Thursday 16 May 2019

பயிருக்குதேவைப்படும் சத்துக்கள், சத்துக்களை கொடுக்கக்கூடிய தாவரங்கள்

பயிர்களின் வளர்ச்சிக்கு 16 வகையான ஊட்டசத்துக்கள் தேவைப்படும் .
பயிர் வளர்ச்சிக்கு அதிகமாக தேவைப்படும் சத்துக்கள்
பேரூட்டச்சத்துக்கள் எனப்படும்.
பயிர் வளர்ச்சிக்கு குறைவாக தேவைப்படும் சத்துக்கள்
நுண்ணூட்டச்சத்துக்கள் எனப்படும்.
பேரூட்டச்சத்துக்கள்
தழைச்சத்து, மணிச்சத்து,. சாம்பல்சத்து, சுண்ணாம்புச்சத்து, கந்தகசத்து, மெக்னீசியம்சத்து முதலியன அதிகளவில் தேவைப்படும் எனவே இவை பேரூட்டச்சத்துக்கள் எனப்படும்.
நுண்ணூட்டச்சத்து
இரும்புச்சத்து, துத்தநாக சத்து, மாங்கனீசு சத்து, மாலிப்டின சத்து. தாமிர சத்து, போரான் சத்து, பயிர்களுக்கு குறைந்த அளவே தேவைப்படுவதால் இவை நுண்ணூட்டச்சத்து எனப்படும்
.
குளோரின் சத்து, சோடியம் சத்து, அலுமிசியம் சத்து, சிலிகான்சத்து. பயிர் வளர்ச்சிக்கு மிக மிகச் குறைந்த அளவே தேவைப்படும் இவை பயிர் விளைவிக்கும் சத்துக்கள் எனப்படும்
தாவரம் - தாவரத்தில் உள்ள சத்துக்கள், பயன்கள்
ஆவாரம் இலை
சத்து : மணிச்சத்து
பயன் : மணி பிடிக்க உதவும்
முருங்கை இலை, கருவேப்பிலையில்
சத்து : இரும்புச்சத்து உள்ளது
பயன் : பூக்கள் நிறைய பிடிக்கும்
எருக்கம் இலை
சத்து : போரான் சத்து உள்ளது-
பயன் : காய், பூ, அதிகம் பிடிக்கும்
காய், கோணலாகமல் இருக்கும்
புளியந்தலை
சத்து : துத்தநாக சத்து
பயன் : செடியில் உள்ள இலைகள் சிறியதாக இல்லாமல் ஒரே சீராக இருக்கும்.
பயிரின் வளர்ச்சி அதிகரிக்கும்
செம்பருத்தி, அவரை இலை
சத்து : தாமிர சத்து,
பயன் : தண்டுப்பகுதி மெலிந்து காணப்படாது
கொளுஞ்சி, தக்கபூண்டு
சத்து : தழைச்சத்து
பயன் : பயிர் செழித்து காணப்படும்
துத்தி இலை
சத்து : சுண்ணாம்புச் சத்து( கால்சியம் கார்பனேட்)
பயன் : சத்துக்களை பயிரின் பாகங்களுக்கு பிரித்துக் கொடுக்கும்.
எள்ளுசெடி
சத்து : கந்தகம்( சல்பர்)
பயன் : செடி வளர்ச்சி அதிகரிக்கும்-
தண்டு மெலிந்து இருக்காது மஞ்சள் கலராக மாறாது
வெண்டை இலை
சத்து : அயோடின்(சோடியம்)
பயன் : மகரந்தம் அதிகரிக்கும்
மூங்கில் இலை
சத்து : சிலிக்கா
பயன் : பயிர் நேராக இருக்கும்
பசலைக்கீலை
சத்து : மெக்னீசியம்
பயன் : இலை ஓரம் சிவப்பாக மாறாது
அனைத்து பூக்களிலும்
சத்து : மாலிப்டினம்
பயன் : பூக்கள் உதிராது
நொச்சி : பூச்சிகளை விரட்டும்
வேம்பு : :புழுக்கள் வராமல் பாதுகாக்கும்
வளர்ச்சி ஊக்கியாக தயாரிக்கும் முறை
அனைத்து தழைகள் ஒவ்வொன்றிலும்; அரைக்கிலோ வீதம் எடுத்துக் கொள்ள வேண்டும்
அவற்றுடன் கோமியம் அரை லிட்டர்
நாட்டு சர்க்கரை அரைக்கிலோ
சோற்றுக் கற்றாலை மடல் 1
தயிர் அரை லிட்டர்
செய்முறை
மேலே உள்ள ஒவ்வொரு தழைகளிலும் அரைக்கிலோ, பூ வில் மட்டும் 100 கிராம் அளவு எடுத்து நன்றாக இடித்து மண்பானையில் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும்.
