்து மண்ணில் கலந்தால் நல்ல கனிம எருவாக மாறுவதோடு ஹெக்டேருக்கு 14 கிலோ தழை, 5 கிலோ மணி மற்றும் 30 கிலோ சாம்பல் சத்தை வயலுக்கு அளிக்கமுடியும்.
மண் புழு மக்கு உரம் :
மண் புழுக்களை பயன்படுத்தி இலை, தழை, கால்நடைக்கழிவுகளை மட்கச் செய்து இது தயாரிக்கப்படுகிறது. மண்புழு உரம் பேரூட்டச்சத்துக்கள் மட்டுமல்லாது கரிம பொருட்கள், நுண்ணுயிரிகள், கிரியா ஊக்கிகள் போன்றவற்றைக் கொண்டுள்ளது. இது நடுநிலையுள்ள அமில, காரத்தனமையைக் கொண்டுள்ளதால், மண்ணில் உள்ள பேரூட்ட, நுண்ணூட்டச்சத்துக்கள் எளிதில் பயிர்களுக்கு கிடைக்கச் செய்கிறது.
பசுந்தாள் உரங்கள்:
செஸ்பேனியா, கொளுஞ்சி, சணப்பு, பில்லிபெசரா, அகத்தி போன்ற பயிர்களை வளர்த்து, பூக்கும் தருணத்தில் மடக்கி உழ வேண்டும். மேலும் வேம்பு, புங்கம், கிளிசிடியா, எருக்கு இலைகளையும் சாலையோர தரிசு நிலங்களில் மண்டிக்கிடக்கும் செடி, கொடிகளையும் வெட்டி, நிலத்தில் இடுவது பசுந்தால் உரமாகும்.
இதன் மூலம் விழிப்புணர்வைப் பெரும் விவசாயிகள், இயற்கை உரங்களை அதிகம் பயன்படுத்தி, மண் வளத்தை காப்பதோடு சுற்றுச்சூழலையும் காத்து, அனைத்து இனங்களுக்கும் நஞ்சில்லா உணவு வழங்க முன் வர வேண்டும்.
பசுந்தாள் உரம்:-
நடவடிக்கைகள்:
இந்திய வேளாண்மையில் நவீன சாகுபடித் தொழில்நுட்பத்தின் மூலமும், உயர் விளைச்சல் ரகங்கள் மூலமும் உணவு உற்பத்தியை பன்மடங்கு அதிகரித்ததால், தன்னிறைவு பெறலாம்.
இருப்பினும், பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்பவும், விளைநிலங்கள் கட்டடங்களாக மாறி வருவதாலும், மண்ணின் பேரூட்டங்கள், நுண்ணூட்டங்களில் குறைபாடு ஏற்படுவதாலும், அங்கக உரங்களைப் பயன்படுத்தாமை அல்லது குறைத்து இடுவதாலும், பசுந்தாள் உரமிடுதல் காலத்தின் கட்டாயம் என்ற சூழ்நிலை உருவாகிவிட்டது.
மண்ணின் வளத்தைப் பாதுகாக்க, அதிக கரிம அளவை மண்ணில் நிலை நிறுத்துதல் மிக அவசியம். தொடர்ந்து தழை, எருக்களை நிலத்தில் இடுவதால், மண்ணில் கரிமம் நிலைபெறும்.
மண்ணில் சேரும் கரிமப் பொருள்களால் மண் புழுக்களின் வளர்ச்சியும், தழைச் சத்தை நிலைப்படுத்தும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியும் அதிகரிக்கின்றன. மேலும், மண் இயல்பு அடர்த்தி குறைகிறது. அதனால், உழுவது முதல் விதை முளைப்பு, பயிர் வளர்ச்சி, நீர்ப்பிடிப்பு ஆகியன எளிதாகின்றன.
பசுந்தாள் உரப் பயிர்கள் வளிமண்டலத்தில் உள்ள தழைச்சத்தை கிரகித்து, வேர்ப் பகுதியில் சிறுமுடிச்சுகள் மூலம் நிலைநிறுத்தி, அந்தப் பயிரின் தழைசத்து, உரத்தேவையினை தானே பார்த்துக் கொள்கிறது. இதனால், செடியின் வளர்ச்சி அதிக பசுமையாக இருக்கிறது. மேலும், மண் வளமும் பெருகிறது. பசுந்தாள் பயிர்களை அப்படியே மடக்கி, நிலத்தின் உழும் முறையை தொன்றுதொட்டு நாம் தெரிந்த முறையாகும்.
பசுந்தாள் உரப் பயிர்களான சணப்பு, தக்கைப் பூண்டு, மணிலா அகத்தி, கொழுஞ்சி மற்றும் சித்தகத்தியில் தழை, மணி, சாம்பல் சத்துடன் நூண்ணூட்ட சத்துக்களும் உள்ளன. பசுந்தாள்களை மண்ணில் இட்ட பின் பயிரிடப்படும் பயிர்களின் விளைச்சல் வெகுவாக அதிகரிக்கின்றது.
