Thursday 16 May 2019

பயிருக்குதேவைப்படும் சத்துக்கள், சத்துக்களை கொடுக்கக்கூடிய தாவரங்கள்

பயிர்களின் வளர்ச்சிக்கு 16 வகையான ஊட்டசத்துக்கள் தேவைப்படும் .
பயிர் வளர்ச்சிக்கு அதிகமாக தேவைப்படும் சத்துக்கள்
பேரூட்டச்சத்துக்கள் எனப்படும்.
பயிர் வளர்ச்சிக்கு குறைவாக தேவைப்படும் சத்துக்கள்
நுண்ணூட்டச்சத்துக்கள் எனப்படும்.
பேரூட்டச்சத்துக்கள்
தழைச்சத்து, மணிச்சத்து,. சாம்பல்சத்து, சுண்ணாம்புச்சத்து, கந்தகசத்து, மெக்னீசியம்சத்து முதலியன அதிகளவில் தேவைப்படும் எனவே இவை பேரூட்டச்சத்துக்கள் எனப்படும்.
நுண்ணூட்டச்சத்து
இரும்புச்சத்து, துத்தநாக சத்து, மாங்கனீசு சத்து, மாலிப்டின சத்து. தாமிர சத்து, போரான் சத்து, பயிர்களுக்கு குறைந்த அளவே தேவைப்படுவதால் இவை நுண்ணூட்டச்சத்து எனப்படும்
.
குளோரின் சத்து, சோடியம் சத்து, அலுமிசியம் சத்து, சிலிகான்சத்து. பயிர் வளர்ச்சிக்கு மிக மிகச் குறைந்த அளவே தேவைப்படும் இவை பயிர் விளைவிக்கும் சத்துக்கள் எனப்படும்
தாவரம் - தாவரத்தில் உள்ள சத்துக்கள், பயன்கள்
ஆவாரம் இலை
சத்து : மணிச்சத்து
பயன் : மணி பிடிக்க உதவும்
முருங்கை இலை, கருவேப்பிலையில்
சத்து : இரும்புச்சத்து உள்ளது
பயன் : பூக்கள் நிறைய பிடிக்கும்
எருக்கம் இலை
சத்து : போரான் சத்து உள்ளது-
பயன் : காய், பூ, அதிகம் பிடிக்கும்
காய், கோணலாகமல் இருக்கும்
புளியந்தலை
சத்து : துத்தநாக சத்து
பயன் : செடியில் உள்ள இலைகள் சிறியதாக இல்லாமல் ஒரே சீராக இருக்கும்.
பயிரின் வளர்ச்சி அதிகரிக்கும்
செம்பருத்தி, அவரை இலை
சத்து : தாமிர சத்து,
பயன் : தண்டுப்பகுதி மெலிந்து காணப்படாது
கொளுஞ்சி, தக்கபூண்டு
சத்து : தழைச்சத்து
பயன் : பயிர் செழித்து காணப்படும்
துத்தி இலை
சத்து : சுண்ணாம்புச் சத்து( கால்சியம் கார்பனேட்)
பயன் : சத்துக்களை பயிரின் பாகங்களுக்கு பிரித்துக் கொடுக்கும்.