அவற்றுடன் அரைக்கிலோ நாட்டுச் சர்க்கரையையும், அரைலிட்டர் கோமியத்தையும் சேர்க்கவேண்டும்
.
அதன்பிறகு ஒரு சோற்றுக்கற்றாலை மடலில் உள்ள தோலை நீக்கி விட்டு சதை பகுதியை எடுத்து மிக்சியில் போட்டு அடித்து அவற்றையும் ஒன்றாக கலக்கி ஒரு வாரம் வரை வைத்திருக்க வேண்டும் .
ஒரு வாரம் கழித்து எடுத்து வடிகட்டி 10 லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்கலாம்
தெளிக்கும் பொழுது ஒரு டேங்க்குக்கு ஒரு எலும்பிச்சம் பழம் சாறு எடுத்து கலந்து தெளிக்கலாம்

Sunday 12 May 2019

#மாடுகளின்_வயதை_கண்டறியும்_பற்கள்

பால் பண்ணை தொழில் லாபகரமாக அமைய இளம் வயதுள்ள மாடுகளை தேர்வு செய்வது முக்கியமானது. மாடுகளின் வயதை அவற்றின் பற்களின் எண்ணிக்கையை கொண்டு தெரிந்து கொள்ள முடியும்.
பால் பண்ணை தொழில் லாபகரமாக அமைவது என்பது மாடுகளின் இனத்தேர்வு, வயது, தீவனம், குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட பல அம்சங்களை பொறுத்து அமைகிறது. இருந்தாலும் இளம் வயதுள்ள மாடுகள் அதிக பால் உற்பத்தியை தருவதால் பண்ணை வளர்ப்புக்கு இரண்டாவது ஈற்றில் உள்ள இளம் வயதுடைய, நல்ல உற்பத்தி திறனுடைய தரமான கறவை மாடுகளை தேர்வு செய்ய வேண்டும்.
சில நேரங்களில் மாடுகளை விற்பவர்கள், குறிப்பிட்ட மாடு ஒரு ஈற்று தான் ஈன்றிருப்பதாக சொல்வார். ஆனால், அந்த மாடானது வழக்கமாக ஒரு ஈற்று ஈன்ற மாடுகளை போல் அல்லாமல் வயதானதாக இருக்கும். இதற்கு காரணம், அந்த மாடுகள் பராமரிப்பு குறைபாடே. இந்த மாடுகள் நீண்ட நாட்கள் கருத்தரிக்காமல் இருந்திருந்து வயது அதிகமான நிலையில் ஒரு கன்றை ஈன்றிருக்கும்.
இவ்வாறு வயது அதிகமான மாடுகளை ஒரு ஈற்று தான் ஈன்றிருக்கிறது என்ற காரணத்தை மட்டும் நம்பி வாங்குவது நட்டத்தை தான் தரும்.
எனவே, மாடுகளை வாங்கும் போது அதன் ஈற்று எண்ணிக்கையை கணக்கில் கொள்ளாமல், அவற்றின் பற்களை வைத்து வயதை கணக்கிட்டு அதன் பிறகே வாங்க வேண்டும்.
மாடு வளர்க்க எண்ணுவோர் மாடுகளின் பற்களை கொண்டு வயதை கணக்கிடும் முறையை தெரிந்து கொள்ள வேண்டும்.
மாடுகளின் வயதை பற்கள் முளைத்தல், பற்களில் ஏற்படும் மாற்றம் மற்றும் கொம்புகளில் ஏற்படும் வளையங்களை வைத்து தோராயமாக நிர்ணயித்து விடலாம்.
மாடுகளின் பற்களில் தற்காலிக பற்கள் மற்றும் நிரந்தரமான பற்கள் என்று இரண்டு வகை உண்டு. மாடுகளின் பற்களில் முன் வெட்டு பற்கள், முன் கடைவாய் பற்கள் மற்றும் தாடை வாய் பற்கள் என்று மூன்று வகை உண்டு.
மாடுகளுக்கு கோரைப் பற்கள் கிடையாது. மேல் தாடையில் முன் வெட்டு பற்களுக்கு பதிலாக வெறும் ஈறு மட்டுமே காணப்படும்.