மேலும், அடுத்து விளைவிக்கும் பயிர்களுக்கான ரசாயன உரத் தேவையும் குறைகிறது. பசுந்தாள் பயிர்களை நிலங்களில் விதைத்த 30-45 நாள்களுக்குள் நிலத்தில் மடக்கி உழுதுவிடவேண்டும். அதாவது, பசுந்தாள் பயிர்களின் பூக்கும் பருவத்துக்கு முன்பாக இதனை மடக்கி உழ வேண்டும்.
நெல் வயலில் நாற்று நடுவதற்கு 20-25 நாள்களுக்கு முன்னரும், மற்ற நிலங்களில் விதைப்பதற்கு 30-35 நாள்களுக்கு முன்னரும் பசுந்தாள்களை மண்ணில் இட்டு உழுதுவிடவேண்டும். அவ்வாறு உழும் போது, தழைச்சத்தை வெகுமளவில் கொடுக்கின்றது. அவை மட்கும்போது உற்பத்தியாகும் கரிம அமிலங்களின் வினையால், மண்ணில் பயிருக்குக் கிடைக்கும் துத்தநாகச் சத்து அதிகரித்துக் காணப்படுகிறது.
பசுந்தாள் உரப் பயிர்களான சணப்பில் கோ-1, கொழிஞ்சியில் எம்டியு-1, மணிலா அகத்தியில் கோ-1 ஆகிய ரகங்கள், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது. பசுந்தாள் உற்பத்திக்கு ஏக்கருக்கு சணப்பு என்றால் 10 கிலோ, தக்கைப் பூண்டு என்றால் 20 கிலோ, மணிலா அகத்தி என்றால் 15 கிலோ அல்லது கொழிஞ்சிக்கு 8 கிலோ போதுமானது.
சணப்பின் மூலம் ஏக்கருக்கு சுமார் 7 டன் உயிர் பொருள்களும் 35 கிலோ தழைச்சத்தும், தக்கைப் பூண்டில் 10 டன் உயிர் பொருள்களும் 60 கிலோ தழைச்சத்தும், மணிலா அகத்தியில் 10 டன் உயிர் பொருள்களும் 50 கிலோ தழைச்சத்தும் மற்றும் கொழுஞ்சியில் 3 டன் உயிர் பொருள்களும் 25 கிலோ தழைச்சத்தும் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
பசுந்தாள் உரமிடுவதால் அங்ககப் பொருள்கள் மண்ணில் சேர்கின்றன. இதனால், மண்ணின் வளம் மேம்படுகிறது. நிலத்தில் நீர் தேக்கும் தன்மை அதிகரிக்கின்றது. அடுத்ததாகப் பயிரிடப்படும் பயிர்களின் நுண்ணூட்டத் தேவை நிவர்த்தி செய்யப்படுகிறது. ஆக மொத்தத்தில், 15 முதல் 20 சதவீத பயிர் விளைச்சல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, பசுந்தாள் உரங்களைத் தொடர்ந்து பயன்படுத்தி, விளைநிலம் மற்றும் சுற்றுச்சூழலை மாசுபடுவதிலிருந்து பாதுகாத்து, அடுத்த தலைமுறையினருக்கு சிறந்ததோர் உலகத்தை கொடுப்பது நமது கடமையாகும்

Saturday 6 February 2016

அறுவடைசெய்யும் நாள்

அவரை
நடவு செய்யும் மாதம் - மே, ஜுன் - ஜுலை
விதையளவு ஒரு ஏக்கருக்கு 2 கிலோ
இடைவெளி பாருக்குபார் 8 அடி செடிக்கு செடி 1 அடி
அறுவடைசெய்யும் நாள் - 150 முதல் 200 நாட்கள்
கத்தரி
நடவு செய்யும் மாதம் - மே, ஜுன் -
விதையளவு ஒரு ஏக்கருக்கு 80-100 கிராம்
இடைவெளி பாருக்குபார் 3அடி செடிக்கு செடி 1.5 அடி
அறுவடைசெய்யும் நாள் - 55 முதல் 160 நாட்கள்
தக்காளி
நடவு செய்யும் மாதம் - மே, ஜுன் நவம்பர் - ஜனவரி – மார்ச்
விதையளவு ஒரு ஏக்கருக்கு 80-100 கிராம்
இடைவெளி பாருக்குபார் 3 அடி செடிக்கு செடி 2 அடி
அறுவடைசெய்யும் நாள் - 65 முதல் 135 நாட்கள்