எள்ளுசெடி
சத்து : கந்தகம்( சல்பர்)
பயன் : செடி வளர்ச்சி அதிகரிக்கும்-
தண்டு மெலிந்து இருக்காது மஞ்சள் கலராக மாறாது
வெண்டை இலை
சத்து : அயோடின்(சோடியம்)
பயன் : மகரந்தம் அதிகரிக்கும்
மூங்கில் இலை
சத்து : சிலிக்கா
பயன் : பயிர் நேராக இருக்கும்
பசலைக்கீலை
சத்து : மெக்னீசியம்
பயன் : இலை ஓரம் சிவப்பாக மாறாது
அனைத்து பூக்களிலும்
சத்து : மாலிப்டினம்
பயன் : பூக்கள் உதிராது
நொச்சி : பூச்சிகளை விரட்டும்
வேம்பு : :புழுக்கள் வராமல் பாதுகாக்கும்
வளர்ச்சி ஊக்கியாக தயாரிக்கும் முறை
அனைத்து தழைகள் ஒவ்வொன்றிலும்; அரைக்கிலோ வீதம் எடுத்துக் கொள்ள வேண்டும்
அவற்றுடன் கோமியம் அரை லிட்டர்
நாட்டு சர்க்கரை அரைக்கிலோ
சோற்றுக் கற்றாலை மடல் 1
தயிர் அரை லிட்டர்
செய்முறை
மேலே உள்ள ஒவ்வொரு தழைகளிலும் அரைக்கிலோ, பூ வில் மட்டும் 100 கிராம் அளவு எடுத்து நன்றாக இடித்து மண்பானையில் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும்.
அவற்றுடன் அரைக்கிலோ நாட்டுச் சர்க்கரையையும், அரைலிட்டர் கோமியத்தையும் சேர்க்கவேண்டும்
.
அதன்பிறகு ஒரு சோற்றுக்கற்றாலை மடலில் உள்ள தோலை நீக்கி விட்டு சதை பகுதியை எடுத்து மிக்சியில் போட்டு அடித்து அவற்றையும் ஒன்றாக கலக்கி ஒரு வாரம் வரை வைத்திருக்க வேண்டும் .
ஒரு வாரம் கழித்து எடுத்து வடிகட்டி 10 லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்கலாம்
தெளிக்கும் பொழுது ஒரு டேங்க்குக்கு ஒரு எலும்பிச்சம் பழம் சாறு எடுத்து கலந்து தெளிக்கலாம்

Sunday 12 May 2019

#மாடுகளின்_வயதை_கண்டறியும்_பற்கள்

பால் பண்ணை தொழில் லாபகரமாக அமைய இளம் வயதுள்ள மாடுகளை தேர்வு செய்வது முக்கியமானது. மாடுகளின் வயதை அவற்றின் பற்களின் எண்ணிக்கையை கொண்டு தெரிந்து கொள்ள முடியும்.
பால் பண்ணை தொழில் லாபகரமாக அமைவது என்பது மாடுகளின் இனத்தேர்வு, வயது, தீவனம், குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட பல அம்சங்களை பொறுத்து அமைகிறது. இருந்தாலும் இளம் வயதுள்ள மாடுகள் அதிக பால் உற்பத்தியை தருவதால் பண்ணை வளர்ப்புக்கு இரண்டாவது ஈற்றில் உள்ள இளம் வயதுடைய, நல்ல உற்பத்தி திறனுடைய தரமான கறவை மாடுகளை தேர்வு செய்ய வேண்டும்.
சில நேரங்களில் மாடுகளை விற்பவர்கள், குறிப்பிட்ட மாடு ஒரு ஈற்று தான் ஈன்றிருப்பதாக சொல்வார். ஆனால், அந்த மாடானது வழக்கமாக ஒரு ஈற்று ஈன்ற மாடுகளை போல் அல்லாமல் வயதானதாக இருக்கும். இதற்கு காரணம், அந்த மாடுகள் பராமரிப்பு குறைபாடே. இந்த மாடுகள் நீண்ட நாட்கள் கருத்தரிக்காமல் இருந்திருந்து வயது அதிகமான நிலையில் ஒரு கன்றை ஈன்றிருக்கும்.
இவ்வாறு வயது அதிகமான மாடுகளை ஒரு ஈற்று தான் ஈன்றிருக்கிறது என்ற காரணத்தை மட்டும் நம்பி வாங்குவது நட்டத்தை தான் தரும்.
எனவே, மாடுகளை வாங்கும் போது அதன் ஈற்று எண்ணிக்கையை கணக்கில் கொள்ளாமல், அவற்றின் பற்களை வைத்து வயதை கணக்கிட்டு அதன் பிறகே வாங்க வேண்டும்.