மாடுகளில் தற்காலிக பால் பற்களாக கீழ்த்தாடையில் 4 ஜோடி முன் வெட்டு பற்கள், 3 ஜோடி முன் கடைவாய் பற்கள் சேர்ந்து மொத்தம் 14 பற்களும், மேல் தாடையில் 3 ஜோடி முன் கடைவாய் பற்கள் மட்டும் கொண்டு 6 பற்களும் இருக்கும். அதாவது, மாடுகளில் மொத்தம் 20 தற்காலிக பற்களும் இருக்கின்றன.
மேலும், நிரந்தர பற்களாக கீழ்த்தாடையில் 4 ஜோடி முன் வெட்டு பற்கள், 3 ஜோடி முன் கடைவாய் பற்கள் மற்றும் 3 ஜோடி கடைவாய் பற்களும் சேர்ந்து 20 பற்கள் இருக்கின்றன. முன் கடைவாய் பற்களும், கடைவாய் பற்களும், கீழ்த்தாடையில் உள்ளவை போலவே அமைந்து மேல் தாடையில் 12 பற்கள் இருக்கின்றன.
ஆக மொத்தம் மாடுகளில் 32 நிரந்தர பற்கள் இருக்கின்றன.
• மாடுகளில் மேற்கண்டவாறு எண்ணிக்கையில் பற்கள் இருந்தாலும், அவற்றின் கீழ்த்தாடையில் உள்ள 4 ஜோடி முன் வெட்டு பற்களை வைத்து தான் அதன் வயது நிர்ணயிக்கப்படுகிறது. மாடுகளின் வயதை கண்டுபிடிக்க, அவற்றின் கீழ்த்தாடையின் உதடுகளை சிறிது விலக்கினால் கீழ்த்தாடை பற்கள் தெளிவாக தெரியும். இந்த பற்களின் எண்ணிக்கையை கொண்டு வயதை நிர்ணயிக்கலாம்.
• பொதுவாக, கன்று பிறந்தவுடன் கீழ்த்தாடையின் மையத்தில் இரண்டு பற்கள் காணப்படும். பின்பு இரண்டு வார வயதில் அவற்றை அடுத்து பக்கத்திற்கு ஒன்றாக பல் முளைக்கும்.
மூன்றாவது வார வயதில் அவற்றை அடுத்தாற் போல் இரண்டு பக்கங்களிலும் ஒவ்வொரு பல் தோன்றும். 4-வது வார முடிவில், அதாவது ஒரு மாதத்தில் மொத்தம் 8 பற்கள் கீழ்த்தாடையில் இருக்கும். இந்த பற்கள் தற்காலிக பால் பற்களாகும்.
• மாடுகளின் வயதை நிர்ணயிக்க பயன்படும் இந்த தற்காலிக கீழ்த்தாடை பால் பற்கள், வெண்மை நிறத்துடன், ஆடும் தன்மை கொண்டதாக இருக்கும்
இவை விழுந்த பின் புதிதாக நிரந்தர பற்கள் முளைக்கும். ஒரு ஆண்டு வயதில் கீழ்த்தாடையில் உள்ள தற்காலிக முன் வெட்டும் பற்களில் அதிக தேய்மானம் காணப்படும்.
தற்காலிகள் பால் பற்கள் இரண்டு வயதில் விழுந்து நிரந்தர பற்கள் முளைக்க தொடங்கும். கீழ்த்தாடையில் உள்ள ஒவ்வொரு ஜோடி நிரந்தர முன் வெட்டு பற்கள் புதிதாக தோன்றுவது ஒரு குறிப்பிட்ட வயதில் தான் நடைபெறும்.
• இந்த பல் முளைக்கும் செயலானது, கிடேரிக்கு கிடேரி மாறுபடாது. ஆனால், ஒவ்வொரு ஜோடி புது நிரந்தர பற்களும் முளைப்பதில் சில மாதங்கள் வித்தியாசம் இருக்கலாம்.
ஆகவே, ஒரு மாட்டின் வயதை சில மாதங்கள் முன்பின் வித்தியாசத்தில் கூற முடியும். பொதுவாக, இந்த பற்களை கொண்டு கணிக்கும் போது 6 மாதங்கள் வரை முன்பின் ஆக வயது வித்தியாசம் மாறுபடலாம்.
நிரந்தர பற்கள் அளவில பெரியதாக நிலையான தன்மை உடையதாக செவ்வக வடிவில் மஞ்சளாக வைக்கோல் நிறத்தில் காணப்படும்.