புடலை
நடவு செய்யும் மாதம் ஜுன், ஜுலை- டிசம்பர் - ஜனவரி
விதையளவு ஒரு ஏக்கருக்கு 600 கிராம்
இடைவெளி பாருக்குபார் 8 அடி செடிக்கு செடி 1அடி
அறுவடைசெய்யும் நாள் 70 -145 நாட்கள்
பீர்க்கை
நடவு செய்யும் மாதம் ஜுன், ஜுலை- டிசம்பர் - ஜனவரி
விதையளவு ஒரு ஏக்கருக்கு 600 கிராம்
இடைவெளி பாருக்குபார் 8 அடி செடிக்கு செடி 1அடி
அறுவடைசெய்யும் நாள் 40- 125- நாட்கள்
பாகல்
நடவு செய்யும் மாதம் ஜுலை- ஆகஸ்ட் , ஜனவரி - பிப்ரவரி
விதையளவு ஒரு ஏக்கருக்கு 500 கிராம்
இடைவெளி வரிவைக்கு வரிசை 8 அடி செடிக்கு செடி 1 அடி
அறுவடைசெய்யும் நாள் 55- 150- நாட்கள்
வெண்டை
நடவு செய்யும் மாதம் மார்ச் – ஜுன் ஜீலை - செப்டம்பர்
விதையளவு ஒரு ஏக்கருக்கு 2 கிலோ
இடைவெளி பாருக்குபார் 1.5அடி செடிக்கு செடி 1அடி
அறுவடைசெய்யும் நாள் 45 - 90 நாட்கள்
மிளகாய்
நடவு செய்யும் மாதம் ஜுன், ஜுலை- டிசம்பர் - ஜனவரி
விதையளவு ஒரு ஏக்கருக்கு 400 கிராம்
இடைவெளி –30 செ.மீ
அறுவடைசெய்யும் நாள் 60- 200 நாட்கள்
செடிமுருங்கை
நடவு செய்யும் மாதம் அக்டோபர்- நவம்பர், ஜுன், ஜுலை
விதையளவு ஒரு ஏக்கருக்கு 200 கிராம்
இடைவெளி பாருக்குபார் 6அடி செடிக்கு செடி 6 அடி
அறுவடைசெய்யும் நாள் 150 - 200 நாட்கள்
வெங்காயம்
ரகம் கோ 5
நடவு செய்யும் மாதம் வைகாசி, புரட்டாசி, மார்கழி
விதையளவு ஒரு ஏக்கருக்கு 1 கிலோ
இடைவெளி பாருக்குபார் 15. செ.மீ
செடிக்கு செடி 10 செ.மீ
அறுவடைசெய்யும் நாள் - 100 நாட்கள்

களை மேலாண்மை

களை எடுக்காவிட்டால் மகசூல் நான்கில் 3 பங்கு குறையும் (களை எடுக்கா பயிர் கால் பயிர்).
•வறண்ட நிலத்திற்கு களை எடுப்பு தேவையில்லை. களை எடுக்கா நிலத்தில் களைப் பயிர் வளர்ச்சியானது, இயற்கையாகக் குறைந்து, அது மண் ஈரத்தை காக்க உதவும்.
•அடிக்கடி உழவுச் செய்தால், களை எண்ணிக்கை குறையும்.
•அருகம்புல் வயலில் இருந்தால் பயிர் மகசூல் குறையும்.
•கரும்மண் நிலத்தில் அருகம்புல் இருந்தால், அதைக் கட்டுப்படுத்த 3 வருடங்கள் வரை நிலத்தை அப்படியே போட்டுவிடவேண்டும்.
•பசுந்தாள் உரச்செடிகளான சணப்பு, கொழிஞ்சியும் சாகுபடி செய்து அது பூப்பதற்கு முன்பு மடக்கி உழுதால், களை குறையும்.
•ஆரை களையை கட்டுப்படுத்த எருக்களை செடியை பசுந்தாள் உரச்செடியாகச் சாகுபடி செய்யவேண்டும்.
•கோரைப்புல்லை கட்டுப்படுத்த கொள்ளுப்பயிரைச் சாகுபடி செய்யவேண்டும்.
•கோரையை அழிக்க, அன்னப்பறவையை வயலில் விடலாம்.
•வேப்பமரத்தினால் செய்யப்பட்ட கலப்பையை அடிக்கடி வயலில் உழவு செய்வதாலும், வேப்பம் புண்ணாக்கை அடிக்கடி வயலில் இட்டாலும் கோரையைக் கட்டுப்படுத்தலாம்.
•1 கிலோ உப்புடன் 100 கிராம் சர்வோதய சோப் சேர்த்து, அதை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்தால், கோரையைத் தவிர அனைத்துவிதக் களைகளையும் கட்டுப்படுத்தலாம்.