மாடு வளர்க்க எண்ணுவோர் மாடுகளின் பற்களை கொண்டு வயதை கணக்கிடும் முறையை தெரிந்து கொள்ள வேண்டும்.
மாடுகளின் வயதை பற்கள் முளைத்தல், பற்களில் ஏற்படும் மாற்றம் மற்றும் கொம்புகளில் ஏற்படும் வளையங்களை வைத்து தோராயமாக நிர்ணயித்து விடலாம்.
மாடுகளின் பற்களில் தற்காலிக பற்கள் மற்றும் நிரந்தரமான பற்கள் என்று இரண்டு வகை உண்டு. மாடுகளின் பற்களில் முன் வெட்டு பற்கள், முன் கடைவாய் பற்கள் மற்றும் தாடை வாய் பற்கள் என்று மூன்று வகை உண்டு.
மாடுகளுக்கு கோரைப் பற்கள் கிடையாது. மேல் தாடையில் முன் வெட்டு பற்களுக்கு பதிலாக வெறும் ஈறு மட்டுமே காணப்படும்.
மாடுகளில் தற்காலிக பால் பற்களாக கீழ்த்தாடையில் 4 ஜோடி முன் வெட்டு பற்கள், 3 ஜோடி முன் கடைவாய் பற்கள் சேர்ந்து மொத்தம் 14 பற்களும், மேல் தாடையில் 3 ஜோடி முன் கடைவாய் பற்கள் மட்டும் கொண்டு 6 பற்களும் இருக்கும். அதாவது, மாடுகளில் மொத்தம் 20 தற்காலிக பற்களும் இருக்கின்றன.
மேலும், நிரந்தர பற்களாக கீழ்த்தாடையில் 4 ஜோடி முன் வெட்டு பற்கள், 3 ஜோடி முன் கடைவாய் பற்கள் மற்றும் 3 ஜோடி கடைவாய் பற்களும் சேர்ந்து 20 பற்கள் இருக்கின்றன. முன் கடைவாய் பற்களும், கடைவாய் பற்களும், கீழ்த்தாடையில் உள்ளவை போலவே அமைந்து மேல் தாடையில் 12 பற்கள் இருக்கின்றன.
ஆக மொத்தம் மாடுகளில் 32 நிரந்தர பற்கள் இருக்கின்றன.
• மாடுகளில் மேற்கண்டவாறு எண்ணிக்கையில் பற்கள் இருந்தாலும், அவற்றின் கீழ்த்தாடையில் உள்ள 4 ஜோடி முன் வெட்டு பற்களை வைத்து தான் அதன் வயது நிர்ணயிக்கப்படுகிறது. மாடுகளின் வயதை கண்டுபிடிக்க, அவற்றின் கீழ்த்தாடையின் உதடுகளை சிறிது விலக்கினால் கீழ்த்தாடை பற்கள் தெளிவாக தெரியும். இந்த பற்களின் எண்ணிக்கையை கொண்டு வயதை நிர்ணயிக்கலாம்.
• பொதுவாக, கன்று பிறந்தவுடன் கீழ்த்தாடையின் மையத்தில் இரண்டு பற்கள் காணப்படும். பின்பு இரண்டு வார வயதில் அவற்றை அடுத்து பக்கத்திற்கு ஒன்றாக பல் முளைக்கும்.
மூன்றாவது வார வயதில் அவற்றை அடுத்தாற் போல் இரண்டு பக்கங்களிலும் ஒவ்வொரு பல் தோன்றும். 4-வது வார முடிவில், அதாவது ஒரு மாதத்தில் மொத்தம் 8 பற்கள் கீழ்த்தாடையில் இருக்கும். இந்த பற்கள் தற்காலிக பால் பற்களாகும்.