• தற்காலிக பால் பற்கள் விழும்போது ஜோடி ஜோடியாக ஆறு மாத இடைவெளியில் விழுந்து நிரந்தர பற்கள் முளைக்கும். மாடுகளில் நிரந்தர முன் வெட்டு பற்கள் 2,4,6,8 என்று இருந்தால் அவற்றின் வயது முறையே இரண்டு, இரண்டரை, மூன்று மற்றும் மூன்றரை வயதிற்கு மேல் என்று நிர்ணயிக்கலாம்.
மொத்த நிரந்தர பற்களும் முளைத்து விட்ட மாடுகளில் பற்களின் தேய்வை கொண்டு வயது ஓரளவு தீர்மானிக்கப்படுகிறது. ஆறு ஆண்டு வயதில் நடுவில் உள்ள முதல் ஜோடி நிரந்தர பற்கள் முன்பற்கள் தேய்ந்து மற்ற முன் வெட்டு பற்களை விட குறைவான உயரத்துடன் காணப்படும். மேலும், இடைவெளியுடன் காணப்படும்.
• இது போன்று ஒவ்வொரு ஜோடியாக தேய்ந்து கொண்டு போகும் நிலையில் 10 வயது ஆகும் போது அனைத்து பற்களுமே தேய்ந்த நிலையில் காணப்படும்.
மாடுகளில் 12 ஆண்டு வயதானவற்றை வயதில் முதிர்ச்சி அடைந்தவை என்று பொதுவாக குறிப்பிடுகிறோம். மாடுகள் வயதாகி விட்டால் ஒரு சில பற்கள் அல்லது மொத்த பற்களும் உதிர்ந்து விடும்.

• பொதுவாக, 3 வயதில் கொம்பின் அடிப்பாகத்தில் வட்டமாக கொம்பை சுற்றி ஒரு வளையம் தோன்றும். பின்னர் ஆண்டிற்கு ஒரு வளையம் வீதம் தோன்றும்.
கொம்புகளை சீவி விட்டால் வயதை கணக்கிடுவது கடினம். எனவே, மாடுகளின் வயதை பற்களை கொண்டு துல்லியமாக கணக்கிடலாம்.

Wednesday 3 April 2019

#சின்ன_சின்ன_விவசாய_அறிவுரை_களம்

தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று முறை (அடர்த்தியாக)#சோளம்_விதைத்தால்_கோரைவருவதில்லை.
#சோளம் விதைத்த பூமியில் #மஞ்சள் நடவு செய்து பாருங்க மகசூல் அதிகம் இருக்கும்
#கம்பு விதைத்த பூமியில் #வாழை_நடவு செய்து பாருங்க வாழை மகசூல் அதிகம் இருக்கிறது
#கம்புபோட்ட_வயலில்_கடலையும் ,கடலலைபோட்ட வயலில் கம்பும் ,பயிரிட்டால் விளைச்சல் அதிகமாக இருக்கும்.
#தலைசத்தை பயிருக்கு இழுத்துகொடுக்க பலதானியம், #கொழுஞ்சி_விதைப்பு
#பார்த்தீனியா_விஷசெடியை_அழிக்க நாம் சாப்பாட்டுக்கு பயன்படுத்தும் #கல்உப்பு
#ஏழு_அடி ஆழத்தில் மண்ணில் இருக்கும் #சத்துக்களைமேலே எடுத்து கொண்டுவர மண்புழு
பூமியை காற்றோட்டத்தை உருவாக்க கரையான், எலி
நாட்டுக் கோழி முட்டைய பாதுகாத்து வைக்க சுலபமான வழி இருக்கு.
மண் பானையில பாதி அளவுக்கு அடுப்புச் சாம்பல் போட்டு நிரப்புங்க. அதுக்குள்ள கோழி முட்டைகளை அடுக்கி வைங்க. இப்படி செஞ்சா ஒருமாசம் வரைக்கும் கூட முட்டை கெட்டுப் போகாம இருக்கும்.
மா, கொய்யா, சப்போட்டா பழத் தோட்டங்கள்ல அணிளோட நடமாட்டம் அதிகமாக இருக்கும். அணில்கள விரட்ட ஒரு யோசனை சொல்றேன் கேட்டுக்குங்க. ஒரு கைப்பிடி பூண்டு எடுத்து அரைச்சுக்குங்க. அதை நாலு லிட்டர் தண்ணியில கலந்து பழ மரத்து மேல தெளிங்க. பூண்டு வாசனையை கண்ட அணில்கள் தலைத்தெறிக்க ஓடிபோயிடும். பழத் தோட்டமும் பாதிப்பு இல்லாம இருக்கும்.