•கோரையைக் கட்டுப்படுத்த உழவுச் செய்யும் போதும், விதைப்பு செய்யும் போதும் வயலில் 50 கிலோ வேப்பம்புண்ணாக்கை இடவேண்டும்.
•பார்த்தீனியம் களையை அழிக்க 200 கிராம் உப்பை தண்ணீருக்கு 1 லிட்டர் என்ற அளவில் கலந்துத் தெளிக்கலாம்.
•வயலில் தொடர்ந்து நீர் நிற்கும்மாறு நீர்க்கட்டினால், சிலசமயம் பல களைக்களை கட்டுப்படுத்தலாம்

மண் வளம் மேம்படுத்துதல்

பல வகை தானிய பயிர்கள்
தானியப்பயிர் 4
சோளம் 1 கிலோ
கம்பு 1/2 கிலோ
தினை 1/4 கிலோ
சாமை 1/4 கிலோ
பயிறு வகை 4
உளுந்து 1 கிலோ
பாசிப்பயறு 1 கிலோ
தட்டைப்பயிறு 1 கிலோ
கொண்டைக்கடலை 1 கிலோ
பசுந்தாள் பயிர்கள் 4
தக்கை பூண்டு 2 கிலோ
சணப்பை 2 கிலோ
நரிப்பயறு 1/2 கிலோ
கொள்ளு 1 கிலோ
மணப்பயிர்கள் 4
கடுகு 1/2 கிலோ
வெந்தயம் 1/4
சீரகம் 1/4 கிலோ
கொத்தமல்லி 1 கிலோ
இவை அனைத்தையும் விதைத்து 50 முதல் 60 நாட்களில் மடக்கி உழ வெண்டும்.
மண்ணுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைத்துவிடும்.
விளக்கம் :
இந்த நவ தானிய பயிர்களின் வேர் முடுச்சுகளில் நிலத்திற்கு தேவையான நைட்ரஜன் சேமித்து வைத்து இருக்கும் .
இது நிலத்திற்கு உயிர் முடக்கு ஆகும்.அதனால் நிலத்தின் ஈரப்பதம் காக்க படும் . இதனை கலந்து விதைக்கலாம் .
நவ தானியங்கள் விதைப்பு நமது பரம்பரியமுறை . எடுத்துக்காட்டு நமது முளைப்பாரி திருவிழா .
மேலும் இது இரு அருமையான பசுந்தாள் உரமும் ஆகும்

உயிர் உரங்கள் ஒரு கிலோ விலை விபரம்

அசோஸ்பைரில்லம் - ரூ 40 - தழைச்சத்து
பாஸ்போபாக்டீரியா - ரூ 40 - மணிச்சத்து
டிரைக்கோடெர்மா விரிடி- ரூ 75 - எதிர் உயிர் பூஞ்சாணம்
சூடோமோனஸ் ரூ 75 - எதிர் உயிர் பூஞ்சாணம்
பெசிலியோமைசிஸ் ரூ 75 - எதிர் உயிர் பூஞ்சாணம்
பிவேரியா பேசியானம் ரூ 75 - இயற்கை பூச்சி கொல்லி
டிரைக்கோடெர்மா விரிடி - வேர் அழுகல் நோயை கட்டுப்படுத்தும்
அசோஸ்பைரில்லம் -பாஸ்போபாக்டீரியா, டிரைக்கோடெர்மா விரிடி, சூடோமோனஸ், பெசிலியோமைசிஸ்
இவை ஐந்தும் விதைநேர்த்தி செய்யலாம், தொழுஎருவில் கலந்து வயலில் தூவி விடலாம், நாற்றை நனைத்து நடவு செய்யலாம், கரணை நேர்த்தி செய்யலாம்.
சூடோமோனஸ் - 10 லிட்டர் தண்ணீருக்கு 100கிராம் என்ற அளவில் கலந்து தெளித்தால் கருகல் நோயை கட்டுப்படுத்தலாம்.
பெசிலியோ மைசிஸ் - நூறு:புழுவை கட்டுப்படுத்தும் ஒரு ஏக்கருக்கு 2 கிலோ போதுமானது
பிவேரியா பேசியானம் - காய்புழுவை கட்டுப்படும் இயற்கை பூச்சி கொல்லி - 10 லிட்டர் தண்ணீருக்கு 100 கிராம் என்ற அளவில் கலந்து தெளித்தால் காய்புழுவை கட்டுப்படுத்தலாம்

இயற்கை பூச்சி கொல்லிகள்

1. தாவரப் பூச்சிக் கொல்லிகள்:
தாவரப் பூச்சிக் கொல்லிகள் கிராமங்களில் கிடைக்கும் தாவரங்களான
ஆடாதோடா,
நொச்சி,எருக்கு,
வேம்பு,
சோற்றுக் கற்றாழை,
எட்டிக் கொட்டை
போன்றவற்றைக் கொண்டு, வேக வைக்கும் முறையிலும், ஊறல் முறையிலும் தயாரிக்கப்படுகின்றன.