• மாடுகளின் வயதை நிர்ணயிக்க பயன்படும் இந்த தற்காலிக கீழ்த்தாடை பால் பற்கள், வெண்மை நிறத்துடன், ஆடும் தன்மை கொண்டதாக இருக்கும்
இவை விழுந்த பின் புதிதாக நிரந்தர பற்கள் முளைக்கும். ஒரு ஆண்டு வயதில் கீழ்த்தாடையில் உள்ள தற்காலிக முன் வெட்டும் பற்களில் அதிக தேய்மானம் காணப்படும்.
தற்காலிகள் பால் பற்கள் இரண்டு வயதில் விழுந்து நிரந்தர பற்கள் முளைக்க தொடங்கும். கீழ்த்தாடையில் உள்ள ஒவ்வொரு ஜோடி நிரந்தர முன் வெட்டு பற்கள் புதிதாக தோன்றுவது ஒரு குறிப்பிட்ட வயதில் தான் நடைபெறும்.
• இந்த பல் முளைக்கும் செயலானது, கிடேரிக்கு கிடேரி மாறுபடாது. ஆனால், ஒவ்வொரு ஜோடி புது நிரந்தர பற்களும் முளைப்பதில் சில மாதங்கள் வித்தியாசம் இருக்கலாம்.
ஆகவே, ஒரு மாட்டின் வயதை சில மாதங்கள் முன்பின் வித்தியாசத்தில் கூற முடியும். பொதுவாக, இந்த பற்களை கொண்டு கணிக்கும் போது 6 மாதங்கள் வரை முன்பின் ஆக வயது வித்தியாசம் மாறுபடலாம்.
நிரந்தர பற்கள் அளவில பெரியதாக நிலையான தன்மை உடையதாக செவ்வக வடிவில் மஞ்சளாக வைக்கோல் நிறத்தில் காணப்படும்.
• தற்காலிக பால் பற்கள் விழும்போது ஜோடி ஜோடியாக ஆறு மாத இடைவெளியில் விழுந்து நிரந்தர பற்கள் முளைக்கும். மாடுகளில் நிரந்தர முன் வெட்டு பற்கள் 2,4,6,8 என்று இருந்தால் அவற்றின் வயது முறையே இரண்டு, இரண்டரை, மூன்று மற்றும் மூன்றரை வயதிற்கு மேல் என்று நிர்ணயிக்கலாம்.
மொத்த நிரந்தர பற்களும் முளைத்து விட்ட மாடுகளில் பற்களின் தேய்வை கொண்டு வயது ஓரளவு தீர்மானிக்கப்படுகிறது. ஆறு ஆண்டு வயதில் நடுவில் உள்ள முதல் ஜோடி நிரந்தர பற்கள் முன்பற்கள் தேய்ந்து மற்ற முன் வெட்டு பற்களை விட குறைவான உயரத்துடன் காணப்படும். மேலும், இடைவெளியுடன் காணப்படும்.
• இது போன்று ஒவ்வொரு ஜோடியாக தேய்ந்து கொண்டு போகும் நிலையில் 10 வயது ஆகும் போது அனைத்து பற்களுமே தேய்ந்த நிலையில் காணப்படும்.
மாடுகளில் 12 ஆண்டு வயதானவற்றை வயதில் முதிர்ச்சி அடைந்தவை என்று பொதுவாக குறிப்பிடுகிறோம். மாடுகள் வயதாகி விட்டால் ஒரு சில பற்கள் அல்லது மொத்த பற்களும் உதிர்ந்து விடும்.

• பொதுவாக, 3 வயதில் கொம்பின் அடிப்பாகத்தில் வட்டமாக கொம்பை சுற்றி ஒரு வளையம் தோன்றும். பின்னர் ஆண்டிற்கு ஒரு வளையம் வீதம் தோன்றும்.
கொம்புகளை சீவி விட்டால் வயதை கணக்கிடுவது கடினம். எனவே, மாடுகளின் வயதை பற்களை கொண்டு துல்லியமாக கணக்கிடலாம்.