தென்ன மரம் அதிகம் காய் காய்க்க, ஒரு யுக்தியை செஞ்சிகிட்டு இருக்காங்க ஒரிசா மாநில விவசாயிங்க. அதாவது தென்னம் பாளையில ஒரு செங்கல்லைக் கட்டித் தொங்க விடறாங்க. இதனால பாளையில இருக்குற குரும்பைகள் கொட்டாம குலை குலையா தேங்காய் காய்க்குதாம்.
அவரையில் இருக்கும் பெரிய பிரச்னையே, காய் துளைப்பான் நோய் தான். இதை கட்டுப்படுத்த, வேப்ப எண்ணெயை தெளிக்க வேண்டும். வாரத்திற்கு ஒரு மணி நேரம் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்
வாகை மரம் வறட்சி தாங்கி வளரக்கூடியது.
கொழிஞ்சியை பிடுங்கி காய்காத தென்னை மரத்தில் பாளைகளுக்கு இடையில் வைத்தால் காய் நன்றாக பிடிக்கும்
நெல்லுக்குள் நண்டு ஓட பயிர் இடைவெளி இருக்க வேண்டும்
வாழைகுள் வண்டி ஓட பயிர் இடைவெளி இருக்க வேண்டும்
தென்னைக்கு தேரோட பயிர் இடைவெளி இருக்க வேண்டும்
மாட்டு உரம் மறுதாம்புக்கு , ஆட்டு உரம் அன்னைக்கே பயன்படும்
பலாப்பழத்தின் காம்புக்கு அருகில் உள்ள சிறு முட்களை எண்ணி ஆறாலே பெருக்கி ஐந்தால் வகுக்க பலாப்பழத்தினுள் உள்ள சுளைகளின் எண்ணிக்கையை அறியலாம் !
தாமரை இலையை கரையான் அரிப்பதில்லை
தொழுஉரத்தை நீர் பாய்ச்சும்முன் போட்டு பிறகு பக்குவமான ஈரத்தில் உழவு செய்தால் கட்டிகள் குறையும்.
எப்போதெல்லாம் தேன் குறைவாக விளைச்சல் உள்ளதோ அப்போதெல்லாம் விவசாயம் பொய்த்து போய் விடும்

Saturday 9 February 2019

*பூச்சிகளையும் நோய்களையும் கட்டுப்படுத்துவதற்கான இடுபொருட்கள்*


*நீம் அஸ்திரம் (வேம்பு அஸ்திரம்)*
200 லிட்டர் தண்ணீர்
10 லிட்டர் நாட்டு மாட்டு கோமியம்
2 கிலோ மாட்டு சாணம்
10 கிலோ வேப்பிலை (நறுக்கியது)
ஒரு பாத்திரத்தில் மேற்கண்ட பொருட்களை ஒன்றாகச் சேர்த்து வலஞ்சுழியாக மரக்குச்சியால் நன்றா கலக்கி கோணிப் பையால் மூடிவைக்கவும், 48 மணி நேரத்திற்கு அப்படியே வைத்திடுங்கள் சூரிய ஒளியும், மழை நீரும் படுவதை தவிர்க்கவும், தினமும் காலை மாலை ஒரு நிமிடம் கலக்கிவிடவும் 48 மணி நேரத்திற்கு பிறகு நீம் அஸ்திரம் பயன்படுத்த தயாராகிவிடும். துணியால் நன்கு வடிகட்டி நிழலில் வைக்கவும். இதை 6 மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.
பயன்கள்
நீமாஸ்திரம் சாறு உறிஞ்சும் பூச்சிகள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் இலை தத்துப்பூச்சி, அஸ்வினி, வெள்ளை ஈ போன்றவற்றை கட்டுப்படுத்தும். இதன் மூலம் பூச்சிகள் கொல்லப்படுவதில்லை பூச்சிகள் வேம்பு வாசனையை நுகர்ந்தவுடன் செடியில் இருந்து விலகிச் சென்றுவிடுகிறது, இது பூச்சிக்கொல்லி அல்ல இது பூச்சி விரட்டியாகும்.
பயன்படுத்தும் முறை - 200 லிட்டர் நீமாஸ்திரம் ஏக்கருக்கு அப்படியே தெளிக்க வேண்டும். இதை தண்ணீருடன் கலக்கக்கூடாது.