ஊறல் முறை:
நொச்சி,
ஆடாதோடா,
வேம்பு,
எருக்கன்,
பீச்சங்கு (உண்ணி முள்),
போன்றவற்றின் இலைகள் 2 கிலோ, எட்டிக் கொட்டை 2 கிலோ ஆகியவற்றை இடித்துப் பொடி செய்து கொள்ள வேண்டும். அவை மூழ்கும் அளவுக்கு 12 லிட்டர் மாட்டு சிறுநீர், 3 லிட்டர் சாணக் கரைசல் ஆகியவற்றில் 7 முதல் 15 நாள்கள் வரை ஊறவிட வேண்டும். இலைகள் கரைந்து கூழ் ஆகிவிடும். இதில் ஒரு லிட்டருக்கு 10 லிட்டர் தண்ணீர் கலந்து பயிர்களில் தெளிக்கலாம்.
வேக வைக்கும் முறை:
மேற்கண்ட இலைகள், எட்டிக் கொட்டை தலா 2 கிலோ எடுத்து பாத்திரத்தில் இட்டு,15 லிட்டர் நீரை ஊற்றி 2 முதல் 3 மணி நேரம் வேக வைக்க வேண்டும். வெந்தபின் சாற்றை வடித்து எடுக்கவேண்டும். ஆறியபின் அதில், ஒரு படி மஞ்சள் தூள் கலந்து 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இதன்மூலம் கிடைக்கும் வடிசாற்றில், 100 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கலாம்.
பூசண நோய் கட்டுப்பாட்டுக்கு:
மேற்கண்ட சாறில் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் 500 கிராம் முதல் 1 கிலோ வரை கலந்து தெளிக்கலாம்.
2. நுண்ணுயிர் இலைக் கருகல் நோய்களுக்கு:
சோற்றுக் கற்றாழை 3.5 கிலோ,
இஞ்சி 200 கிராம்,
இவற்றுடன் புதினா அல்லது
சவுக்கு இலை
2 கிலோ சேர்த்து மூழ்கும் அளவுக்கு நீர் ஊற்றி வேக வைக்க வேண்டும். ஆற வைத்து வடித்த சாற்றுடன் மஞ்சள் தூள் ஒரு படி கலந்து, சூடோமோனாஸ் புளோரசன்ஸ் 500 கிராம் அல்லது ஒரு கிலோ கலந்து தெளிக்கலாம்.
3. இயற்கைத் தாவர பூச்சிக் கொல்லி மருந்து–வேப்பங்கொட்டை சாறு:
5 கிலோ வேப்பங் கொட்டையை உரலில் இட்டு இடித்து, சல்லி சாக்கு அல்லது மெல்லிய துணியில் கட்டி,10 லிட்டர் தண்ணீரில் 24 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் சாற்றினை பிழிந்து எடுத்து வடிகட்டி, 190 லிட்டர் தண்ணீர் கலந்து பயிர்களுக்குத் தெளிக்கலாம்.
4. இயற்கை பூச்சி விரட்டியான பூண்டு கரைசல் செய்வது எப்படி?
இயற்கை பூச்சி விரட்டியான பூண்டு கரைசல் எப்படி செய்வது என்று பாப்போம்:
தேவையான பொருட்கள் :
பூண்டு – 300 கிராம்,
மண் எண்ணை 150 மிலி.
பூண்டை மண் எண்ணையில் 24 மணி நேரம் ஊற வைக்கவும் 60 லிட்டர் நீரில் சேர்த்து ஒரு ஏகர் நிலத்தில் பயன் படுத்தலாம்
5. இயற்கை பூச்சி கொல்லியான இஞ்சி- பூண்டு -மிளகாய் கரைசல்
செய்வது எப்படி?
பூண்டு 1 kg எடுத்து கெரசினில் 12 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
பின்னர் இதனை எடுத்து நல்ல விழுதாக வருமாறு அரைத்துக் கொள்ள வேண்டும்.
அரை கிலோ பச்சை மிளகாய் மற்றும் அரை கிலோ இஞ்சி எடுத்து தனித்தனியாக விழுது பதத்தில் அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின் இவ்வாறு தனித்தனியாக அரைத்த விழுதுகளை நன்றாக கலந்து ஒரு காடா துணியில் வைத்துக்கொள்ள வேண்டும். (ஜிலேபி பிழிவது போல் வைத்துக்கொள்ள வேண்டும்).