நீமாஸ்திரம் சிறு புழுக்களை கட்டுப்படுத்தும் ஆனால் பெரிய புழுக்களை கட்டுப்படுத்தாது. பெரிய புழுக்களையும் சாறு உறிஞ்சும் பூச்சிகளையும் கட்டுப்படுத் மற்றொரு மருந்து உள்ளது அது பிரம்மாஸ்திரம் ஆகும்.
*பிரம்மாஸ்திரம்*
20 லிட்டர் நாட்டு பசு மூத்திரம்
2 கிலோ வேம்பு இலை விழுது
2 கிலோ புங்கன் இலை விழுது.
2 கிலோ சீதாப்பழம் விழுது
2 கிலோ ஆமணக்கு விழுது
2 கிலோ ஊமத்தை விழுது
ஒரு பாத்திரத்தில் கோமியத்துடன் இவற்றை கலந்து நன்றாக வலஞ்சுழியாகக் கலக்குங்கள் மிக்சர் கிரைண்டர் பயன்படுத்த வேண்டாம், அம்மிக்கல், ஆட்டுக்கல் பயன்படுத்தவும், தட்டால் மூடி மெல்லிய வெப்பத்தில் கொதிக்க வைக்கவும் ஒரு கொதி வந்ததும் இறக்கி வைத்து 48 மணிநேரம் அப்படியே குளிர விடுங்கள், காலையும் மாலையும் ஒருநிமிடத்திற்கு வலச்சுழியாக கலக்குங்கள் 48 மணி நேரத்திற்கு பின்பு துணியால் வடிகட்டி சேமித்து வைத்திடுங்கள்.
6 மாதகங்கள் வரை இதை பயன்படுத்தலாம். பிரம்மாஸ்திரம் சாறு உறிஞ்சும் பூச்சிகள் மற்றும் புழுக்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தும், 100 லிட்டர் தண்ணிருடன் 3 லிட்டர் பிரம்மாஸ்திரம் கலக்கி பயன்படுத்த வேண்டும். இதே விகிதத்தில் பயன்படுத்தலாம்.
பிரம்மாஸ்திரம் பயன்படுத்தி ஒளிந்திருக்கும் காய்புழு, தண்டுப்புழு போன்றவற்றை கட்டுப்படுத்த முடியாது, இதற்காக மற்றொரு கரைசல் உள்ளது அது அக்னி அஸ்திரம்
*அக்னி அஸ்திரம்*
20 லிட்டர் கோமியம்
2 கிலோ வேப்பிலை அரைத்த விழுது
500 கிராம் புகையிலைத்தூள்
500 கிராம் மிளகாய் காரமான விழுது
250 கிராம் நாட்டு பூண்டு விழுது
ஒரு பாத்திரத்தில் கோமியத்துடன் மேற்கண்டவற்றை சேர்த்து நன்கு வலஞ்சுழியாக கலக்கவும். அதனை தட்டால் மூடி மிதமான நெருப்பில் ஒரு கொதி வரும்வரை கொதிக்கவிடவும் அதன்பின் 48 மணிநேரம் நிழலில் குளிரவைக்கவும். தினமும் காலையும் மலையும் ஒரு நிமடத்திற்கு வலஞ்சுழியாக கலக்கவும். 48 மணி நேரத்திற்குபின் துணியால் வடிகட்டி சேமித்து வைக்கவும். இது மிகச்சிறந்த வீரியமான பூச்சிவிரட்டியாகும். இதை 3 மாதம் சேமித்து வைத்துப் பயன்படுத்தலாம்.
இக்கரைசல் சாறு உறிஞ்சும் பூச்சி, புழுக்கள் அனைத்தையும் இது கட்டுப்படுத்தும். 100 லிட்டர் தண்ணிரீல் 3 லிட்டர் அக்னி அஸ்திரம் அல்லது 15 லிட்டர் தண்ணிரில் 500 மில்லி அக்னி அஸ்திரம் கலந்து பயன்படுத்தவவும்.
*பத்திலை கசாயம்*
200 லிட்டர் தண்ணீர்
20 லிட்டர் நாட்டுபசு மூத்திரம்
2 கிலோ புதிய பசுஞ்சாணம்சேர்த்து கலக்கவும்
500 கிராம் மஞ்சள் தூள்சேர்க்கவும்
500 கிராம் இஞ்சி விழுது
20 கிராம் பெருங்காயத்தூள்
அவற்றை குச்சியால் வலஞ்சுழியாக நன்கு கலக்கவும். அதை கோணிப்பையால் முடி இரவு முழுவதும் வைக்கவும்.