இவ்வாறு தயார் செய்த காடா துணியில் வைக்கப்பட்ட கலவையை 6லிட்டர் தண்ணீரில் முக்கி ரசத்தை வடிக்கவும். இப்போது நமக்கு 6லிட்டர் கரைசல் தயார்.
இந்த கரைசலை பூச்சி தாக்குதல் குறைவாக இருந்தால் 500 மில்லியும் தாக்குதல் அதிகமாக இருந்தால் 1 லிட்டரும் எடுத்து முறையே 9.5மற்றும் 9 லிட்டர் தண்ணீரில் கலந்து பூச்சிகள்/செடிகள் மீது தெளித்தால் புழு வகை பூச்சிகள் முற்றிலும் கட்டுப்படுத்தப்படும்.
காதி சோப்பை தண்ணீரில் கரைத்து அடித்தால் அது நாம் அடிக்கும் இயற்கை பூச்சிமருந்து கரைசலை செடியின் மீது ஈர்த்து வைத்துக்கொள்ள உதவும்.இதன் மூலம் இக்கரைசலின் வீரியமும் அதிக நேரம் செடியில் இருக்கும்.
இதை தயார் செய்யும்போது கைக்கு கையுறை தேவை.இல்லையெனில் கை எரிச்சல் அதிகமாக இருக்கும். கவனம் தேவை.
6. பெருங்காயம் பூச்சிகளை கட்டு படுத்தும்:
ஒரு ஏகர் நிலத்திற்கு, ஒரு கிலோ பெருங்காயத்தை ஒரு சாக்கு பையில் போட்டு நீர் பாசனம் இருக்கும் கால்வாயில் விட்டு வைத்தால், நீரில் பெருங்காயம் கரைந்து செடிகளுக்கு செல்கிறது.
இந்த முறையால், பயிர்கள் நன்றாக வளர்வது மட்டும் இல்லாமல், பூச்சிகளின் தாக்குதலும் குறைகிறது.
7. இலைச் சுருட்டுப் புழு கட்டுபடுத்தும் வழிகள்
சிறியாநங்கை கஷhயம்3to5%,பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் கரைசல் அல்லது 5 சதம் வேப்ப விதைக் கரைசலைத் தௌpத்து கட்டுப்படுத்தலாம்.
வேப்ப இலை கொத்துகளை வயலில் ஆங்காங்கே வைக்க வேண்டும்.
வேப்ப எண்ணெய் 300 மில்லி மண்ணெண்ணெய் 250 மில்லி மற்றும் காதி சோப் 50 கிராம் ஆகியவற்றை 160 லிட்டர் தண்ணீரில் நன்கு கலந்து காலை வேளையில் இலைப் பிணைப்புகளில் நன்கு படும்படி தளிக்க வேண்டும்.
வேப்பங்கொட்டைத் தூளை 300_to_500 கிராம், 300 மில்லி மண்ணென்ணையில் 24 மணி நேரத்திற்கு ஊறவைத்து அந்த வடிநீரை 150 கிராம் காதி சோப்புடன் கலந்து காலை வேளையில் தௌpக்க வேண்டும்.
10 கிலோ வேப்ப இலையை விழுது போல் அரைத்து அதனை 1 லிட்டர் நீரில் ஒரு நாள் முழுவதும் ஊற வைக்க வேண்டும். பின்னர் அதை 30நிமிடங்கள் கொதிக்க விடவேண்டும். இரவு முழுவதும் ஆற வைத்து 200 லிட்டர் நீருடன் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.
இலந்தை மரக்கிளையால் பிணைக்கப்பட்ட இலைகளை உரசி,மறைந்திருக்கும் புழுக்களை முட்களால் குத்தி அழிக்கலாம். இது போல சீமைக்கருவேல கிளைகளையும் பயன்படுத்தலாம்.
4 சதம் வேப்ப எண்ணெய் தெளிக்கலாம்.
சோற்றுக் கற்றழை சாறை தெளிக்கலாம்.
சாம்பல் தூவலாம்.
300 மில்லி வேப்ப எண்ணெய்,300 மில்லி புங்கம் எண்ணெய் 150 கிராம் காதி சோப்பு ஆகியவற்றை 13 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்
விளக்கு பொறிகளை வைத்து அந்துப் பூச்சிகளை கவர்ந்து அழிக்க வேண்டும்.
8. பூச்சி விரட்டும் பண்பை கொண்ட வில்வம்
வில்வ மரத்தின் பாகங்களில் இயல்பாகவே பூச்சிக்கொல்லி ஆற்றலும், பூஞ்சை எதிர்ப்புத் தன்மையும் உள்ளன.
இந்தியாவில் இது இயல்பாக வளர்ந்து காணப்படுவதுடன் காலங்காலமாக மருத்துவம் மற்றும் ஆன்மிக முக்கியத்துவம் பெற்று விளங்குவதாலும் இதன் பூச்சிக்கொல்லி ஆற்றலை ஆராய முற்பட்டதன் விளைவாக, ஆச்சரியமூட்டும் உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளன.