அடுத்த நாள் காலையில்
1 கிலோ புகையிலைத் தூள்
1 முதல் 2 கிலோ காரமான பச்சை மிளகாய் விழுது
500 கிராம் நாட்டுப் பூண்டு விழுது
போன்றவற்றை தயாரித்துள்ள கரைசலுடன் சேர்த்து நன்றாக கலக்கி சாக்குப் பையால் மூடி ஒரு இரவு அப்படியே வைக்கவும், அடுத்தநாள் காலையில் அதை நன்கு கலக்கி அதனுடன்
2 கிலோ நறுக்கிய வேம்பு இலைகள் அல்லது முழு வேப்பங்கொட்டைத் தூள்
2 கிலோ நறுக்கிய புங்கன் இலைகள்
2 கிலோ நறுக்கிய சீத்தாப்பழ இலைகள்
2 கிலோ நறுக்கிய ஆமணக்கு இலைகள்
2 கிலோ நறுக்கிய ஊமத்தை இலைகள்
2 கிலோ நறுக்கிய வில்வ இலைகள்
2 கிலோ நறுக்கிய துளசி இலைகள்
2 கிலோ நறுக்கிய துலுக்க சாமந்தி செடி முழுவதும்
2 கிலோ நறுக்கிய மா இலைகள்
2 கிலோ நறுக்கிய பப்பாளி இலைகள்
2 கிலோ நறுக்கிய இஞ்சி இலைகள்
2 கிலோ நறுக்கிய மஞ்சள் இலைகள்
2 கிலோ நறுக்கிய பாக்கு இலைகள்
2 கிலோ நறுக்கிய காப்பி இலைகள்
2 கிலோ நறுக்கிய மிளகுகொடி இலைகள்
2 கிலோ நறுக்கிய பட்டைஇலைகள்
2 கிலோ நறுக்கிய கொய்யா இலைகள்
2 கிலோ நறுக்கிய உண்ணிச் செடி இலைகள்
2 கிலோ தகரை இலைகள்
2 கிலோ இலந்தை இலைகள்
2 கிலோ நறுக்கிய செம்பருத்தி இலைகள்
2 கிலோ நறுக்கிய அரளி இலைகள்
2 கிலோ நறுக்கிய மருத இலைகள்
இவற்றில் முதல் 8 இலைகள் மிக முக்கியமானவை, மொத்தம் 10 இலைகள் எடுத்துக்கொள்ள வேண்டும். இலைகளை ஏற்கனவே கரைசல் தயாரித்துள்ள பாத்திரத்தில் மூழ்கும்படி போட்டு கோணிப்பையால் கட்டி வைக்கவும், காலை மாலை ஒரு நிமிடம் கலக்கிவிடவும், குறைந்தது 30 நாட்கள் முதல் 40 நாட்கள் வரை நிழலில் வைக்கவும்.
30 நாட்கள் கழித்து துணியால் வடிகட்டி நிழலில் சேமித்து வைக்கவும். இதை 6 மாதம் வரை பயன்படுத்தலாம், இது சாறு உறிஞ்சும் மற்றும் பிற பூச்சிகளை நன்கு கட்டுப்படுத்தும், 100 லிட்டர் தண்ணிரில் 3 லிட்டர் பத்திலைக் கசாயம் கலந்து பயன்படுத்தலாம் அல்லது 15 லிட்டர் தண்ணீரில் 500 மி.லி. பத்திலைக்கஷாயம் கலந்து பயன்படுத்தலாம்.
*வேம்பு பூச்சு*
50 லிட்டர் தண்ணிர்
20 லிட்டர் கோமியம்
20 கிலோ சாணம்
200 கிராம் மஞ்சள் தூள்
10 கிராம் பெருங்காயத் தூள்
10 கிலோ வேம்பு இலை விழுது
இவற்றை ஒன்றாகக் கலந்து 48 மணி நேரத்திற்கு அப்படியே நிழலில் வைக்கவும். தினமும் காலையும் மலையும் நன்கு கலக்கவும், தயாரான பிறகு பழமரங்களில் தண்டில் தடவவேண்டும். 6 மாதங்கள் வைத்திருந்து பயன்படுத்தலாம், எனினும் உடனே பயன்படுத்துவது சிறந்தது.
வருடத்திற்கு 4 முறை பழமரங்களின் தண்டின் மேல் பூச வேண்டும்.