இலை களில் இருந்து பிரித்தெடுக்கப்படும் முக்கிய எண்ணெய்கள்,தானியக் கிடங்கில் உள்ள பூச்சிகளை கட்டுப் படுத்த வல்லவை.
இப்பட்டையில் உள்ள இரண்டாம் நிலை வளர்சிதை மாற்றக் காரணிகள், வீட்டு ஈ மற்றும் கடுகு வண்டு ஆகியவற்றுக்கு எதிரான தன்மைகளை கொண்டுள்ளது.
இதேபோல் கொசு விரட்டும் திறனும் கண்டறியப்பட்டு இருக்கிறது.
வில்வ விதைகளில் இருந்து பெட்ரோலியம் ஈதரைப் பயன்படுத்தி எண்ணெய் பிரித்து எடுக்கப்பட்டது. இதனை ஆய்வகச் சூழலில் வனமர இலை உண்ணிகளுக்கு எதிராக பயன்படுத்திப் பார்த்ததில், சாதகமான விளைவுகள் காணப்பட்டன.
இவற்றின் ஆய்வுமுடிவுகள் மூலம் வில்வ விதைகளில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட எண்ணெய், தேக்கு நாற்றுகளைத் தாக்கி அழிக்கும் இலையுண்ணிகளுக்கு எதிராக செயல்படும் திறன்மிகுந்த உயிர்ம பூச்சிக்கொல்லியாக பயன்படுத்த வல்லது என கண்டறியப்பட்டது.
குறிப்பாக தேக்கு செடிகள் மற்றும் இள மரங்களைத் தாக்கும் இலையுண்ணி பெருத்த பொருளாதார சேதத்தை ஏற்படுத்தக் கூடியது.நாற்றங்கால்களிலும் இளவயதுஉடைய மரங்களிலும் முற்றிலுமாக இலைகளைத் தின்றுவிடும் அபாயம் உள்ளது. இவை மரங்களைக் கொன்றுவிடுவதில்லை. மாறாக, மரத்தின் வளர்ச்சி விகிதத்தைக் கடுமையாக பாதிக்கிறது. இந்தியாவின் அனைத்து தேக்கு தோப்புகளையும் தாக்கும் வல்லமை கொண்டவை இவை. ஒரு ஆண்டில் எப்போது தாக்கும் என ஊகித்து அறிய இயலாதவை. எனவே இந்த இலையுண்ணிகளை கட்டுப்படுத்துவது மர சாகுபடியாளர்களுக்கு இருந்துவரும் மிகப்பெரிய சவாலாகும்.
9. அக்னி அஸ்திரம் – இயற்கை முறை பூச்சி கொல்லி:
தேவையான பொருட்கள் :
1. கோமியம் 20 கிலோ
2. புகையிலை 1 கிலோ
3. பச்சை மிளகாய் 2 கிலோ
4. வெள்ளைப்பூண்டு 1 கிலோ
5. வேப்பிலை 5 கிலோ
இவை அனைத்தையும் மண் பானையில் (வேறு பாத்திரங்கள் பயன்டுத்த கூடாது, வேதியியல் மாற்றங்கள் ஏற்ப்பட்டு அக்னி அஸ்திரம் பலிமிழக்கக்கூடும்)
வைத்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
நன்றாக 5 முறை மீண்டும் மீண்டும் கொதிக்க வைக்க வேண்டும். இறக்கி வைத்து மண்பானையின் வாயில் துணியை வேடுகட்டி 2 நாட்கள் அப்படியே வைத்து விடவேண்டும். நீரின் மேல் ஒரு ஏடு போல் ஆடை படியும்.
அதை நீக்கி விட்டால் உள்ளே இருக்கும் தெளிந்த நீர்தான் அக்னி அஸ்திரம்.
100 லிட்டர் நீரில் இரண்டரை லிட்டர் அக்னி அஸ்திரம் 3 லிட்டர் கோமியம் கலந்து பயிர்கள் மேல் தெளித்தால் போதும் புழு பூச்சிகள் காணாமல் போய்விடும்.
10. நீம் அஸ்திரா: பூச்சி விரட்டி
தேவையான பொருட்கள் :
1. நாட்டு மாட்டுச்சாணம் 2 கிலோ
2. நாட்டு மாட்டுச்சிறுநீர் 10 லிட்டர்
3. வேப்பங்குச்சிகள் மற்றும்
4. வேப்ப இலை 10 கிலோ
இவை அனைத்தையும் பெரிய பாத்திரத்தில் போட்டு, 200லிட்டர் நீரையும் ஊற்றி 48 மணி நேரம் ஊற வைக்கவேண்டும். மூடி போட்டு மூடி வைக்க கூடாது. இக்கரைசலை கடிகாரச்சுற்றுக்கு எதிர்திசையில் மூன்று தடவை கலக்கி விடவேண்டும். பின்பு வடிகட்டி வயலில் தெளிக்கலாம். பல வகை கெடுதல் செய்யும் பூச்சிகளுக்கு இது ஒரு நல்ல பூச்சி விரட்டியாகும்.