1. மே கடைசி வாரம் / ஜீன் முதல் வாரம் (கிருத்திகை)
2. செப் கடைசி வாரம் / அக்டோபர் முதல் வாரம்
3. டிசம்பர் கடைசி வாரம் / ஜனவரி முதல் வாரம்
4. மார்ச் கடைசி வாரம் / ஏப்ரல் முதல் வாரம் (தமிழ் புத்தாண்டு)
வேம்பு பூச்சு பழமரத்தின் தண்டின் மீது தடவும் போது பூஞ்சைகள் மற்றும் பாக்டீரியாக்களின் தாக்குதலில் இருந்து காக்கிறது. இதனால் பட்டை வெடிப்பது தடுக்கப்படுகிறது, (கம்மோசிஸ்) பிசின் நோய் கட்டுப்படுத்தப் படுகிறது. வேப்பம் பூச்சு நோய்கள் மற்றும் பூச்சிகளில் இருந்து நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது.
*பூச்சி மருந்துகளை எப்போது தெளிக்க வேண்டும்?*
தினந்தோறும் பயிரைப் பார்த்து அதில் முட்டைகளைப் பார்த்த உடனே பூச்சிவிட்டி தெளிக்க வேண்டும். முட்டைகள் இல்லாவிட்டால் பூச்சி மருந்து தெளிக்க வேண்டாம்.
*பூஞ்சைகளை கட்டுப்படுத்த இயற்கை வழிமுறைகள்*
*அ) ஜீவாமிர்தம் தெளிப்பு*
100 லிட்டர் தண்ணிரில், 5 – 10 லிட்டர் ஜீவாமிர்தம் கலந்து தெளிக்கவும். ஜீவாமிர்தம் சிறந்த வளர்ச்சி ஊடகம் என்றாலும், அது சிறந்த பூஞ்சான கொல்லியும் ஆகும். சிறந்த கிருமி நாசினி, பாக்டீரியா, வைரஸ் போன்றவற்றை கட்டுப்படுத்தும், மேலும் வளர்ச்சிக்கான நொதிகளையும் கொடுக்கிறது, இதனால் இலைப்பரப்பு பெரிதாகிறது, ஜீவாமிர்தத் தெளிப்பு புறஊதாக் கதிர்களிடம் இருந்து தாவரத்தைக் காக்கிறது,
*ஆ) புளித்த மோர் கரைசல்*
8 முதல் 10 நாட்கள் ஆன புளித்த 2.5 லிட்டர் புளித்த மோரை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும். மோர் சிறந்த பூஞ்சைக் கொல்லி, பாக்டீரியா கொல்லி இதில் நொதிகள் மற்றும் ஆன்டிபயாடிக் உள்ளது.
*இ) சுக்கு அஸ்திரம்*
2 லிட்டர் தண்ணீரில் 200 கிராம் சுக்குத்தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும் கரைசலை தட்டால் மூடி மிதமான நெருப்பில் பாதியாகக் குறையும் வரை கொதிக்க விட்டு இறக்கி வைக்கவும்
மற்றொரு பெரிய பாத்திரத்தில் 2 லிட்டர் பசும்பால் எடுத்துக்கொண்டு மிதமான நெருப்பில் ஒரு கொதி வரும்வரை கொதிக்கவிட்டு இறக்கவும். குளிர்ந்த பின்னர் பால் ஏடை எடுத்துவிட்டு அதில் 200 லிட்டர் தண்ணீரையும் சுக்குத் தண்ணீரையும் சேர்த்து கலக்கவும் 2 மணிநேரம் கழித்து துணியால் வடிகட்டி தண்ணீர் சேர்க்காமல் அன்றே தெளித்திடுங்கள்.
*ஈ) சர்வரோக நிவாரணி*
200 லிட்டர் தண்ணீர்
15 முதல் 20 லிட்டர் வடிகட்டிய ஜீவாமிர்தம்
5 லிட்டர் புளித்த மோர்
சேர்த்து கலக்கி வடிகட்டி தெளிக்கவும்
*தெளிப்பு கால அட்டவணை*
மாதுளை மற்றும் திராட்சை போன்ற பயிர்களுக்கு அமாவாசை மற்றும் பொளர்ணமியில் பூச்சி விரட்டிகள் தெளிக்கவும். அஷ்டமி நாட்களில் ஜீவாமிர்தம் தெளிக்கவும்.
ஜீவாமிர்தம் இரண்டு முறை தெளிக்கும் போது சதுர்தசி, துவாதசி நாட்களில் தெளிக்கவும்.
நாம் சுபாஷ் பாலேக்கர் விவசாயம் முழுமையாக பின்பற்றினால் எந்த தெளிப்பும் தேவையில்லை