இந்த கரைசலை எத்தனை நாட்கள் வைத்திருக்க முடியும்?
குறைந்த பட்சம் அறுபது நாட்கள் வைத்திருக்கலாம்
11. சுக்கு அஸ்திரா: பூஞ்சாணக் கொல்லி
தேவையான பொருட்கள் :
1. சுக்குத்தூள் 200 கிராம்
2. பசு அல்லது எருமைப்பால் 5 லிட்டர்
சுக்குத்தூள் 200 கிராம் எடுத்து, 2 லிட்டர் நீரில் கலந்து பாதியாக சுண்டும் வரை காய்ச்ச வேண்டும். பின்பு குளிர வைக்க வேண்டும். பசு அல்லது எருமைப்பால் 5 லிட்டர் எடுத்து, தாமிரமல்லாத பாத்திரங்களில் கொதிக்க வைக்க வேண்டும். மேலே படிந்திருக்கு ஆடையை அகற்றி விடவேண்டும். ஆறிய பிறகு இதனுடன் 200 லிட்டர் நீர் மற்றும் சுக்கு கலந்த நீர் ஆகியவற்றை கலந்து வயலில் தெளிக்கலாம். இது மிகச்சிறந்த பூஞ்சாணக் கொல்லியாகும். 21 நாட்கள் வரை சேமித்து வைக்கலாம்.
12. பிரம்மாஸ்திரம் : அசுவனி பூச்சி விரட்டி
தேவையான பொருட்கள் :
1. நொச்சி இலை 10 கிலோ
2. வேப்பம் இலை 3 கிலோ
3. புளியம் இலை 2 கிலோ
4. கோமியம் 10 லிட்டர்
இவற்றை 10 லிட்டர் கோமியத்துடன் கலந்து அக்னி அஸ்திரம் தயாரிப்பது போல் மண்பானையில் தயாரிக்க வேண்டும். 100 லிட்டர் நீரில் இரண்டரை லிட்டர் பிரம்மாஸ்திரம் 3 லிட்டர் கோமியத்துடன் 1ஏக்கருக்கு தெளிக்கலாம்.
மாதம் 2 அல்லது 3 முறை தெளிக்கலாம். அசுவனி போன்ற பூச்சிகள் அண்டாது.
13.பீஜாமிர்தம்: வேர் அழுகல், வேர்க்கரையான், வேர்ப்புழு நோய்கள் தடுக்க
தேவையான பொருட்கள் :
1. பசு மாட்டு சாணி 5 கிலோ
2. கோமியம் 5 லிட்டர்
3. சுத்தமான சுண்ணாம்பு 50 கிராம்
4. மண் ஒரு கைப்பிடி அளவு
5. தண்ணீர் 20 லிட்டர்
இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை நன்றாக ஊற விடவேண்டும்.
விதை நேர்த்தி செய்ய விதிகளை இந்த கரைசலில் 2 மணி நேரம் ஊற விட வேண்டும். நாற்றுகளாக இருந்தால் அதன் வேர்களை நன்றாக நனையவிட்டு பிறகு நடவு செய்ய வேண்டும்.
பயன்கள் :
வேர் அழுகல், வேர்க்கரையான், வேர்ப்புழு நோய்கள் தடுக்கப்படும்.
14. வேம்பு புங்கன் கரைசல்: பூச்சி விரட்டி
தேவையான பொருட்கள் :-
1. வேப்பெண்ணை – ஒரு லிட்டர்
2. புங்கன் எண்ணை – ஒரு லிட்டர்
3. கோமியம் (பழையது) – பத்து லிட்டர்
4. காதி சோப்பு கரைசல் – அரை லிட்டர்
இவை அனைத்தையும் கலந்து வைத்து ஒருநாள் கழித்து உபயோகிக்கலாம். இவை ஒரு ஹெக்டர் அளவுக்கானது. இது எல்லா வகை பயிர்களுக்கும் மிகச்சிறந்த பூச்சி விரட்டி.
15. மாவுப்பூச்சி அழிப்பது எப்படி?
இயற்கை எதிரிப்பூச்சிகளாக பொறி வண்டு ஏக்கருக்கு 500 வண்டுகளை தோட்டத்தில் விடவேண்டும்.
வேப்பங்கொட்டை கரைசல் 5 சதவிகிதம் தெளிக்க வேண்டும்